மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள்: பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

அரசு கட்டடங்கள், கல்வி நிறுவனங்கள், பேருந்துகள் உள்ளிட்டவற்றில் மாற்றுத்திறனாளிகளுக்காக செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை
மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள்: பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு


அரசு கட்டடங்கள், கல்வி நிறுவனங்கள், பேருந்துகள் உள்ளிட்டவற்றில் மாற்றுத்திறனாளிகளுக்காக செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர், போக்குவரத்து ஆணையர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
சென்னை உயர்நீதிமன்றத்தில் கடலூரைச் சேர்ந்த முருகானந்தன் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காக வழங்கப்படும் வசதிகளை மேம்படுத்த வேண்டும். அவர்களுக்கு சட்ட ரீதியாக வழங்கப்பட வேண்டிய உரிமைகளை வழங்க வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை மாற்றி திருத்திய அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் அனிதா சுமந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், தமிழகத்தில் உள்ள அரசு கட்டடங்கள், கல்வி நிறுவன வளாகங்கள் மற்றும் போக்குவரத்துக்கான வாகனங்களில் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை. தமிழக அரசின் கொள்கை விளக்கக் குறிப்பில் மாநிலம் முழுவதும் இயக்கப்படும் 23 ஆயிரம் பேருந்துகளில் 10 பேருந்துகள் மட்டுமே, மாற்றுத்திறனாளிகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். அப்போது நீதிபதிகள், மாற்றுத்திறனாளிகள் அணுகக்கூடிய வகையில் 10 பேருந்துகள் மட்டும் தான் இயக்கப்படுகிறதா என கேள்வி எழுப்பினர். 
அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர் நர்மதா சம்பத், மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் 11 லட்சத்து 79 ஆயிரம் பேர் உள்ளனர். அரசின் நலத்திட்டங்கள் 12 லட்சத்து 86 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே உள்ள பழைய அரசு கட்டடங்களை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அரசு சார்பில் கட்டப்படும் புதிய கட்டடங்களில் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் சாய்வுதள பாதைகள், கழிவறைகள் உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.
இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், அரசு கட்டடங்கள், கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ள வசதிகள் தொடர்பாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளரும், மாற்றுத்திறனாளிகள் எளிதாக அணுகும் வகையில் கூடுதல் பேருந்துகளை இயக்குவது தொடர்பாக போக்குவரத்து ஆணையரும் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வரும் ஜனவரி 3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com