சித்தியடைந்தார் மூக்குப்பொடி சித்தர்

திருவண்ணாமலையில் பல ஆண்டுகளாகத் தங்கி பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்த மூக்குப்பொடி சித்தர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சித்தியடைந்தார்.
சித்தியடைந்தார் மூக்குப்பொடி சித்தர்

திருவண்ணாமலையில் பல ஆண்டுகளாகத் தங்கி பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்த மூக்குப்பொடி சித்தர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சித்தியடைந்தார்.
 சேலம் மாவட்டம், தலைவாசல் வட்டம், கிழக்கு ராஜாபாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் மொட்டைய கவுண்டர். விவசாயியான இவர், தனது 20-ஆவது வயதில், மனைவி சடையம்மாள் இறந்துவிடவே, வீட்டிலிருந்து வெளியேறி, கரியனூர் மடத்தில் 10 ஆண்டுகள் தங்கி பூஜைகள் செய்து வந்தார். பின்னர், 1975-இல் திருவண்ணாமலைக்கு வந்தார். கிரிவலப் பாதையின் பல இடங்களில் தங்கியிருந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கத் தொடங்கினார். மூக்குப்பொடியை அதிகமாக போட்டபடி ஆசி வழங்கியதால் இவரை "மூக்குப்பொடி சித்தர்' என்று பக்தர்கள் அழைக்கத் தொடங்கினர். அடி அண்ணாமலையில் உள்ள சீனிவாசா உயர்நிலைப் பள்ளியில் அதிக காலம் தங்கியிருந்தார். கடந்த 6 மாதங்களாக சேஷாத்திரி ஆஸ்ரமத்தில் தங்கியிருந்தார்.
 அதிகாலையில் சித்தியடைந்தார்: மூக்குப்பொடி சித்தருக்கு பக்தர்கள் பலரும் உணவு, தேநீர், குடிநீர் கொடுப்பர். ஆனால், இவற்றையெல்லாம் அவர் தள்ளிவிட்டு, தனக்குப் பிடித்தவர்களிடம் சென்று சாப்பாடு, தண்ணீர் கேட்டு வாங்கி சாப்பிடுவார். கடந்த 15 நாள்களாகவே அவர் உணவு, தண்ணீர் என எதையும் உட்கொள்ளாமல் இருந்து வந்தார்.
 இந்த நிலையில், சனிக்கிழமை நள்ளிரவு 12.30 மணி வரை கையை அடிக்கடி அசைத்துக் கொண்டிருந்த மூக்குப்பொடி சித்தர், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணியளவில் ஆஸ்ரம ஊழியர்கள் சென்று பார்த்தபோது அசைவற்று காணப்பட்டார். இதுகுறித்து, சித்தருக்குத் தேவையான உதவிகளைச் செய்து வந்த தொழிலதிபர் ஆகாஷ் ஆர்.முத்துகிருஷ்ணனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் மருத்துவர்களை அழைத்து வந்து பரிசோதித்து பார்த்தபோது, மூக்குப்பொடி சித்தர் சித்தியடைந்தது தெரிய வந்தது.
 ஆஸ்ரமத்தில் திரண்ட பக்தர்கள்: தகவலறிந்த மூக்குப்பொடி சித்தரின் மகன் பெரியசாமி (52), காவல் துறை ஏடிஜிபி மஞ்சுநாதா, ஐ.ஜி. ஜெயராமன் மற்றும் திரளான பக்தர்கள் சேஷாத்திரி ஆஸ்ரமத்தில் திரண்டனர். காலை முதல் மாலை வரை ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து மூக்குப்பொடி சித்தருக்கு அஞ்சலி செலுத்தினர்.
 கிரிவலப் பாதையில் நல்லடக்கம்: மாலை 5.45 மணிக்கு சித்தரின் உடலுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, கிரிவலப் பாதை வாயு லிங்கம் எதிரே மூக்குப்பொடி சாமியார் அன்னதான மடம் என்ற பெயரில் அன்னதானம் வழங்கி வரும் தனி நபருக்குச் சொந்தமான 12 சென்ட் இடத்தில் இரவு 10 மணிக்கு அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com