கேரளத்துக்கு உதவுவோம்; மனித நேயத்தை மலரச் செய்வோம்

இயற்கை சீற்றத்தால் சொல்லொணா துயரத்தில் தவிக்கும் கேரள மாநிலத்துக்கு, அனைத்து கருத்து வேறுபாடுகளையும் மறந்து மனிதநேயம் என்ற ஒற்றைப் புள்ளியை மையமாகக் கொண்டு
கேரளத்துக்கு உதவுவோம்; மனித நேயத்தை மலரச் செய்வோம்


இயற்கை சீற்றத்தால் சொல்லொணா துயரத்தில் தவிக்கும் கேரள மாநிலத்துக்கு, அனைத்து கருத்து வேறுபாடுகளையும் மறந்து மனிதநேயம் என்ற ஒற்றைப் புள்ளியை மையமாகக் கொண்டு தமிழகம் உதவிக் கரம் நீட்டி வருகிறது.

இயற்கையால் சேர்க்கவும் முடியும், பிரிக்கவும் முடியும் என்பதை இம்முறையும் கேரளத்தில் பெய்த மழை நிரூபித்திருக்கிறது. ஆம், அரை நூற்றாண்டு காலமாக முல்லைப் பெரியாறு அணைக்காக இரு மாநில அரசுகளும் ஒன்றுக்கொன்று மோதிக் கொண்டிருக்கின்றன. இதுதொடர்பான வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதுமட்டுமின்றி முல்லைப் பெரியாறு அணை பிரச்னை தீவிரமடையும் போதெல்லாம் இருமாநிலங்களில் உள்ள அரசியல் கட்சிகள், கடையடைப்பு போன்ற பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தின.

இவற்றையெல்லாம் கடந்து மனிதநேயம் என்ற ஒற்றைப் புள்ளியில் நம் அனைவரையும் மீண்டும் ஒன்று சேர்த்துள்ளது கடவுளின் தேசம்' என்று வர்ணிக்கப்படும் கேரளத்தில் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக கோரத் தாண்டவமாடிய மழையும், அதனால் ஏற்பட்ட பெரு வெள்ளமும். 

அந்த மாநிலத்தின் மொத்தமுள்ள 14 மாவட்டங்களில் 13 மாவட்டங்கள் மழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. கேரளத்தின் மொத்த மக்கள் தொகை 3.48 கோடியில், சுமார் 40 சதவீதம் பேர் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். 

சுமார் 8 லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 8 லட்சம் பேர் இடம் பெயர்ந்துள்ளனர். 26,000 வீடுகள் சேதமடைந்துள்ளன. 40,000 ஹெக்டேர் பயிர்கள் முற்றிலும் நாசமாகியுள்ளன. 134 பாலங்கள் இடிந்துள்ளன. 16,000 கி.மீ. சாலைகள் சேதமடைந்துள்ளன. ரூ. 21,000 கோடிக்கு மேல் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. ஏறத்தாழ 400 பேர் பலியாகியுள்ளதாக கேரள அரசு அறிவித்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் ராணுவம், கடற்படை, விமானப்படை, தேசிய பேரிடர் மீட்புப் படையினர் இரவு, பகல் பாராமல் ஈடுபட்டுள்ளனர். 

இணைத்த இயற்கை: கடந்த 2015-இல் பெய்த கன மழையால் சென்னை மாநகர், புறநகர்ப் பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. வீடுகள் இழந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அப்போது, பாதிக்கப்பட்ட மக்களுக்காக உலக அளவில் இருந்து ஏராளமானோர் உதவிக் கரம் நீட்டினர். அதில், கேரள மக்களும் குறிப்பிடத்தக்கவர்கள்.

மூன்று ஆண்டுகள் கழித்து நிலைமை மீண்டும் திரும்பி உள்ளது. இந்த முறை மழை வெள்ளத்தால் கேரள மக்கள் பெரும் துயரத்துக்கு ஆளாகி உள்ளனர். கேரள மக்களுக்கு மத்திய அரசு, மாநில அரசுகள், வெளிநாடுகள், தொழில் நிறுவனங்கள், அரசியல் கட்சிகள், தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள், நடிகர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் உதவி வருகின்றனர். இந்நிலையில், கேரள மக்களுக்கு தற்போதைய நிலையில் அத்தியாவசியமான தேவைகள் அதிகம் உள்ளன. 

என்ன தேவை? இதுகுறித்து கேரளத்தைச் சேர்ந்தவர் கூறுகையில், கேரளத்தின் மழை பாதிப்பு குறித்து 10 சதவீத செய்திகளே சமூக வலைதளங்களில் வருகின்றன. செங்கன்னூர் பகுதிதான் அதிக அளவில் சேதமடைந்துள்ளது. அங்குள்ள பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. செல்லிடப்பேசி தொடர்பு துண்டிக்கப்பட்டதால் வீடுகளில் சிக்கி உள்ளவர்களால் தொடர்பு கொள்ள முடியாத நிலை உள்ளது.

கன மழை காரணமாக மக்கள் வீடு, பொருள்களை இழந்து அகதிகள் போல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பல முகாம்களில் மழை நீர் புகுந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு வேட்டி, சட்டை, பனியன், நைட்டி, உள்ளாடைகள், குழந்தைகளுக்கான உடைகள், போர்வை, பாய், சோப், துண்டு, பற்பசை, பல் தேய்க்கும் பிரஷ், பிரெட், பிஸ்கட், கையுறைகள், தீப்பெட்டி, மெழுகுவர்த்தி ஆகியவை முக்கிய தேவையாக உள்ளன.

அரிசி, பருப்பு வகைகள், தண்ணீர் பாட்டில்கள், சமையல் எண்ணெய், உப்பு, டீத்தூள், சர்க்கரை, சாம்பார் தூள், மிளகாய்த் தூள், போன்ற மளிகைப் பொருள்களும் அதிக அளவில் தேவைப்படுகிறது.

சேறும், சகதியும்: இதுகுறித்து கேரள மாநிலம், சித்தூர் பகுதியைச் சேர்ந்த வரதராஜன் என்பவர் கூறுகையில், தற்போது, இயல்பு நிலை மெல்ல மெல்லத் திரும்பி வருகிறது. சில இடங்களில் பேருந்துகள் இயங்கின. பெட்ரோல் பங்குகள் முழுமையாகச் செயல்படவில்லை. நிலைமை சீரான பகுதிகளில் மின்சாரம், தொலைபேசி இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. சில பகுதிகளில் ஏடிஎம் மையங்கள் செயல்படுகின்றன. 

வீடுகளில் இருந்து தண்ணீர் தற்போது மெல்ல மெல்ல வடியத் தொடங்கியுள்ளது, வீடுகளுக்குள் 2 அடி உயரத்துக்கு சேறும், சகதியும் குவிந்து கிடக்கின்றன. வீட்டு உபயோகப் பொருள்கள் அனைத்தும் இனி பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. பல வீடுகளுக்குள் விஷ பாம்புகள் குடியேறியுள்ளன. விவசாயப் பயிர்களும், நிலங்களும் முற்றிலும் சேதமடைந்துள்ளன. இந்தப் பாதிப்பில் இருந்து கேரள மக்கள் மீள குறைந்தது இரண்டு ஆண்டுகள் ஆகும்' என்றார்.

கேரள மக்களுக்கு நிவாரணப் பொருட்களை சேகரித்து அளிக்கும் பணி அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தினமணி அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.

நிவாரணப் பொருட்களை கீழ்கண்ட முகவரியில் நேரடியாக வந்து அளிக்கலாம்.

முதல் முகவரி

எண் 52, அனைகர் அப்துல் ஷுகுர் அவென்யூ
இவிகே சம்பத் சாலை, வேப்பேரி,
பெரியமேடு, சென்னை - 600007.

இரண்டாவது முகவரி

எண் 29, எக்ஸ்பிரஸ் கார்டன்
2வது மெயின் ரோடு,
அம்பத்தூர் தொழிற்பேட்டை,
சென்னை - 600058
(அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையம் அருகில், எஸ்பிஐ வங்கி எதிரில்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com