காவிரி-குண்டாறு இணைப்பு தேவை

காவிரி - குண்டாறு நதிகள் இணைப்புக் கால்வாய் திட்டம் நிறைவேற்றப்படாததால், காவிரியின் உபரி நீர் வீணாக வங்கக் கடலில் கலப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
காவிரி-குண்டாறு இணைப்பு தேவை

கரூர்: காவிரி - குண்டாறு நதிகள் இணைப்புக் கால்வாய் திட்டம் நிறைவேற்றப்படாததால், காவிரியின் உபரி நீர் வீணாக வங்கக் கடலில் கலப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
 பெருகிவரும் மக்கள் தொகையின் தேவையை சமாளிக்க நீர்வள மேம்பாட்டு பணிகளையும், உணவு உற்பத்தியையும் பெருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். ஆனால் பெய்யும் மழை நீரை சேமிக்கும் வகையில் அணைகளோ போதியளவில் கட்டப்படவில்லை என்பதே உண்மை.
 தமிழகத்தில் 1969-க்குப் பிறகு பெரிய அளவிலான அணைகள் ஏதும் கட்டப்படவில்லை. தமிழகத்தில் காவிரி நீரை சேமிக்கும் ஒரே அணையாக மேட்டூர் அணை மட்டுமே உள்ளது. இதிலும் 97 டிஎம்சி தண்ணீரை மட்டுமே சேமிக்க இயலும்.
 திறக்கப்படும் 90% நீர் வீணாகிறது: தற்போது மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் பலத்த மழையால் காவிரியில் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆக.15-இல் 1.40 லட்சம் கன நீர் மேட்டூர் அணைக்கு வந்தது. ஆக.17- நிலவரப்படி மேட்டூர் அணையில் திறக்கப்படும் தண்ணீர் 2.20 லட்சம் கன அடிநீர் மற்றும் பவானிசாகரில் 70,000 கனஅடி நீர், அமராவதியில் 15,000 கன அடிநீர் என மொத்தம் விநாடிக்கு 3.05 லட்சம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த தண்ணீரில் பெரும்பாலும் 90 சதவீதம் நீர் வீணாக கடலில்தான் கலந்துவருகிறது. நிகழாண்டில் மட்டும் இதுவரை காவிரியின் உபரி நீர் சுமார் 120 டிஎம்சி வீணாகக் கடலில் கலந்துள்ளதாக பொதுப் பணித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 இவ்வாறு வீணாகக் கடலில் கலக்கும் காவிரி உபரி நீரை காவிரி - குண்டாறுகளில் திருப்பிவிடத்தான் கடந்த 2008-இல் கரூர் மாவட்டம், மாயனூரில் அகண்ட காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டும் பணி தொடங்கப்பட்டு 2014 ஜூன் 25-ஆம் தேதி திறக்கப்பட்டது. முதல் திட்டம், இரண்டாம் திட்டம் என்ற பெயரில் தொடங்கப்பட்டது இத்திட்டம். முதல் திட்டம் காவிரியின் குறுக்கே கதவணை கட்டுவது, இரண்டாம் திட்டமாக அணையில் இருந்து 20 மீ. அகலம், 6 மீட்டர் ஆழத்திற்கு கால்வாய் வெட்டி, அதை விருதுநகர் மாவட்டம், குண்டாறு நதியுடன் சுமார் 255 கி.மீ. தொலைவுக்கு இணைப்பது.
 மாயனூரில் அணை கட்டப்பட்டு தற்போது அணையில் 1.04 டிஎம்சி தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது. இருப்பினும் அணைக்கு தற்போது நீரின் வரத்து 2.30 லட்சம் கன அடியாக இருப்பதால், அணையின் முன்பகுதியில் உள்ள மேலமாயனூர், திருமுக்கூடலூர், அரங்கநாதன்பேட்டை, கும்பகுழி உள்ளிட்ட இடங்களில் காவிரி ஆறு விவசாய நிலங்களுக்குள் புகுந்துள்ளது.
 மாயனூர் - குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால் கடலில் வீணாகச் சேரும் அனைத்து நீரும் கால்வாய்கள் மூலம் திருப்பி விடப்பட்டு சேமிக்கப்பட்டிருக்கும். விவசாய நிலங்களுக்குள், வீடுகளுக்குள் தண்ணீர் புகுவது போன்ற வெள்ள சேதத்தையும் தவிர்த்திருக்கலாம்.
 7 மாவட்டங்கள் பயன் பெறும்: கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய 7 மாவட்டங்களின் வறட்சிப் பகுதிகளும் சோலைவனமாகியிருக்கும். எனவே கிடப்பில் போடப்பட்டிருக்கும் காவிரி - குண்டாறு நதிகளை இணைக்க வேண்டும் என காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 இது தொடர்பாக அந்த சங்கத்தின் செயல் தலைவர் மகாதானபுரம் ராஜாராம் கூறுகையில், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, கரூர், திருச்சி ஆகிய 7 மாவட்டங்களில் வறட்சியான பகுதிகள் கணக்கெடுக்கப்பட்டு முதலில் ரூ. 3,290 கோடியில் இத்திட்டம் நிறைவேற்றப்படும் என அப்போதைய திமுக அரசு 2008-இல் அறிவித்தது.
 முதற்கட்டமாக அணையும் கட்டப்பட்டுவிட்டது. ஆனால் கால்வாய் அமைக்கும் பணி மட்டும் இன்னும் தொடங்கப்படவில்லை.
 இந்த திட்டம் நிறைவேற்றப்படும்போது காவிரியின் மாயனூர் கதவணையில் இருந்து திருச்சி மாவட்டம் அரியாறு, புதுக்கோட்டை மாவட்டம் அக்கினியாறு, வெள்ளாறு மற்றும் சிவகங்கை மாவட்ட மணிமுத்தாறு, ராமநாதபுரம் மாவட்டம் வைகையாறு, கிருதுமால் நதி, கானல் ஓடை, விருதுநகர் மாவட்டம் குண்டாறு என 15-க்கும் மேற்பட்ட நதிகள் இணைக்கப்படும். இதன் மூலம் 7 மாவட்டங்களைச் சேர்ந்த 3,37,717 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும் சுமார் 50 லட்சம் விவசாயிகளும் பயன்பெறுவர்.
 தமிழக அரசு இந்த கால்வாய் அமைக்க ரூ. 5,166 கோடி தேவைப்படும் என கடந்த 2008-இல் மத்திய அரசிடம் வலியுறுத்தியது. இதையடுத்து நில ஆய்வுப் பணி தொடங்கப்பட்டு, இதற்கான திட்ட மதிப்பீடு, வரைபடம் ஆகியவற்றையும் தமிழக அரசு மத்திய அரசிடம் அண்மையில் தாக்கல் செய்துள்ளது.
 விரைவில் இதற்கான நிதியை ஒதுக்கினால் கடலில் சென்று நீர் வீணாகக் கலப்பது தடுக்கப்படும். தமிழகத்தின் தென் மாவட்டங்கள் வளம் பெறும் என்றார் அவர்.
 காவிரியில் ஆண்டுதோறும் ஏற்படும் வெள்ளப் பெருக்கைத் தொடர்ந்து, கடந்த 2005-ஆண்டில் 70.96 டிஎம்சி, 2006-இல் 42.85 டிஎம்சி, 2007-இல் 64.41டிஎம்சி, 2008-இல் 78.15 டிஎம்சி, 2009-இல் 65.42 டிஎம்சி, 2010-இல் 39 டிஎம்சி, 2011-இல் 20 டிஎம்சி தண்ணீர் வீணாகக் கடலில் கலந்துள்ளது.
 காவிரி - குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டம் நிறைவேற்றப்படும்போது, நான்கு வழிச்சாலையில் 2 பாலங்கள், இரு வழிச்சாலைகளில் 13 பாலங்கள், மாவட்ட, கிராமச்சாலைகளில் 118 பாலங்கள் என 133 பாலங்கள் அமைக்கப்படும். மேலும் 9 ரயில்வே மேம்பாலங்களும் அமையும்.
 இத்திட்டத்தை விரைவில் நிறைவேற்றுவதற்கான நடவடிக்கையில் தற்போது தமிழக அரசு முனைப்பு காட்டி வருகிறது. இந்தத் திட்டம் நிறைவேறினால் ஆண்டுதோறும் கடலில் வீணாகக் கலக்கும் காவிரி உபரி நீர் தடுக்கப்பட்டு, தமிழகத்தின் 7 மாவட்டங்களிலும் குடிநீர் தட்டுப்பாடு, வறட்சி வராது என்று திட்டப் பணியில் ஈடுபட்டு வரும் பொறியாளர் ஒருவர் கூறினார்.
 - ஏ. அருள்ராஜ்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com