புதிய பாடத் திட்டத்தில் ஜவுளியை சேர்க்க நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன்

பள்ளிகளில் புதிய பாடத் திட்டத்தில் ஜவுளி தொடர்பான பாடத்தையும் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
புதிய பாடத் திட்டத்தில் ஜவுளியை சேர்க்க நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன்

பள்ளிகளில் புதிய பாடத் திட்டத்தில் ஜவுளி தொடர்பான பாடத்தையும் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
 ஈரோடு அருகே கங்காபுரம் டெக்ஸ்வேலியில் தென்னிந்திய அளவிலான மாபெரும் ஜவுளிக் கண்காட்சியின் மூன்றாம் நாள் நிகழ்வு மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
 பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், மின்சாரத் துறை அமைச்சர் பி.தங்கமணி, தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் முன்னிலையில், ஈரோடு சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள 25 கல்லூரிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
 விழாவில், அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது: இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் 60 சதவீதம் நூற்பாலைகள் உள்ளன. ஆனால், தமிழகத்தில் இந்த ஆலைகளின் தேவையைப் பூர்த்தி செய்யக்கூடிய வகையில் பருத்தி உற்பத்தி இல்லை. வட மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்து தமிழகத்துக்கு கொண்டு வரப்படுகிறது.
 அதற்கு முக்கிய காரணம் அங்கு இயந்திரத்தில் காற்று அழுத்தம் மூலமாகப் பருத்தி எடுக்கும் நிலை உள்ளது. இதுபோன்ற தொழில்நுட்பங்களை தமிழகத்தில் செயல்படுத்த விவசாயிகள், தொழிலதிபர்களின் ஒத்துழைப்பு அவசியம். வேலைவாய்ப்புகளையும் உருவாக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
 பள்ளிகளில் புதிய பாடத் திட்டத்தில் ஜவுளி தொடர்பான பாடத்தையும் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
 அமைச்சர் பி.தங்கமணி பேசியதாவது: சாயக் கழிவுப் பிரச்னைக்குத் தீர்வு காணும் நோக்கில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நிதி ஒதுக்கினார்.
 ஆனால், அதற்கான இடம் தேர்வு செய்யும்போது பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். எனவே, தொழிலதிபர்கள் பொதுமக்களிடம் உண்மை நிலையை விளக்கிக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த முன்வர வேண்டும் என்றார்.
 அமைச்சர் எம்.சி.சம்பத் பேசியதாவது : புதிய தொழில்முனைவோருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறார். இந்தத் திட்டத்தின்படி 11 துறைகள் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன. அனைத்துக் கட்டணங்களையும் ஒரே தவணையில் ஆன்லைன் மூலமாக செலுத்த முடியும். இந்த திட்டத்தில் இதுவரை 2,211 பேர் விண்ணப்பித்துள்ளனர். அதில், 23 பெரிய நிறுவனங்கள் உள்பட 168 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த 3 மாதங்களில் ரூ. 10 ஆயிரம் கோடி முதலீடு பெறப்பட்டதுடன், 44 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர் என்றார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com