பவானி, காவிரி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு: நிவாரண முகாம்களில் 7,832 பேர் தஞ்சம்

ஈரோடு மாவட்டத்தில் காவிரி, பவானி ஆறுகளில் நீடித்து வரும் வெள்ளப்பெருக்கின் காரணமாக பாதிக்கப்பட்ட 7,832 பேர் 67 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 
பவானி ஆறு, காவிரி ஆறுகளின் உபரி நீரால் சூழப்பட்ட பவானி நகரம்.
பவானி ஆறு, காவிரி ஆறுகளின் உபரி நீரால் சூழப்பட்ட பவானி நகரம்.


ஈரோடு மாவட்டத்தில் காவிரி, பவானி ஆறுகளில் நீடித்து வரும் வெள்ளப்பெருக்கின் காரணமாக பாதிக்கப்பட்ட 7,832 பேர் 67 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 
ஈரோடு மாவட்டத்தில் பவானிசாகர் நீர்மட்டம் சனிக்கிழமை நிலவரப்படி 100.56 அடியாக இருந்தது. அணையின் அதிகபட்ச நீர்த்தேக்க உயரம் 105 அடி. அணைக்கு விநாடிக்கு 47,168 கன அடி நீர் வந்தது. அணையிலிருந்து ஆற்றில் 37,700 கன அடி நீர் திறந்துவிடப்பட்டது. வாய்க்காலில் இருந்து பாசனத்துக்காக 2,300 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர் இருப்பு 29.1 டிஎம்சி.
பவானிசாகர் அணையிலிருந்து 37 ஆயிரம் கன அடி நீரும், மேட்டூர் அணையிலிருந்து 1. 75 லட்சம் கன அடியும் நீர் வெளியேற்றப்பட்டு வருவதாலும், பவானி கூடுதுறையில் இவ்விரு ஆறுகளும் இணைவதன் காரணமாகவும் கொடுமுடி வரை 2 லட்சம் கன அடி நீர் செல்கிறது. இதனால், ஈரோடு, பவானி சோமசுந்தரபுரம், கொடுமுடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால், பொதுமக்கள் வீடுகளிலிருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டனர். 
பவானிசாகர் அணை நீரையும் சேர்த்து ஆற்றில் 2.2 லட்சம் கன அடி நீர் செல்லக்கூடிய வாய்ப்பு உள்ளது. 
ஈரோடு மாவட்டத்தில் காவிரிக் கரையோரம் உள்ள பவானி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 17 முகாம்களில் 2,067 பேரும், சத்தியமங்கலம் பகுதியில் உள்ள 29 முகாம்களில் 4,344 பேரும், கோபிசெட்டிபாளையம் பகுதியில் உள்ள 8 முகாம்களில் 692 பேரும், அந்தியூர் பகுதியில் உள்ள 5 முகாம்களில் 156 பேரும், கொடுமுடி பகுதியில் உள்ள 5 முகாம்களில் 407 பேரும், ஈரோடு பகுதியில் உள்ள 2 முகாம்களில் 126 பேரும், மொடக்குறிச்சி பகுதியில் உள்ள ஒரு முகாமில் 40 பேர் உள்பட மொத்தம் 67 முகாம்களில் 7,832 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஈரோடு அருகே கருங்கல்பாளையத்தில் வெள்ளம் சூழ்ந்த குடியிருப்புப் பகுதி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com