மேக்கேதாட்டு விவகாரம்: சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் தீர்மானம் முன்மொழிவு

மேக்கேதாட்டு அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் புதன்கிழமை முன்மொழியப்பட்டது.
மேக்கேதாட்டு விவகாரம்: சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் தீர்மானம் முன்மொழிவு

மேக்கேதாட்டு அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் வியாழக்கிழமை முன்மொழியப்பட்டது.

மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக விவாதிக்க, தமிழக சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டம் வியாழக்கிழமை (டிச. 6) நடைபெற்றது. இதில் பங்கேற்க எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் அனைத்துக் கட்சி எம்எல்ஏ-க்கள் தலைமைச் செயலகத்துக்கு மாலை 4 மணிக்கு வருகை தந்தனர்.

இக்கூட்டத்தில், காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் அணை கட்டும் கர்நாடகத்தின் முயற்சியை மத்திய அரசு தடுத்த நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி ஒருமனதாக தீர்மானம் முன்மொழியப்பட்டது. அதில், மத்திய நீர்வள குழுமம் வழங்கிய அனுமதியை திரும்பப்பெற மத்திய நீர்வள அமைச்சகம் உடனடியாக உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டது.

மேக்கேதாட்டு அணை தொடர்பாக இரண்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது. கர்நாடக அரசு சட்டத்துக்கு புறம்பாக அணை கட்டுவது தவறு என்பதை வலியுறுத்தி தொடரப்பட்ட வழக்கு  நிலுவையில் உள்ளது. காவிரிப்படுக்கையில் எந்த அணையும் கட்டக்கூடாது என்பது தான் எங்கள் வாதம். தற்போது மேக்கேதாட்டுவில் புதிய அணை கட்ட முயற்சி செய்து வருகிறார்கள். இதற்கு எதிராகவும் வழக்கு தொடர்ந்துள்ளோம் என தீர்மானம் மீது துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

தமிழக மக்களின் வாழ்வாதாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மேக்கேதாட்டு அணை குறித்து பேச சட்டப்பேரவையை கூட்டியதற்கு நன்றி. கஜா புயலின் வடு ஆறுவதற்கு முன்பே மேக்கேதாட்டு அணை கட்ட அனுமதி அளித்தது வருத்தம் அளிக்கிறது.

மேக்கேதாட்டு அணை கட்டுவது குறித்து தமிழக அரசு முன்பே உச்ச நீதிமன்றத்தில் தடை பெற்றிருக்க வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையத்தின் 9 பேர் கொண்ட குழுவில், மாநிலத்தின் சார்பில் உறுப்பினர் யாரும் இல்லை. இன்று வரை நிரந்தர உறுப்பினர் நியமிக்கப்படவில்லை.

முழுநேர தலைவரை நியமிக்காமல் ஆணையத்தை கிடப்பில்  போட்டுள்ளதன் உள்நோக்கம் என்ன? காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு முடக்கி வைத்துள்ளது. மாநில அரசுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் மத்திய அரசின் செயல்பாடு உள்ளது. காவிரி நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில், தமிழகத்துக்கு வரும் நீரை குறைக்கும் வகையில் கர்நாடக அரசு அணை கட்டுகிறது.

தமிழகம் முழுமையாக வஞ்சிக்கப்பட்டுள்ளது. எனவே இதை மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானமாக நிறைவேற்றி இருக்க வேண்டும். இருப்பினும் மக்களின் நலனுக்காக முழுமையாக ஆதரிக்கிறேன். தமிழக எம்.எல்.ஏ.க்களை அழைத்துச் சென்று பிரதமரை முதல்வர் சந்தித்திருக்க வேண்டும் என்று தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். இருப்பினும் கஜா புயல் குறித்து பேச மு.க.ஸ்டாலின் அனுமதிக்கு கேட்டதற்கு பேரவைத் தலைவர் மறுத்துவிட்டார். 

ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிகிறேன். மேக்கேதாட்டு அணை கட்ட நீர்வள ஆணையம் அனுமதி தந்தது அனைவரையும் கொதிப்படைய வைத்துள்ளது. மேக்கேதாட்டுவில் அணை கட்ட திட்ட வரைவு அறிக்கை தயாரிக்க கர்நாடகாவுக்கு அனுமதி அளித்த மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கிறோம். இந்த அனுமதியை திரும்பப்பெற மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதை தமிழகத்தில் உள்ள அனைவரும் கடுமையாக எதிர்த்து வருகிறோம். தீர்மானத்தை அனைத்து உறுப்பினர்களும் ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டும். இந்த அனுமதியை திரும்பபெற மத்திய நீர்வள அமைச்சகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com