துணைவேந்தர் லஞ்சம் பெற்ற வழக்கு: குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யத் தாமதம்; ராமதாஸ் கண்டனம்

பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் லஞ்சம் பெற்ற வழக்கில் இதுவரை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யாமல் தாமதம் செய்வதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
துணைவேந்தர் லஞ்சம் பெற்ற வழக்கு: குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யத் தாமதம்; ராமதாஸ் கண்டனம்

பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் லஞ்சம் பெற்ற வழக்கில் இதுவரை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யாமல் தாமதம் செய்வதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: பேராசிரியர் பணிக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் வாங்கியபோது கையும், களவுமாக பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கணபதி கைது செய்யப்பட்டார். அந்த வழக்கில், 10 மாதங்களாகியும் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை.
 வழக்கமாக லஞ்சம் வாங்குபவர்களை காவல்துறையின் லஞ்ச ஒழிப்புப் பிரிவினர் கையும், களவுமாகப் பிடிக்கும்போது, அரசுத் தரப்பு சாட்சி ஒருவரும் உடனிருப்பார். அதன்பின் சந்தர்ப்ப சாட்சியங்களைச் சேகரிக்க வேண்டியதுதான் அவர்களது பணி. இதையும் ஒரு சில நாள்களிலேயே லஞ்ச ஒழிப்புத் துறை சேகரித்து விடும் என்பதால், குற்றப் பத்திரிகையை மிகவும் விரைவாக தாக்கல் செய்ய முடியும். விசாரணைக்கு உள்படுத்தப்பட்ட கணபதி அதிர்ச்சியூட்டும் பல உண்மைகளைக் கூறியுள்ளார்.
 துணைவேந்தர் பதவிக்காக யாருக்கெல்லாம் பணம் கொடுக்கப்பட்டது; பணி நியமனங்கள், ஒப்பந்தங்கள் ஆகியவற்றின் மூலம் கிடைத்த பணத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எவ்வளவு பங்கு தரப்பட்டது என்பன உள்ளிட்ட விவரங்களை வெளியிடப் போவதாக அவர் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. அதையடுத்து அவர் மீதான வழக்கு நீர்த்துப் போகச் செய்யப்பட்டு வருவதாகவும், இவ்வழக்கில் ஊழல் குற்றவாளி விடுதலை செய்யப்படுவது உறுதி என்றும் உயர்கல்வித் துறை வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
 பணி நியமனத்துக்காக லஞ்சம் வாங்கி பிடிபட்ட கணபதி குற்றமற்றவர் என்று விடுவிக்கப்பட்டால், அந்த நாள்தான் நீதியும், நேர்மையும் படுகொலை செய்யப்பட்ட நாளாக இருக்கும். அப்படி ஒரு நிலை ஏற்படக்கூடாது. எனவே, பாரதியார் பல்கலைக்கழக பணி நியமன ஊழல் வழக்கில் உடனடியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புப் பிரிவினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com