இன்று தமிழக சட்டப் பேரவை சிறப்புக் கூட்டம்

மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக, தமிழக சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டம் வியாழக்கிழமை (டிச. 6) நடைபெறுகிறது.
இன்று தமிழக சட்டப் பேரவை சிறப்புக் கூட்டம்


மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக, தமிழக சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டம் வியாழக்கிழமை (டிச. 6) நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில், காவிரியின் குறுக்கே அணைகள் உள்ளிட்ட எந்தக் கட்டுமானங்களையும் கட்டுவதற்கு கர்நாடகத்துக்கு அனுமதி வழங்கக் கூடாது என மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வரும் இந்தத் தீர்மானத்தை எதிர்க்கட்சியினர் உள்பட அனைவரும் ஒருமனதாக நிறைவேற்ற உள்ளனர். இந்தத் தீர்மானத்தின் நகல் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.
மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானத்தை நிறைவேற்ற சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டம் வியாழக்கிழமை மாலை 4 மணிக்குக் கூடுகிறது. இந்தக் கூட்டம் சுமார் ஒன்றரை மணி நேரம் வரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதல்வர் பழனிசாமியால் முன்மொழியப்படும் தீர்மானத்தின் மீது திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் கருத்துகளைத் தெரிவிக்க உள்ளனர். அனைத்துத் தரப்பினரின் கருத்துகளும் கோரப்பட்டு, குரல் வாக்கெடுப்பு மூலமாக தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட உள்ளது.
அரசின் நடவடிக்கைகள்: காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு எனும் இடத்தில் புதிய அணை கட்டுவதற்கான சாத்தியக் கூறு அறிக்கை தயாரிக்க கர்நாடகத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 
இது தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பிரச்னை தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியதுடன், உச்ச நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்துள்ளது. 
மேலும், அண்மையில் நடைபெற்ற காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்திலும் அதற்கு தமிழக அரசு எதிர்ப்புத் தெரிவித்தது.
மேக்கேதாட்டு விவகாரத்தில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டியும் தீர்மானத்தை நிறைவேற்ற உள்ளது தமிழக அரசு. 
இந்தத் தீர்மானம் வியாழக்கிழமை மாலை ஒருமனதாக நிறைவேற்றப்பட்டவுடன் அன்றைய தினமே மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com