வாழப்பாடி அருகே ரூ. 10 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட தனியார் பள்ளி ஆசிரியர் மீட்பு

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே ரூ. 10 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட தனியார் பள்ளி ஆசிரியரை, பட்டுக்கோட்டை அருகே வாழப்பாடி போலீஸார் மீட்டனர்.
வாழப்பாடி அருகே ரூ. 10 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட தனியார் பள்ளி ஆசிரியர் மீட்பு

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே ரூ. 10 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட தனியார் பள்ளி ஆசிரியரை, பட்டுக்கோட்டை அருகே வாழப்பாடி போலீஸார் மீட்டனர்.
 மேலும், கடத்தல் கும்பலைச் சேர்ந்த ஒருவரைப் பிடித்த போலீஸார், தப்பிச் சென்ற மற்ற நபர்களைப் பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
 தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகில் உள்ள ஊமத்தநாடு பகுதியைச் சேர்ந்த விவசாயி ராஜேந்திரனின் மகன் மணிகண்டன் (30). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த நேயா என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் முடிந்து, சாய் ரித்விக் என்ற ஒன்றரை வயது ஆண் குழந்தை உள்ளது.
 கணினி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியரான மணிகண்டன், சேலம் மாவட்டம் வாழப்பாடியில் குடும்பத்தோடு தங்கி, முத்தம்பட்டியில் இயங்கும் தனியார் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் பணிபுரிந்து வருகிறார்.
 நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை வழக்கம்போல் பள்ளிக்குச் சென்ற மணிகண்டனிடம் செல்லிடப்பேசியில் தொடர்பு கொண்ட மர்மநபர், கஜா புயல் வறட்சி நிவாரணம் சேகரிக்க பேராவூரணி பகுதியிலிருந்து வாழப்பாடிக்கு நண்பர்களுடன் வந்துள்ளதாகவும், ஏதாவது பொருள்கள் வாங்கி கொடுக்குமாறும் கேட்டுள்ளனர்.
 இதை நம்பி பள்ளியிலிருந்து வெளியேறி வாழப்பாடிக்குச் சென்ற ஆசிரியர் மணிகண்டன், செல்லிடப்பேசியில் அழைத்த அந்த நபரைச் சந்தித்தார். பேருந்து நிலையம் அருகிலுள்ள ஒரு கடைக்குச் சென்று மெழுகுவர்த்தி வாங்கிக் கொடுத்தார்.
 அப்போது, அந்த மர்ம நபருடன் காரில் வந்திருந்த கடத்தல் கும்பல் ஆசிரியர் மணிகண்டனை காரில் ஏற்றி கடத்திச் சென்றனர்.
 இந்த நிலையில், மணிகண்டனைக் கடத்தி வைத்திருப்பதாகவும், ரூ. 10 லட்சம் கொடுத்தால்தான் விடுவிப்போம் எனவும் அவரது தந்தை ராஜேந்திரன் மற்றும் அவரது மனைவி நேயா ஆகியோருக்கு செல்லிடப்பேசியில் தொடர்பு கொண்டு கடத்தல்காரர்கள் மிரட்டல் விடுத்தனர்.
 இதில் பதறிப்போன இவரது மனைவி நேயா, தனது கணவர் கடத்தப்பட்டது குறித்து வாழப்பாடி போலீஸில் புகார் செய்தார்.
 போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஆசிரியர் மணிகண்டனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
 வாழப்பாடி டி.எஸ்.பி., சூர்யமூர்த்தி உத்தரவின்பேரில், வாழப்பாடி காவல் ஆய்வாளர் செல்வராஜ், உதவி ஆய்வாளர் மணிமாறன் தலைமையிலான போலீஸார் செல்லிடப்பேசி தகவலின் பேரில் தஞ்சாவூர், பட்டுகோட்டைப் பகுதிக்குச் சென்று இரவோடு இரவாக தீவிர விசாரணை நடத்தினர்.
 ஆசிரியரை கடத்திச் சென்ற மர்ம கும்பல் பட்டுக்கோட்டையை அடுத்த கரம்பயம் கிராமத்தில் பதுங்கியிருப்பது தெரியவந்ததால், அங்கு சென்ற வாழப்பாடி போலீஸார், உள்ளூர் போலீஸாருடன் இணைந்து ஆசிரியர் மணிகண்டனை கடத்திச் சென்ற கும்பலைச் சுற்றி வளைத்தனர்.
 இதையறிந்த கடத்தல் கும்பல், ஆசிரியர் மணிகண்டனை விட்டு விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். கடத்தல் கும்பலிடமிருந்து ஆசிரியரை சனிக்கிழமை அதிகாலை பத்திரமாக மீட்ட வாழப்பாடி போலீஸார், இச் சம்பவத்தில் தொடர்புடைய தேனி மாவட்டத்தைச் சேர்ந்த வீரன் என்கிற ஜெயவீரன் என்ற இளைஞரைப் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com