எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் சஞ்சாரம் நாவலுக்கு சாகித்ய அகாதெமி விருது

தமிழகத்தைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய சஞ்சாரம் நாவல், 2018-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் சஞ்சாரம் நாவலுக்கு சாகித்ய அகாதெமி விருது

தமிழகத்தைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய சஞ்சாரம் நாவல், 2018-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. தில்லியில் ஜனவரி 29-ஆம் தேதி நடைபெறும் விழாவில் அவருக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது. 
இந்தியாவில் சாகித்ய அகாதெமியால் அங்கீகரிக்கப்பட்டுள்ள 24 இந்திய மொழிகளில் சிறந்த நூல்களுக்கான சாகித்ய அகாதெமியின் பிரதான விருதுகள் ஆண்டுதோறும் தேர்வு செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன. இலக்கியப் படைப்புகளுக்கு உயரிய கௌரவமாக கருதப்படும் இந்த விருதுகளை ஒவ்வொரு ஆண்டின் இறுதியில் சாகித்ய அகாதெமி அறிவிப்பது வழக்கம். அதன்படி, 2018-ஆம் ஆண்டுக்கான இவ்விருதுகளுக்கு ஒப்புதல் அளிக்கும் கூட்டம் தில்லியில் உள்ள சாகித்ய அகாதெமியின் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. சாகித்ய அகாதெமியின் தலைவர் டாக்டர் சந்திரசேகர் கம்பர் தலைமையில் நடைபெற்ற நிர்வாகக் குழுக் கூட்டத்தில் நடுவர்கள் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட சாகித்ய அகாதெமியின் 24 மொழிகளின் நூல்களுக்கான விருதுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. 
இதைத் தொடர்ந்து, தமிழ், சம்ஸ்கிருதம், ஹிந்தி, மராத்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்பட 24 மொழிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த படைப்புகளுக்கான சாகித்ய அகாதெமி விருதுக்கான அறிவிப்பை அந்த அமைப்பின் செயலர் கே. ஸ்ரீநிவாச ராவ் வெளியிட்டார். மொத்தம் ஏழு கவிதை நூல்கள், ஆறு நாவல்கள், ஆறு சிறுகதைகள், மூன்று இலக்கிய விமர்சன படைப்புகள், இரண்டு கட்டுரைகள் ஆகியவற்றுக்கு இம்முறை விருதுகள் கிடைத்துள்ளன. 
தமிழைப் பொருத்தமட்டில் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவரான எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய சஞ்சாரம் எனும் நாவல் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
தெய்வீக இசையாகப் போற்றப்படும் நாகஸ்வரத்தை வாசிக்கும் கலைஞர்களின் வாழ்க்கைச் சூழலைப் படம் பிடித்தும் காட்டும் வகையில், சஞ்சாரம் நாவல் எழுதப்பட்டுள்ளது. இந்த நாவல் நாகஸ்வரம், மேளம் வாசிப்பவர்களின் துயரம், அலைக்கழிப்பு, தனிமை ஆகியவற்றையும், மங்கல இசைக் கருவியான நாகஸ்வரத்தின் கடந்த காலப் பெருமைகளையும் எடுத்துக் கூறுகிறது. இந்த நாவலை எழுதிய எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன், விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறு கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். 1966-இல் பிறந்த இவர், கடந்த 25 ஆண்டுகளாக முழுநேரமாக எழுத்துப் பணியை மேற்கொண்டுள்ளார். தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.
இவர் சஞ்சாரம் நாவல் தவிர, உபபாண்டவம், நெடுங்குருதி , உறுபசி, யாமம், துயில், நிமித்தம் ஆகிய நாவல்களையும் ஏராளமான சிறுகதைத் தொகுப்புகள், கட்டுரைத் தொகுப்புகள், திரைப்பட நூல்கள், குழந்தைகள் நூல்கள் ஆகியவற்றையும் எழுதியுள்ளார். உயிர்மைப் பதிப்பகம் பதிப்பித்த சஞ்சாரம் நாவலின் முதல் பதிப்பு 2014-இல் வெளிவந்துள்ளது.
மேலும், மலையாள எழுத்தாளர் எஸ். ரமேஷ் நாயரின் குரு பௌர்ணமி எனும் கவிதைப் படைப்பு, தெலுங்கு மொழியில் கோலகலுரி எனோக் எழுதிய விமர்ஷினி எனும் கட்டுரை, சம்ஸ்கிருத மொழியில் ரமா காந்த் சுக்லா எழுதிய மாமா ஜனனி கவிதைப் படைப்பு, கன்னடத்தில் கே.ஜி. நாகராஜப்பா எழுதிய அனுஷ்ரேனி- யஜமானிக்கே எனும் தலைப்பிலான இலக்கிய விமர்சனப் படைப்பு ஆகியவற்றுக்கும் சாகித்ய அகாதெமி விருது கிடைத்துள்ளது.
பாஷா சம்மான் விருது: இது தவிர, 2017, 2018-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமியின் பாஷா சம்மான் விருதுகளும் புதன்கிழமை அறிவிக்கப்பட்டன. 
அதன்படி, செவ்வியல் மற்றும் இடைக்கால இலக்கிய தளத்தில் சிறந்த பங்களிப்பை அளித்ததற்காக வடக்கு மண்டலத்தில் 2017-ஆம் ஆண்டுக்காக சிறந்த ஹிந்தி கவிஞர் டாக்டர் யோகேந்திர நாத் சர்மா, தெற்கு மண்டலத்தில் கன்னட எழுத்தாளர் ஜி. வெங்கசுப்பையா ஆகியோருக்கும், 2018-ஆம் ஆண்டுக்காக கிழக்கு மண்டலத்தில் ஒடியா மொழி எழுத்தாளர் டாக்டர் ககனேந்திர நாத் தாஸ் , மேற்கு மண்டலத்தில் மராத்தி எழுத்தாளர் டாக்டர் ஷைலஜா பபத் ஆகியோருக்கும் விருது கிடைத்துள்ளது.
சாகித்ய அகாதெமி விருதுக்குத் தேர்வு பெற்ற படைப்புகளின் ஆசிரியர்களுக்கு புது தில்லியில் அடுத்த ஆண்டு ஜனவரி 29-ம் தேதி நடைபெறும் சிறப்பு விழாவில் விருதுகள் வழங்கப்படும். இதில் தலா ரூ.1 லட்சம் சன்மானம், தாமிரப் பட்டயம், பொன்னாடை ஆகியவை வழங்கப்படும். மொழி பெயர்ப்பு நூல்களுக்கான விருதுகள் அடுத்த ஆண்டு ஜனவரியில் அறிவிக்கப்படும் என சாகித்ய அகாதெமி செயலர் கே. ஸ்ரீநிவாச ராவ் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com