சிபிஎஸ்இ வீட்டுப் பாட விவகாரம்: விளம்பரப்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவு

ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களுக்கு வீட்டுப் பாடம் கொடுக்கக்கூடாது என்ற உத்தரவை அமல்படுத்தாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய மற்றும் மாநில மொழி
சிபிஎஸ்இ வீட்டுப் பாட விவகாரம்: விளம்பரப்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவு

ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களுக்கு வீட்டுப் பாடம் கொடுக்கக்கூடாது என்ற உத்தரவை அமல்படுத்தாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய மற்றும் மாநில மொழி நாளிதழ்களில் விளம்பரப்படுத்த மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞர் புருஷோத்தமன் தாக்கல் செய்த மனுவில், சிபிஎஸ்இ பள்ளிகளில் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு என்சிஇஆர்டி விதிகளை மீறி 8 பாடங்கள் பயிற்றுவிக்கப்படுகின்றன. மேலும் 1, 2 ஆம் வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு வீட்டுப் பாடம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தனியாரிடமிருந்து புத்தகங்களை வாங்க வேண்டும் என்பதற்காகத் தனியார் பள்ளிகள் குழந்தைகளிடம் இந்த பாடங்களைத் திணித்து வருகின்றனர். அதிகமான சுமையை சுமக்கும் குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர். எனவே, சிபிஎஸ்இ பள்ளிகள் என்சிஇஆர்டி பாடத்திட்டத்தை மட்டுமே பின்பற்ற உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார். 
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சிபிஎஸ்இ பள்ளிகளில் 1,2 ஆம் வகுப்புக்கு வீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது என்றும், என்சிஇஆர்டி பாடத்திட்டத்தை மட்டுமே கட்டாயமாக பின்பற்ற வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு சார்பில், உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி, இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது என அனைத்து மாநில சிபிஎஸ்இ பள்ளிகளுக்கும் இரு முறை அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த உத்தரவை அமல்படுத்த சிபிஎஸ்இ தரப்பில் கூடுதல் கால அவகாசம் கோரப்பட்டிருந்தது.
இவ்வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஎஸ்இ சார்பில் ஆஜரான வழக்குரைஞர், ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப் பாடம் கொடுக்கக்கூடாது என சிபிஎஸ்இ சார்பில் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
நீதிபதி உத்தரவு: அப்போது நீதிபதி, உத்தரவுகள் காகித அளவில் இல்லாமல் அதனைச் செயல்படுத்த வேண்டும் என்றார். மேலும், மகாராஷ்டிரம், ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களில் புத்தகச் சுமையை குறைப்பது தொடர்பாக மாதிரி திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அதே போல தமிழகத்திலும் ஒரு திட்டத்தை ஏன் உருவாக்கக்கூடாது எனக் கேள்வி எழுப்பினார்.ந இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது என்ற உத்தரவை அமல்படுத்தாத பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து 3 வார காலத்துக்குள் தேசிய மற்றும் மாநில மொழி நாளிதழ்களில் மத்திய அரசு விளம்பரப்படுத்த வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார். 
அப்போது மனுதாரர், சிபிஎஸ்இ பள்ளியில் இரண்டாம் வகுப்பு பொது அறிவு பாட புத்தகத்தில் சினிமா நடிகர்கள் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டினார். இதனையடுத்து நாட்டில் முதன்மையானதாகக் கருதப்படும் சிபிஎஸ்இ கல்வியின் தரம் இதுதானா எனக் கேள்வி எழுப்பி விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு (ஆக.21) ஒத்திவைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com