இலவச சைக்கிளில் கர்நாடக அரசு முத்திரை: உயர் நீதிமன்றம் அதிருப்தி

தமிழக அரசு சார்பில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இலவச சைக்கிளில் கர்நாடக அரசின் முத்திரை இடம்பெற்ற விவகாரத்தில் உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.


தமிழக அரசு சார்பில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இலவச சைக்கிளில் கர்நாடக அரசின் முத்திரை இடம்பெற்ற விவகாரத்தில் உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த மனுவில், விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள்களை சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார். 
அந்த விழாவில் வழங்கப்பட்ட சைக்கிள்களில் கர்நாடக அரசின் முத்திரை இடம்பெற்றுள்ளது. அந்த முத்திரையைக் கூட அகற்றாமல் அரசு அதிகாரிகள் தமிழக மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கி உள்ளனர். கர்நாடக அரசு சார்பில் வழங்கப்பட்ட சைக்கிள்களின் தரம் குறித்து அந்த மாநில அரசு கேள்வி எழுப்பியிருந்தது. இந்த நிலையில் அந்த சைக்கிள்கள் தமிழகத்தில் விநியோகிக்கப்பட்டுள்ளது. 
எனவே தமிழக மாணவர்களுக்கு கர்நாடக அரசின் முத்திரையுடன் வழங்கப்பட்ட தரமற்ற சைக்கிள்களை திரும்பப் பெற வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன் மற்றும் பி.ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், நாளிதழ்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் மட்டும் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியாது. 
எனவே மனுதாரர் இதுதொடர்பான கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்தால் விசாரிக்கப்படும் என தெரிவித்தனர். அப்போது அரசு தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர் நர்மதா சம்பத்திடம், கர்நாடக அரசின் முத்திரையுடன் இலவச சைக்கிள்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் குற்றம்சாட்டியுள்ளார். இதைக்கூடவா அதிகாரிகளால் கவனிக்க முடியவில்லை என நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். 
அப்போது அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர், இலவச சைக்கிள்களில் தமிழக அரசின் முத்திரை உள்ளது. சில சைக்கிள்களில் மட்டுமே சைக்கிள் விநியோகித்தவர்களின் தவறின் காரணமாக கர்நாடக அரசின் முத்திரை இடம்பெற்றுள்ளது என்றார். 
இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பான கூடுதல் விவரங்களை மனுதாரர் தாக்கல் செய்ய கூடுதல் கால அவகாசம் வழங்கி விசாரணையை 4 வார காலத்துக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com