ஊர்க்காவல் படையினர் திடீர் போராட்டம்

சென்னை எழும்பூரில் ஊர்க்காவல் படையினர் திடீரென சனிக்கிழமை கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊர்க்காவல் படையினர் திடீர் போராட்டம்

சென்னை எழும்பூரில் ஊர்க்காவல் படையினர் திடீரென சனிக்கிழமை கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்த விவரம்:
 தமிழகம் முழுவதும் ஊர்க்காவல் படையில் சுமார் 16 ஆயிரம் பேர் உள்ளனர். சென்னையில் ஊர்க்காவல் படையில் சுமார்
 1500 பேர் உள்ளனர். இந்த நிலையில் தெலங்கானா மாநில சட்டப் பேரவைத் தேர்தல் பணிகளில் ஊர்க்காவல் படைவீரர்கள் ஈடுபட்டனர். அவர்கள் சென்னை எழும்பூரில் ஊர்க்காவல் படை அலுவலகத்துக்கு சனிக்கிழமை வந்தனர்.
 அப்போது அவர்கள், தெலங்கானா தேர்தல் பணிக்குச் சென்றவர்களுக்கு ஊக்கத் தொகையை உயர்த்தித் தரும்படி வலியுறுத்தினர். ஆனால், ஊர்க்காவல் படை அதிகாரிகள், அதற்கு மறுப்பு தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள்,
 ராஜரத்தினம் மைதானம் அருகே திடீரென சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 அவர்கள், தெலங்கானா தேர்தல் பணிக்குச் சென்ற வீரர்களுக்கு ஊக்கத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்; மாதம் முழுவதும் பணி வழங்க வேண்டும்; அடையாள அட்டை வழங்க வேண்டும்; சம்பளத்தை உயர்த்த வேண்டும்; பணி நிரந்தரம் செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடுவதாகத் தெரிவித்தனர்.
 இந்தப் போராட்டத்தின் விளைவாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்புக்காக அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர். தகவலறிந்த காவல்துறை அதிகாரிகள், ஊர்க்காவல் படையினரிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள், போராட்டத்தை கைவிட மறுத்தனர்.
 இதையடுத்து சென்னை பெருநகர காவல்துறையின் கிழக்கு மண்டல இணையர் டி.எஸ்.அன்பு, ஊர்க்காவல் படை அதிகாரி மஞ்சித்சிங் ஆகியோர் ஊர்க்காவல் படை வீரர்களிடம் பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தினர்.
 இந்த பேச்சுவார்த்தையில், ஊர்க்காவல்படையினரின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உத்தரவாதம் அளித்தனர். இதன் பின்னரே, ஊர்க்காவல் படையினர் போராட்டத்தை கைவிட்டனர்.
 இந்தப் போராட்டத்தின் விளைவாக மாலை 4.30 மணிக்குத் தொடங்கி இரவு 7 மணி வரை அந்தப் பகுதி பரபரப்புடனும், பதற்றத்துடனும் காணப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com