திமுக தலைவராகிறார் ஸ்டாலின்

திமுகவின் தலைவராக மு.க.ஸ்டாலினும் பொருளாளராக துரைமுருகனும் பொதுக்குழுக் கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
திமுக தலைவராகிறார் ஸ்டாலின்


திமுகவின் தலைவராக மு.க.ஸ்டாலினும் பொருளாளராக துரைமுருகனும் பொதுக்குழுக் கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
ஆகஸ்ட் 28-இல்...சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் திமுக பொதுக் குழு கூட்டம் வரும் 28-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் திமுகவின் புதிய தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். 50 ஆண்டுகளாகத் திமுகவின் தலைவராக இருந்த கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு, புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய சூழலில் கட்சியின் தலைமை உள்ளது.
க.அன்பழகன் நீடிப்பு: திமுகவின் பொதுச் செயலாளராக க.அன்பழகனே நீடிக்க உள்ளார். 
அண்ணா மறைவுக்குப் பிறகு...அண்ணா காலத்தில் திமுகவில் தலைவர் பதவி என்பது இல்லை. பொதுச் செயலாளராகத்தான் அண்ணா இருந்தார். அவர் மறைவுக்குப் பிறகு தலைவர் பதவியை உருவாக்கி அதன் பொறுப்பை கருணாநிதி ஏற்றார். அதிலிருந்து அவரே தலைவராக இருந்து வந்தார். கருணாநிதியின் மறைவைத் தொடர்ந்து, திமுகவின் புதிய தலைவராக ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.
பொதுக் குழு கூட்டம்: சென்னை அண்ணா அறிவாலயத்தில் வரும் 28-ஆம் தேதி நடைபெறும் பொதுக் குழுக் கூட்டத்தில் திமுகவின் தலைவராக மு.க.ஸ்டாலின் பொதுக்குழு உறுப்பினர்களால் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். கருணாநிதியின் மறைவையொட்டி தமிழகம் முழுவதும் திமுக சார்பில் நினைவஞ்சலிக் கூட்டம் நடைபெற்று வருகிறது; சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வரும் 30-ஆம் தேதி நடைபெற உள்ள கருணாநிதியின் நினைவஞ்சலிக் கூட்டத்தில் அகில இந்தியத் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இந்தக் கூட்டத்துக்கு முன்பாக, வரும் 28-ஆம் தேதி திமுக தலைவராக ஸ்டாலின் ஒருமனதாகத் தேர்வு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
பொருளாளர் துரைமுருகன்: திமுகவின் பொருளாளர் பதவியையும் இப்போது மு.க.ஸ்டாலினே சேர்த்து கவனித்து வருகிறார். திமுகவில் ஒருவர் இரு பதவிகளை வகிக்கக் கூடாது என்று விதி உள்ளது. அதனால், பொருளாளர் பதவியை ஸ்டாலின் விட்டுக் கொடுக்க முன்வந்தார். அந்தப் பதவிக்கு துரைமுருகன் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.
துணை பொதுச் செயலாளர்: மாநிலங்களவை திமுக குழுத் தலைவர் கனிமொழி துணைப் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். திமுகவின் முதன்மைச் செயலாளராக டி.ஆர்.பாலு தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.
28-இல் திமுக பொதுக் குழு கூட்டம்
திமுக பொதுக் குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் வரும் 28-ஆம் தேதி நடைபெறுகிறது.
இது தொடர்பாக திமுக பொதுச் செயலர் க.அன்பழகன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக் குழுக் கூட்டம் வரும் 28-ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெறும். தலைவர் மற்றும் பொருளாளர் தேர்தல் ஆகியவற்றுக்காக இந்த பொதுக் குழுக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக் குழு உறுப்பினர்கள் தவறாமல் கலந்துகொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com