நியமன எம்எல்ஏக்கள் விவகாரத்தில் புதுவை முதல்வர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: பாஜக அறிவிப்பு

நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை விமர்சித்த புதுவை முதல்வர் வே.நாராயணசாமி, காங்கிரஸ் எம்.எல்.ஏ. க.லட்சுமிநாராயணன்


நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை விமர்சித்த புதுவை முதல்வர் வே.நாராயணசாமி, காங்கிரஸ் எம்.எல்.ஏ. க.லட்சுமிநாராயணன் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்படும் என்று மாநில பாஜக அறிவித்தது.
இதுகுறித்து புதுச்சேரியில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் பாஜக மாநிலத் தலைவர் வி.சாமிநாதன் எம்.எல்.ஏ கூறியதாவது:
புதுவை முதல்வர் நாராயணசாமி அரசியல் லாபத்துக்காக கர்நாடக மாநில மேக்கேதாட்டு அணை பற்றி தவறான தகவல்களைப் பரப்பி வருகிறார்.
அந்த மாநில நீர்வளத் துறை அமைச்சர் சிவக்குமார்தான் மேக்கேதாட்டு திட்டத்தை முன்மொழிந்தார்.
கர்நாடகத்தில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிதான் நடக்கிறது. முதல்வர் நேரடியாக கர்நாடக காங்கிரஸிடம் பேசி ஆதரவை வாபஸ் பெறுவோம் என்று எச்சரித்தாலே இந்தப் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும்.
உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் புதுவையில் நியமன எம்எல்ஏக்கள் நியமனம் செல்லும் என்று தீர்ப்பளித்துள்ளன. முதல்வரின் நாடாளுமன்றச் செயலர் லட்சுமிநாராயணன் இந்தத் தீர்ப்பை விமர்சனம் செய்து மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்டம் நடத்த வேண்டும் என அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தில் நீதித் துறை தலையிட முடியாது எனவும் நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர். அதனால், முதல்வரின் நாடாளுமன்றச் செயலர் பொறுப்பில் இருந்து லட்சுமிநாராயணனை நீக்க வேண்டும். முதல்வர் உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் ஓட்டை உள்ளதாகக் கூறியுள்ளார். முதல்வரே உச்ச நீதிமன்றத் தீர்ப்பைக் குறை கூறினால் இந்தத் தீர்ப்பை பொதுமக்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்?
ஏற்கெனவே, நியமன எம்எல்ஏக்கள் விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவைத் தலைவர் மீது தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நிலுவையில் உள்ளது. தற்போது, சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து முதல்வர் மற்றும் அவரது நாடாளுமன்றச் செயலர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுப்போம்.
அரசியல் லாபத்துக்காக நியமன எம்எல்ஏக்கள் நியமிக்கப்படவில்லை. ஆளுநர், முதல்வர் ஆகியோரின் பரிந்துரையின்றி நேரடியாக மத்திய அரசே நியமன எம்எல்ஏக்களை நியமிக்கலாம் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும், காங்கிரஸ் சார்பில் வாதாடிய கபில் சிபல், நியமன எம்எல்ஏக்கள் நியமிக்கப்பட்டதில் ஆட்சேபனை இல்லை. ஆனால், வாக்குரிமை கொடுக்க வேண்டாம் என்றுதான் கூறியிருந்தார்.
புதுவைக்கு மாநில அந்தஸ்து தொடர்பாக பொதுமக்களிடம் கருத்துக் கேட்க வேண்டும். எங்களுடைய லட்சியம் புதுவைக்கு தனிக் கணக்கை ரத்து செய்து, மத்திய அரசிடம் இருந்து 70 சதவீதம் மானியம் பெறவேண்டும் என்பதுதான் என்றார் சாமிநாதன்.
பேட்டியின் போது கட்சியின் மாநில துணைத் தலைவர் செல்வம், பொதுச் செயலாளர்கள் தங்க.விக்ரமன், ரவிச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com