ஐந்து மாநில பேரவைத் தேர்தலை வைத்து மக்களவைத் தேர்தலை கணிக்க முடியாது:  அமைச்சர் டி.ஜெயக்குமார்

ஐந்து மாநில தேர்தல் முடிவுகளை வைத்து மக்களவைத் தேர்தலை கணிக்க முடியாது என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார். 
ஐந்து மாநில பேரவைத் தேர்தலை வைத்து மக்களவைத் தேர்தலை கணிக்க முடியாது:  அமைச்சர் டி.ஜெயக்குமார்


ஐந்து மாநில தேர்தல் முடிவுகளை வைத்து மக்களவைத் தேர்தலை கணிக்க முடியாது என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார். 
அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கட்சித் தலைமை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பிறகு, அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:-
அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் வருகிறது. நாடாளுமன்ற தேர்தலோடு இடைத்தேர்தலும் வரலாம். அல்லது அதற்கு முன்பாகவே வரலாம். 
எப்போது தேர்தல் வந்தாலும் அதனைச் சந்திக்கத் தயாராக உள்ளோம். அது தொடர்பாகவே மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. தேர்தல் பணிகளுக்காக மாவட்ட செயலாளர்களை முடுக்கிவிடும் கூட்டம் இது. 
ஏற்கெனவே அவர்கள் அனைவரும் களத்தில் உள்ளனர். மேலும் அவர்களை முடுக்கிவிட இந்தக் கூட்டம் நடைபெற்றது என்றார்.
அதன்பின், பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி குறித்து திமுக பேசி வருவது குறித்து கேள்வி எழுப்பினர். இதற்குப் பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார், வலுகுறைந்தவர்களே நான்கு பேரை சேர்த்துக் கொள்வர். பலமாக இருப்பவர்கள் இதுபோன்று சேர வேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் எப்போதும் பலமாக இருக்கிறோம். 
தேர்தல் வரும்போது யார் யார் எங்களுடன் வருகிறார்களோ அவர்களை சேர்த்துக் கொள்வோம். யாரைச் சேர்த்து கொள்வது என்பது குறித்து கட்சித் தலைமை முடிவு செய்யும்.
5 மாநில தேர்தல் முடிவுகள் மக்களின் தீர்ப்பை காட்டுகிறது. நேற்று இருந்த சூழ்நிலை இன்று இல்லை. இன்று இருக்கும் சூழ்நிலை நாளை இருக்காது. 
இந்தத் தேர்தல் முடிவை மட்டும் வைத்துக் கொண்டு எதையும் கணிக்க முடியாது. மக்களவைத் தேர்தல் வரும்போது மக்கள் என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது. 
தேர்தல் கூட்டணிக்கு இது நேரம் அல்ல. தேர்தல் அறிவிக்கப்பட்டு பொதுக்குழு, செயற்குழு கூடித்தான் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும். 
கட்சியின் பொதுக்குழு ஆண்டுக்கு ஒருமுறை கூட்டப்படவேண்டும் என்பது தேர்தல் விதி. எப்போது எங்கே என்று விரைவில் தலைமைக்கழகம் அறிவிக்கும் என்றார் அமைச்சர் டி.ஜெயக்குமார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com