உயர்நீதிமன்ற கோரிக்கையை ஏற்று ஜாக்டோ - ஜியோ போராட்டம் மீண்டும் ஒத்திவைப்பு: ஸ்ரீதர், சித்திக் கமிட்டி அறிக்கைகளை தாக்கல் செய்ய உத்தரவு

உயர்நீதிமன்ற மதுரை கிளையின் கோரிக்கையை ஏற்று, அரசு ஊழியர்கள் - ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினர் (ஜாக்டோ - ஜியோ), தங்களது போராட்டத்தை


உயர்நீதிமன்ற மதுரை கிளையின் கோரிக்கையை ஏற்று, அரசு ஊழியர்கள் - ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினர் (ஜாக்டோ - ஜியோ), தங்களது போராட்டத்தை வரும் ஜன.7 ஆம் தேதி வரை ஒத்திவைத்துள்ளனர்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 21 மாத நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பினர் கடந்த டிச. 4ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்திருந்தனர். இந்நிலையில், இப்போராட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், பள்ளி மாணவர்களின் அரையாண்டு தேர்வும், கஜா புயல் நிவாரணப் பணிகளும் பாதிக்கப்படும் என்பதால், ஜாக்டோ- ஜியோ அமைப்பினரின் வேலை நிறுத்த போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையிடப்பட்டது. 
இதுதொடர்பாக, கடந்த டிச.3 ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, ஜாக்டோ - ஜியோ கோரிக்கை தொடர்பாக ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவுகளின் அடிப்படையில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அரசு வழக்குரைஞர், இதுகுறித்து டிச. 10 ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்வதாகத் தெரிவித்தார். அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், டிச.10 வரை போராட்டத்தை ஒத்திவைக்குமாறு ஜாக்டோ- ஜியோ அமைப்பினரிடம் கேட்டுக்கொண்டனர். அவர்களும் அதற்கு ஒப்புதல் தெரிவித்து போராட்டத்தை ஒத்திவைத்தனர். இந்நிலையில் இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகள் கே.கே. சசிதரன், ஜி.ஆர். சுவாமிநாதன் ஆகியோர் முன் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. 
அப்போது, ஆஜரான அரசு வழக்குரைஞர், ஸ்ரீதர் கமிட்டி அறிக்கை நவம்பரில் தாக்கல் செய்யப்பட்டு பரிசீலனையில் உள்ளது. மேலும், தமிழக அரசு தற்போது நிதிப் பற்றாக்குறையில் உள்ளது என்றார். இதையடுத்து, நீதிபதிகளின் வேண்டுகோளுக்கிணங்கி, ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் ஆலோசித்து, போராட்டத்தை மீண்டும் ஒத்திவைக்க சம்மதித்தனர்.
அதையடுத்து, கடந்த 2016 ஜன. 1 முதல் 21 மாத நிலுவைத் தொகை வழங்குவது குறித்த சித்திக் குழுவின் அறிக்கை, ஸ்ரீதர் குழுவின் அறிக்கைகளை சீலிட்ட உறையில் வைத்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டும் என்றும், இந்த வழக்கை வரும் ஜன. 7ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாகவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அவசரக் கூட்டம்: இதனிடையே ஜாக்டோ -ஜியோ அவசர உயர்மட்டக் குழுக் கூட்டம் மதுரையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் சுப்பிரமணியன், வின்சென்ட் பால்ராஜ், மகேந்திரன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். பின்னர் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியது:
எங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி டிச. 4 ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தை அறிவித்து இருந்தோம். சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வேண்டுகோளுக்கிணங்க போராட்டத்தை ஒத்தி வைத்தோம். இந்நிலையில், திங்கள்கிழமை (டிச.10) நடைபெற்ற விசாரணையில், எங்களது கோரிக்கை தொடர்பாக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து வரும் ஜன.7-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. எனவே, எங்களது போராட்டத்தையும் ஜன. 7-ஆம் தேதி வரை தற்காலிகமாக ஒத்திவைக்க முடிவு செய்துள்ளோம் என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com