மத்திய அரசு பச்சைக்கொடி: 7 பேர் விடுதலையை ஆளுநர் அறிவிக்க வேண்டும்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பதில் மனு மூலம் மத்திய அரசு பச்சைக்கொடி காட்டியிருக்கும் நிலையில்,
மத்திய அரசு பச்சைக்கொடி: 7 பேர் விடுதலையை ஆளுநர் அறிவிக்க வேண்டும்


பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பதில் மனு மூலம் மத்திய அரசு பச்சைக்கொடி காட்டியிருக்கும் நிலையில், அவர்களின் விடுதலையை தமிழக ஆளுநர் உடனடியாக அறிவிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்கள் விடுதலைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சிலர் தொடர்ந்துள்ள வழக்கை காலாவதியானதாகக் கருதி தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்திருக்கிறது. 
7 தமிழர்கள் விடுதலைக்கு எதிரான முட்டுக்கட்டையை அகற்ற மத்திய அரசின் இந்த நிலைப்பாடு பெரிதும் உதவும். அந்த வகையில் மத்திய அரசின் நிலைப்பாடு வரவேற்கத்தக்கது.
7 தமிழர் விடுதலைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் 2014-ஆம் ஆண்டில் வழக்குத் தொடர்ந்த அப்பாஸ் என்பவர் உள்பட சிலர், கடந்த செப்டம்பர் 26-ஆம் தேதி தமிழக ஆளுநர் பன்வாரிலாலை சந்தித்து உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் தீர்ப்பளிக்கப்படும்வரை பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலைச் செய்யக்கூடாது என்று கோரிக்கை விடுத்தனர். அதைத் தொடர்ந்து 7 பேர் விடுதலை தொடர்பாக முடிவெடுப்பதை ஆளுநர் தாமதப்படுத்தி வந்த நிலையில் தான் மத்திய அரசு இப்படி ஒரு நிலைப்பாட்டை எடுத்துள்ளது. 
மத்திய அரசின் இந்த நிலைப்பாட்டை ஏற்று 7 பேர் விடுதலைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை உச்சநீதிமன்றம் எந்த நேரமும் தள்ளுபடி செய்யலாம்.
அதன் மூலம், இவர்களின் விடுதலைக்கு எதிரான அனைத்து முட்டுக்கட்டைகளும் விலகிவிடும். எனவே, அவர்களை விடுதலை செய்வதற்கான ஆணையை ஆளுநர் பிறப்பிக்க வேண்டும். 
இதுதொடர்பாக தமிழக அரசு பரிந்துரைத்து வரும் 17-ஆம் தேதியுடன் 100 நாள்கள் நிறைவடையவுள்ள நிலையில், அதற்குள்ளாக பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்டோர் சுதந்திரக் காற்றை சுவாசிப்பதை தமிழக அரசும், தமிழக ஆளுநரும் உறுதி செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com