செப்.5-இல் என் பலத்தை நிரூபித்துக் காட்டுவேன்

கருணாநிதியின் உண்மையான தொண்டர்கள் என் பக்கம்தான் உள்ளனர் என்பதை செப்டம்பர் 5-ஆம் தேதி நிரூபித்துக் காட்டுவேன் என்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கூறினார்.
செப்.5-இல் என் பலத்தை நிரூபித்துக் காட்டுவேன்


கருணாநிதியின் உண்மையான தொண்டர்கள் என் பக்கம்தான் உள்ளனர் என்பதை செப்டம்பர் 5-ஆம் தேதி நிரூபித்துக் காட்டுவேன் என்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கூறினார்.
திமுகவின் பொதுக்குழு ஆகஸ்ட் 28-ஆம் தேதி கூட்டப்பட்டுள்ள நிலையில் தினமணி'க்கு திங்கள்கிழமை அவர் அளித்த பேட்டி:
கேள்வி: ஆக.28-இல் திமுக பொதுக்குழு கூட்டம் கூட்டப்படுகிறது. தலைவராக ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட உள்ளாரே?
பதில்: பொதுக்குழுக் கூட்டம் பற்றியெல்லாம் எனக்குத் தெரியாது.
கேள்வி: கட்சி ரீதியான உங்களின் ஆதங்கத்தை மூன்று நாள்களில் தெரிவிப்பதாகக் கூறினீர்கள். இதுவரை தெரிவிக்கவில்லையே?
பதில்: மூன்று நாள்களில் என் ஆதங்கத்தைத் தெரிவிப்பேன் என்று கூறவில்லை. தலைவரிடம் (கருணாநிதி நினைவிடத்தில்) என் ஆதங்கங்களைத் தெரிவித்துள்ளேன். கொஞ்ச நாளில் உங்களிடமும் (செய்தியாளர்களிடமும்) தெரிவிப்பேன் என்றுதான் கூறினேன். அதைத் தெரிவிப்பேன்.
கேள்வி: கருணாநிதியின் நினைவிடத்தை நோக்கி அமைதிப் பேரணி நடத்த உள்ளீர்களா?
பதில்: செப்டம்பர் 5-ஆம் தேதி பேரணி நடைபெறுகிறது. அதில் 75 ஆயிரம் பேரிலிருந்து 1 லட்சம் பேர் வரை பங்கேற்பர்.
கேள்வி: உங்கள் பின்னால் பாஜக உள்ளதாக குற்றச்சாட்டு உள்ளதே?
பதில்: அப்படியொரு குற்றச்சாட்டை நான் கேள்விப்படவில்லை. என் பின்னால் யாரும் இல்லை. கருணாநிதியின் உண்மையான தொண்டர்கள்தான் என் பக்கம் உள்ளனர்.
கேள்வி: எதிர்காலத்தில் ரஜினியுடன் நீங்கள் இணைந்து செயல்பட வாய்ப்பு இருக்கிறதா?
பதில்: அரசியலில் பின்னால் நடப்பதையெல்லாம் இப்போதே சொல்ல முடியாது. ரஜினியே இன்னும் கட்சி தொடங்கவில்லை. அவரோடு இணைந்து செயல்படுவது பற்றி எப்படிச் சொல்ல முடியும்?
கேள்வி: தனிக் கட்சித் தொடங்கும் திட்டம் உள்ளதா?
பதில்: கருணாநிதி என்ன நினைத்தாரோ அதன்படி செயல்படுவேன். அவர் என்னிடம் கடைசியாகக் கூறிய வார்த்தைகள் இருக்கின்றன. அதை வெளியில் சொல்ல முடியாது. 
கருணாநிதியின் உண்மையான தொண்டர்கள் என் பக்கம் உள்ளனர் என்பதை செப்டம்பர் 5-ஆம் தேதி அமைதிப் பேரணியில் நிரூபித்துக் காட்டுவேன். அதற்குப் பிறகும் எதிர்காலத்திலும் என் பலத்தை நிரூபித்துக் காட்டுவேன் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com