இயற்கை எழில் சூழ்ந்த அரங்கல்துருகம் மலைக் கோட்டை: சுற்றுலாத் தலமாக்க கோரிக்கை

ஆம்பூர் அருகே அரங்கல்துருகம் கிராமத்தில் உள்ள மலை மீது இயற்கை எழில் சூழ்ந்த மலைக்கோட்டை அமைந்துள்ளது.
இயற்கை எழில் சூழ்ந்த அரங்கல்துருகம் மலைக் கோட்டை: சுற்றுலாத் தலமாக்க கோரிக்கை

ஆம்பூர் அருகே அரங்கல்துருகம் கிராமத்தில் உள்ள மலை மீது இயற்கை எழில் சூழ்ந்த மலைக்கோட்டை அமைந்துள்ளது.

இப்பகுதியை சுற்றுலாத் தலமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆம்பூர் அருகே பேர்ணாம்பட்டு ஒன்றியத்தில் அரங்கல்துருகம் ஊராட்சி அமைந்துள்ளது. இந்த ஊராட்சியில் 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. ஆம்பூர் வனச் சரக காப்புக் காடுகளின் அருகே அரங்கல்துருகம் ஊராட்சி அமைந்துள்ளது. பொன்னப்பல்லி இடையன் கல், சுட்டக்குண்டா ராணுவ சாலை, மலையாம்பட்டு ஆர்மா மலை, மத்தூர் கொல்லை நந்திசுனை போன்ற பழங்கால சின்னங்கள் இந்த பகுதிகளில் காணப்படுகின்றன.

அரங்கல்துருகம் ஊராட்சியின் மையப் பகுதியில் துருகம் மலைக்கோட்டை அமைந்துள்ளது. பொதுவாக மலை மீது கோட்டை அமைந்து உள்ள பகுதியை துருகம் என்பர். இந்த ஊரில் உள்ள மலைக்கோட்டை கற்களால் அரண்கள் சூழ் கோட்டையாய் இருப்பதால் அரண்கல் துருகம் என அழைக்கப்பட்டு, அதுவே நாளடைவில் மருவி அரங்கல்துருகம் என ஆகி இருக்கலாம் என இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

அரங்கல்துருகம் மலைக்கோட்டைக்கு எந்த பக்கமும் வழியே கிடையாது. கோட்டையின் வடமேற்கு திசையில், மலையின் அடிவாரத்தில் ஹஸ்ரத் சையத் மீரான் ஷஹீத் அவுலியா சாஹேப் தர்கா அமைந்து உள்ளது. இந்த புகழ்பெற்ற தர்காவில் உரூஸ் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த தர்கா வரை மட்டும் படிக்கட்டுகள் உள்ளன.

தர்காவை கடந்து, மலைமேல் உள்ள கோட்டைக்குச் செல்ல கயிற்றின் மூலம் மட்டுமே செல்ல முடியும். கயிறு கட்டிச் சென்றால் பிரதான வாயில் கம்பீரமாய் வரவேற்கிறது. அதன் அருகே கோட்டையின் தென்மேற்கு பகுதியில் பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட கிணறு பாழடைந்த நிலையில் காணப்படுகிறது. அந்த கிணறு முறையாக சுற்றிலும் சுற்றுச்சுவருடன் கட்டப்பட்டு காணப்படுகிறது.

அடுத்து மலை மேலே ஏறிச் சென்றால் மகாராணி நீச்சல் குளம் எனப்படும் குளம் காணப்படுகிறது. இந்த நீச்சல் குளம் பாறை பகுதியால் இணைக்கப்பட்டு, மேற்கு, கிழக்கு, வடக்கு பகுதிகள் செங்கற்களால் கட்டப்பட்டு உள்ளது. சுமார் 5 அடி முதல் 7 அடி ஆழம் வரை இந்த குளம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் நீளம் 20 அடி, அகலம் 15 அடி ஆகும்.
அந்த மகாராணி நீச்சல் குளத்தையொட்டி, மேற்கு பகுதியில் மகாராஜா நீச்சல் குளம் எனப்படும் குளம் உள்ளது. இந்தக் குளம் சுமார் 20 அடி ஆழம் வரை அமைந்துள்ளது. அந்த குளத்தின் உள்ளே இறங்குவதற்கு முறையாக படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இப்போது அந்த குளம் முள்புதர்களால் மூடப்பட்டுள்ளது.

மலைக்கோட்டையின் கிழக்குப் பகுதியில் பாதாளக் கிணறு ஒன்று அமைந்துள்ளது. அந்த கிணற்றில் எக்காலத்திலும் நீர் வற்றுவது இல்லையெனக் கூறப்படுகிறது. அவ்வப்போது குளத்துக்குள் இறங்கவும், ஏறவும் பாறையில் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

கோட்டையின் தெற்கு பகுதியில் ரகசிய சுரங்கப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. பாறையிடுக்குகளின் வழியே செல்லும் இந்த சுரங்கப்பாதை, மேற்குப் பகுதியில் மலையடிவாரத்தில் முடிவடைவதாகக் கூறப்படுகிறது. அந்த சுரங்கப்பாதை செல்லும் வழிக்கு மேற்கே பாறையில் குடையப்பட்ட அறை போன்ற அமைப்பு உள்ளது. அதில், ஐந்துக்கும் மேற்பட்ட நபர்கள் ஒரே நேரத்தில் படுத்து உறங்குவதற்கு வசதியாக உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த மலைக்கோட்டைக்குள் உணவு சமைப்பதற்கான வசதிகள், உரல்கள் காணப்படுகின்றன. இந்த அரங்கல்துருகம் மலைக்கோட்டைக்குள் எவரும் எளிதில் செல்ல முடியாதவாறு படிக்கட்டுகள் இல்லாமல் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இயற்கை எழில் சூழ்ந்த இந்த அரங்கல்துருகம் மலைக்கோட்டை பகுதியை சுற்றுலாத்தலமாக்கவும், அனைவரும் சென்று வரும் வகையில் போதிய வசதியை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மலைமேல் உள்ள கோட்டைக்கு கயிற்றின் மூலம் மட்டுமே செல்ல முடியும். கயிறு கட்டிச் சென்றால் பிரதான வாயில் கம்பீரமாய் வரவேற்கிறது. அதன் அருகே கோட்டையின் தென்மேற்குப் பகுதியில் பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட கிணறு பாழடைந்த நிலையில் காணப்படுகிறது. அந்தக் கிணறு முறையாக சுற்றிலும் சுற்றுச்சுவருடன் கட்டப்பட்டு காணப்படுகிறது.


 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com