மேக்கேதாட்டு அணை விவகாரம்: விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பை கைவிடுங்கள்: கர்நாடகத்துக்கு தமிழக அரசு மீண்டும் கோரிக்கை

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதை கைவிட வேண்டுமென கர்நாடக அரசை தமிழக அரசு மீண்டும் கேட்டுக் கொண்டுள்ளது. 


மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதை கைவிட வேண்டுமென கர்நாடக அரசை தமிழக அரசு மீண்டும் கேட்டுக் கொண்டுள்ளது. 
இதுதொடர்பாக, கர்நாடக நீர்வளம் மற்றும் சுகாதாரக் கல்வி அமைச்சர் டி.கே.சிவக்குமாருக்கு தமிழக சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் திங்கள்கிழமை கடிதம் எழுதியுள்ளார்.
முன்னதாக, மேக்கேதாட்டு அணை விவகாரத்தால் தமிழகத்துக்கும் பலன் ஏற்படும் எனவும், இந்த விஷயம் தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியைச் சந்தித்துப் பேச நேரம் கேட்டதாகவும், இதுவரை நேரம் ஒதுக்கப்படவில்லை எனவும் கர்நாடக அமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், அமைச்சர் சிவக்குமாருக்கு, தமிழக அமைச்சர் சி.வி.சண்முகம் திங்கள்கிழமை எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணை தொடர்பாக விவாதிக்க தமிழக முதல்வரிடம் நேரம் கேட்டு கடந்த 6-ஆம் தேதியன்று கடிதம் அனுப்பியிருந்தீர்கள். மேக்கேதாட்டு திட்டத்துக்காக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க மத்திய நீர்வள குழுமத்திடம் இருந்து அனுமதி பெற்றதன் வாயிலாக, கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பினை கர்நாடக அரசு மீறியுள்ளது.
மேலும், இதுதொடர்பாக தமிழகத்திடமோ, காவிரி நதிநீர் வடிநிலப் பகுதிகளைச் சேர்ந்த பிற மாநிலங்களிடமோ உரிய அனுமதியையோ அல்லது தகவலையோ தெரிவிக்கவில்லை. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை உறுதி செய்து உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பினை நடைமுறைப்படுத்த காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையத்திடமும் மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக எந்தத் தகவலையும் கர்நாடக அரசு தெரிவிக்கவில்லை.
நீதிமன்றத்தில் விவகாரம்: மேக்கேதாட்டு புதிய அணை தொடர்பாக தமிழக அரசுடன் விவாதிக்க கர்நாடகம் சார்பில் கோரிக்கை விடுத்து தாங்கள் கடிதம் அனுப்பியுள்ளீர்கள். இந்தப் பிரச்னை தொடர்பாக, கடந்த 30-ஆம் தேதியன்று ஒரு வழக்கும், கடந்த 5-ஆம் தேதியன்று தாங்கள் உள்பட தொடர்புடைய பிறர் மீதும் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டுள்ளது. 
எனவே, மேக்கேதாட்டு அணை குறித்த பிரச்னை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்தச் சூழ்நிலையில், இரு மாநிலத்தவரும் சந்தித்துப் பேசுவது என்பது தமிழக அரசு நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்குகளை தாமதிப்பது போலாகும்.
எனவே, மேக்கேதாட்டு அணைக்காக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகளை நிறுத்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். மேலும், தமிழகத்தின் அனுமதியில்லாமல் காவிரி நதிநீர் படுகைப் பகுதிகளில் எந்த கட்டுமானத் திட்டப் பணிகளையும் மேற்கொள்ள வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.
காவிரி வடிநிலப் பகுதிகளில் ஏதாவது கட்டுமானங்களையோ அல்லது அந்த கட்டுமானத்துக்கான விரிவான திட்ட அறிக்கையையோ தயாரிப்பது என்பது காவிரி நதிநீர் தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முற்றிலும் எதிரானதாகும். எனவே, மேக்கேதாட்டு அணை தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதை கைவிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். 
காவிரி நதிநீர் குறித்து உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரியில் வழங்கிய தீர்ப்பினை செயல்படுத்துவதில் கர்நாடக அரசு உறுதியோடு இருக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் என்று அந்தக் கடிதத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com