ஸ்டெர்லைட் விவகாரத்தை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் மூவர் குழு: தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

ஸ்டெர்லைட் விவகாரத்தை முழுமையாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் மூன்று நபர் குழு அமைக்கப்படும் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் திங்கள்கிழமை தெரிவித்தது.
ஸ்டெர்லைட் விவகாரத்தை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் மூவர் குழு: தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு


ஸ்டெர்லைட் விவகாரத்தை முழுமையாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் மூன்று நபர் குழு அமைக்கப்படும் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் திங்கள்கிழமை தெரிவித்தது.
ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதிக்கக் கோரியும், தமிழக அரசின் நடவடிக்கைக்கு தடை விதிக்கக் கோரியும் வேதாந்தா குழுமம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவர் ஏ.கே. கோயல், நீதிபதிகள் ஜவாத் ரஹீம், எஸ்.பி. வாங்க்டி, நாகின் நந்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. 
அப்போது, வேதாந்தா நிறுவனத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் அரிமா சுந்தரம், ஆலையால் ஏற்படும் மாசு குறித்து ஆய்வு நடத்த ஆலையை குறைந்தபட்சம் 25 நாள்கள் இயக்க வேண்டியுள்ளது. தமிழக அரசால் ஆலையைப் பராமரிக்க முடியாது. எனவே, வேதாந்தா நிறுவனத்தை பராமரிப்புக்காக அனுமதி அளிக்க வேண்டும்' என்றார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் மோகனா, ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்பட்டுள்ள நிலத்தடி நீர் மாசு குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய 10 நாள்கள் அவகாசம் வேண்டும்' என்றார். 
வழக்கு விசாரணையில் ஆஜராகியிருந்த வைகோவிடம், உங்களது கோரிக்கை என்ன?' என தீர்ப்பாயத்தின் தலைவர் கேள்வி எழுப்பினார். அதற்கு வைகோ, தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டம் யாருடைய தூண்டுதலின் பேரிலோ, அரசியல் கட்சிகளாலோ நடத்தப்படவில்லை. ஸ்டெர்லைட் ஆலையால் பாதிக்கப்பட்டவர்களால் தன்னெழுச்சியாகவே நடைபெற்றது' என்றார். 
இதைத் தொடர்ந்து, தமிழக அரசின் மூத்த வழக்குரைஞர் மோகனா, வழக்குரைஞர் யோகேஷ் கண்ணா ஆகியோர் ஸ்டெர்லைட் ஆலைக்கு உச்ச நீதிமன்றம் ரூ. 100 கோடி அபராதம் விதித்த தீர்ப்பை மேற்கோள்காட்டி வாதிட்டனர். வாதங்களைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: 
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தியதற்காக ஸ்டெர்லைட் ஆலைக்கு உச்ச நீதிமன்றம் 2013-ஆம் ஆண்டு ரூ. 100 கோடி இழப்பீட்டு தொகையாக செலுத்த உத்தரவிட்டுள்ளதையும், அதைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலை இயங்க அனுமதித்துள்ளதையும் பதிவு செய்துகொண்டோம். இந்த வழக்கில் போதுமான ஆதாரங்களும், ஆவணங்களும் தாக்கல் செய்யப்படவில்லை. அதே சமயம், ஸ்டெர்லைட் ஆலை காப்பர் உற்பத்தியில் குறிப்பிட்ட பங்களிப்பை செலுத்தி வருவதையும், ஆலையில் 1,300 தொழிலாளர்கள் பணியாற்றி வருவதையும் தெரிவித்துள்ளனர். 
ஸ்டெர்லைட் ஆலையில் திட்டமிடப்பட்ட விரிவாக்கப் பணிகளால் போராட்டம் ஏற்பட்டதையும், போராட்டத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் இறந்ததையும், இதைத் தொடர்ந்துதான் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டதாக மனுதாரர் சார்பிலும், நிலத்தடி நீர் மாசு காரணமாகவே ஆலைக்கு சீல் வைக்கப்பட்டதாகவும் தமிழகம் அரசும் தெரிவித்துள்ளன. இந்த பிரச்னைக்கு தீர்வுகாண நம்பகமான வழிமுறைகளை காணும் வகையில், அனைத்து தரப்பினர் நியாயங்களையும் ஆராயவும் வகையில் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் சுதந்திரமான குழுவிடம் வழக்கை ஒப்படைக்கிறோம்.
இந்த விவகாரத்தை சுதந்திரமான குழு தொடக்கத்திலிருந்து விசாரிக்கும். இந்தக் குழுவில் தொழில்நுட்ப உறுப்பினர்களாக மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை சார்பில் ஓர் அதிகாரியும், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திலிருந்து ஓர் அதிகாரியும் இடம்பெறுவர். 
இந்தக் குழு இரண்டு வாரங்களுக்குள் அமைக்கப்பட்டு, 4 வாரங்களுக்குள் இந்த விவகாரத்தை விசாரித்து தீர்வு காணும். இந்த குழு செயல்படுவதற்கான அனைத்து வசதிகளையும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் செய்து தர வேண்டும். குழுவின் தலைவருக்கான ஊதியத்தை அளிக்க தமிழக தலைமைச் செயலாளர் ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும், ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள வேதாந்தா நிறுவனத்துக்கு ஏற்கெனவே அளிக்கப்பட்ட அனுமதி தொடர்கிறது' என தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com