ஆள் கடத்தல் தடுப்புச் சட்ட மசோதாவை நிறைவேற்ற வேண்டும்: பிரதமருக்கு கமல்ஹாசன் கடிதம்

வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் ஆள் கடத்தல் தடுப்பு மற்றும் பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர்


வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் ஆள் கடத்தல் தடுப்பு மற்றும் பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வெள்ளிக்கிழமை கடிதம் எழுதியுள்ளார். 
கடித விவரம்: ஆள் கடத்தல் சம்பவத்தில் இருந்து மீட்கப்பட்ட சிலரை தமிழகத்தில் சந்தித்து பேசினேன். மன ரீதியாகவும், உடல் ரீதியாக அவர்கள் சந்தித்த வடுக்களையும் என்னிடம் தெரிவித்தனர். அந்த வடுக்களுடனே அவர்கள் காலம் முழுவதும் வாழப் போகின்றனர்.
தமிழகக் காவல்துறையின் புள்ளி விவரத்தின்படி 2016-ஆம் ஆண்டில் மட்டும் தமிழகத்தில் இருந்து 24 ஆயிரம் பேர் கடத்தப்பட்டு, மீட்கப்பட்டுள்ளனர். ஆனால், மீட்கப்படாதவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிக அளவில் இருக்கும். குறிப்பாக, பெண்களும், குழந்தைகளும்தான் அதிக அளவில் கடத்தப்படுகின்றனர். 
ஆள் கடத்தலில் 3-ஆவது இடம்: இந்திய அளவில் ஆள் கடத்தல் சம்பவத்தில் 2015-ஆம் ஆண்டில் தமிழகம் மூன்றாவது இடத்தில் இருந்துள்ளது. வங்கதேசம், ஒடிஸா, மணிப்பூர், அஸாம் போன்ற மாநிலங்களில் இருந்து ஆள்களைக் கடத்தி, தமிழகத்துக்குக் கொண்டு வருகின்றனர். தமிழகத்திலிருந்து கடத்தப்படுபவர்கள் மும்பை, தில்லி போன்ற நகரங்களுக்குக் கொண்டு செல்லப்படுகின்றனர். சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் கடந்த பிறகும் பெண்களுக்கும், குழந்தைகளும் பாதுகாப்பான சூழலை இந்தியாவால் உருவாக்க முடியவில்லை என்பது வேதனைக்குரியதாகும்.
பாஜகவுக்குப் பாராட்டு: இந்த நிலையில், பாஜக அரசால் கொண்டு வரப்பட்ட ஆள் கடத்தல் தடுப்பு மற்றும் பாதுகாப்பு சட்ட மசோதா மாநிலங்களவையில் விவாதத்துக்காக இன்னும் எடுத்துக் கொள்ளப்படாமல் உள்ளது.
முதலில் இப்படியொரு மசோதாவை கொண்டு வந்ததற்காக பாஜக அரசுக்கு என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் ஆள் கடத்தல் தொடர்பான குற்றங்களைத் தடுப்பதற்கும், மீட்கப்பட்டவர்கள் மரியாதையுடன் கூடிய அமைதியான வாழ்க்கை வாழ்வதற்கும் இது சட்டரீதியாக உதவும் என நம்புகிறேன்.
வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இந்த மசோதா விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நம்புகிறேன். பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கூறும் கருத்துகளை ஏற்றும் இந்த மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com