பேரவைத் தலைவரின் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியும்: 18 எம்.எல்.ஏ.-க்கள் சார்பில் வாதம்

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி சட்டப்பேரவைத் தலைவரின் முடிவை நீதித் துறை மறு ஆய்வுக்கு உட்படுத்த முடியும் என தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்கள் சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.


உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி சட்டப்பேரவைத் தலைவரின் முடிவை நீதித் துறை மறு ஆய்வுக்கு உட்படுத்த முடியும் என தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்கள் சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
டிடிவி தினகரன் தரப்பு ஆதரவு எம்.எல்.ஏ.-க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நீதிபதி எம்.சத்தியநாராயணன் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர்கள் வாதம் நிறைவடைந்த நிலையில், பேரவைத் தலைவர் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஆர்யமா சுந்தரம், தமிழக முதல்வர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் சி.எஸ்.வைத்தியநாதன், அரசு கொறடா தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் முகுல் ரோத்தகி ஆகியோர் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து 18 எம்.எல்.ஏக்கள் தரப்பில் பதில்வாதம் செய்ய உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
18 எம்.எல்.ஏ.-க்கள் சார்பில்...: தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் வாதிட்டதாவது:- 18 எம்.எல்.ஏ.-க்களும் ஆளுநரைச் சந்தித்து முதல்வருக்கு எதிராக கடிதம் கொடுத்தால், சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிடுவார் என்ற யூகத்தின் அடிப்படையில் தான் பேரவைத் தலைவர் இந்தத் தகுதி நீக்க உத்தரவை பிறப்பித்துள்ளார்.
கட்சியின் தலைமைக்கு எதிராகவும், கட்சிக்கு எதிராகவும் யார் வேண்டுமானாலும் கருத்து சொல்லலாம். ஆனால், கட்சியின் கொறடா பிறப்பித்த உத்தரவை மீறி சட்டப்பேரவையில் வாக்காளித்தால் மட்டுமே அது கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் வரும். ஆனால், இந்த விவகாரத்தைப் பொருத்தவரை முதல்வருக்கு எதிராகக் கருத்து சொல்வது கட்சி தாவல் இல்லை.
மேலும், உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி பேரவைத் தலைவரின் முடிவை நீதித்துறை மறு ஆய்வுக்கு உட்படுத்த முடியும். ஏனெனில், பேரவைத் தலைவரின் உத்தரவுக்கு எந்தச் சட்ட பாதுகாப்பும் இல்லை. எம்.எல்.ஏ.-க்கள் தகுதி நீக்கத்தில் பேரவைத் தலைவர் எடுத்துள்ள முடிவு சட்டப்பேரவையுடன் தொடர்புடையது அல்ல; அரசியல் கட்சி தொடர்புடையது.
தலையிட முடியும்: இந்த விவகாரத்தில் பேரவைத் தலைவர், அரசியல் சாசனத்தின் 10-ஆவது அட்டவணையின் படி ஒரு தீர்ப்பாயமாகத்தான் செயல்பட்டு இருக்கிறாரே தவிர, பேரவைத் தலைவராகச் செயல்படவில்லை. எனவே, இதில் நீதிமன்றம் தலையிட முடியும்'' என மூத்த வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் வாதிட்டார்.
இதனைத் தொடர்ந்து எதிர்மனுதாரர்கள் தரப்பில், இந்த வாதத்துக்குப் பதில் வாதம் செய்ய தங்களுக்கும் அவகாசம் அளிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, அனைத்து தரப்பினரும் தங்கள் தரப்பு வாதங்களை விரைவாக முடிக்க வேண்டும் எனக் கூறி விசாரணையை வரும் ஆகஸ்ட் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com