70 காவல் ஆய்வாளர்களுக்கு டி.எஸ்.பி.க்களாக பதவி உயர்வு

தமிழக காவல் துறையில் 70 ஆய்வாளர்கள், காவல் துணைக் கண்காணிப்பாளராக (டி.எஸ்.பி.) பதவி உயர்வு பெற்றனர்.


தமிழக காவல் துறையில் 70 ஆய்வாளர்கள், காவல் துணைக் கண்காணிப்பாளராக (டி.எஸ்.பி.) பதவி உயர்வு பெற்றனர்.
இது குறித்த விவரம்:
தமிழக காவல் துறையில் கடந்த 1996-ஆம் ஆண்டு சுமார் 450 இளைஞர்கள், காவல் உதவி ஆய்வாளர்களாகத் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் 10 ஆண்டுகள் அந்தப் பதவியில் பணிபுரிந்த பின்னர், காவல் ஆய்வாளர்களாகப் பதவி உயர்த்தப்பட்டனர். அதன் பின்னர் அடுத்த 10 ஆண்டுகளில் காவல் துணைக் கண்காணிப்பாளர்களாக பதவி உயர்த்தப்பட வேண்டும். ஆனால், காவல் துறையில் ஏற்பட்ட நிர்வாக சிக்கல், நீதிமன்றத்தில் தொடரப்பட்ட சில வழக்குகள் உள்ளிட்டவற்றாலும், தமிழக காவல்துறையில் போதுமான காவல் துணைக் கண்காணிப்பாளர் பணியிடங்கள் காலியாக இல்லாததாலும், இவர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது.
இதன் விளைவாக, கடந்த இரு ஆண்டுகளாக சீனியாரிட்டி அடிப்படையில் இவர்களுக்கு பகுதி, பகுதியாக காவல் துணைக் கண்காணிப்பாளர் பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. இரு ஆண்டுகளுக்கு முன்பு முதலில் 113 ஆய்வாளர்கள், காவல் துணைக் கண்காணிப்பாளர்களாக பதவி உயர்த்தப்பட்டனர். அதன் பின்னர் இரண்டாம் கட்டமாக 115 பேருக்கும், மூன்றாம் கட்டமாக 86 பேருக்கும் பதவி உயர்வு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது நான்காம் கட்டமாக 70 காவல் ஆய்வாளர்களுக்கு காவல் துணைக் கண்காணிப்பாளர் பதவி உயர்வு வழங்குமாறு தமிழக காவல்துறை டி.ஜி.பி., தே.க.ராஜேந்திரன், தமிழக அரசின் உள்துறைக்கு அண்மையில் பரிந்துரை செய்தார். அதைத் தொடர்ந்து, 70 ஆய்வாளர்களை காவல் துணைக் கண்காணிப்பாளர்களாக பதவி உயர்வு செய்து உள்துறை திங்கள்கிழமை அரசாணை வெளியிட்டது. இவர்கள் ஓரிரு நாள்களில் புதிய பணியிடங்களில் நியமிக்கப்படுவார்கள் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com