தினமணியின் மகாகவி பாரதியார் விருது வழங்கும் விழா கனவு நனவாகும் விழா: தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன்

ஆசிரியர் கல்கியில் தொடங்கி கவியரசு கண்ணதாசன் வரை எத்தனை எத்தனையோ பேர் கண்ட கனவு எட்டயபுரத்தில் தினமணியின் மகாகவி பாரதியார் விருது வழங்கும்
மூத்த பாரதி அறிஞர் சீனி.விஸ்வநாதனுக்கு தினமணியின் மகாகவி பாரதியார் விருது, ரூ.1 லட்சத்துக்கான காசோலையை வழங்குகிறார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.
மூத்த பாரதி அறிஞர் சீனி.விஸ்வநாதனுக்கு தினமணியின் மகாகவி பாரதியார் விருது, ரூ.1 லட்சத்துக்கான காசோலையை வழங்குகிறார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.

ஆசிரியர் கல்கியில் தொடங்கி கவியரசு கண்ணதாசன் வரை எத்தனை எத்தனையோ பேர் கண்ட கனவு எட்டயபுரத்தில் தினமணியின் மகாகவி பாரதியார் விருது வழங்கும் விழாவால் நனவாகிறது. இது கனவை நனவாக்கும் விழா என்றார் தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன்.
எட்டயபுரத்தில் பாரதி தரிசனம் - ஒரு பன்முகப் பார்வை என்ற நிகழ்ச்சியில் தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் பேசியது:
பாரதிக்கு நினைவு மண்டபம் கட்ட வேண்டும் என ஆசிரியர் கல்கி கனவு கண்டார். இங்கு மிகப்பெரிய கொண்டாட்டங்கள் நடைபெற வேண்டும் என தோழர் ஜீவா கனவு கண்டார். பாரதிக்கு பெரிய விழா எடுத்து விருது கொடுக்க வேண்டும் என கவியரசு கண்ணதாசன் கனவு கண்டார்.அமுதசுரபி ஆசிரியராக இருந்த கலைமாமணி விக்கிரமன், அருப்புக்கோட்டை ஜெயவிலாஸ் அதிபர் தினகரன், புதிய பார்வை நடராஜன் உள்ளிட்ட பலருக்கு மணிமண்டபத்தில் பாரதியின் விழா கோலாகலமாக கொண்டாடப்பட வேண்டும் என்கிற கனவு இருந்தது. அவர்கள் அனைவரின் கனவுகளும் இன்று நனவாகி இருக்கிறது.
கவியரசு கண்ணதாசன் 40 ஆண்டுகளுக்கு முன்பு (1978) கண்ணதாசன் இதழிலே ஒரு தலையங்கம் எழுதியிருக்கிறார். ஒரு நெல்லையப்பரையும், ராமசாமியையும் மட்டுமே பக்கத்தில் வைத்துக் கொண்டு, அவர்கள் ரசித்தது போதும் என்று எழுதிக் குவித்தவன் பாரதி. எனது பாடலை 4 கோடி மக்கள் ரசிக்கிறார்கள். அவர்கள் ரசிக்கும் பொழுதும் பார்க்கும் பொழுதும் எனக்கு உற்சாகம் பிறக்கிறது. அதனால் நான் மேலும் மேலும் எழுதுகிறேன். ஆனால், அந்த வாய்ப்பே இல்லாமல் போனவர் மகாகவி பாரதி.
யார் ரசிக்கிறார்கள், படிக்கிறார்கள் என்பதை அறியாமல் எழுதி எழுதிக் குவித்தவன் பாரதி. அதனால்தான் அனைத்துப் பாடல்களும் மனதின் அடித்தளத்திலிருந்து வந்திருக்கின்றன. அவனது பாடல்கள் எல்லாம் இயற்கை. ஒன்றுகூட செயற்கை இல்லை. கம்பனுக்குப் பிறகு பாரதி ஒருவனே அப்படி பாடியிருக்கிறான். அதன் பின்னர் எவ்வளவோ காவியங்கள் வந்திருக்கின்றன. ஆனால், பாரதிக்குப் பக்கத்தில் அவை நிற்க முடியவில்லை. இன்னும் அந்த இடத்தை நிரப்ப ஒருவருமில்லை.
பாரதி நூற்றாண்டு விழா நினைவு நாளுக்காக தமிழக அரசு ஒரு கோடி ரூபாய் நிதி வழங்க வேண்டும். ரூ. 10 லட்சம் முதலீடு செய்து அதில் கிடைக்கும் வட்டியைக் கொண்டு ஆண்டுதோறும் ஓர் எழுத்தாளருக்கு விருது வழங்க வேண்டும் என்பது கண்ணதாசனின் கனவு. அந்தக் கனவு, எட்டயபுரத்தில் தினமணியின் மகாகவி பாரதியார் விருது வழங்கும் இந்த விழாவால் நனவாகிறது. பாரதி குறித்து பலர் கண்ட கனவை நனவாக்குவதற்கான விழா இன்று இங்கே நடந்து கொண்டிருக்கிறது. 
இனி அடுத்த தலைமுறையும் இங்கு கோலாகலமாக பாரதி விழாவைக் கொண்டாட வேண்டும் என்றார் தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன்.

பாரதியின் அடிச்சுவட்டில் நடைபோடும் தினமணி
மகாகவி பாரதியாரின் அடிச்சுவட்டில் தொடர்ந்து நடைபோடும் தினமணி இந்த ஆண்டு முதல் மூத்த பாரதி அறிஞர் ஒருவருக்கு மகாகவி பாரதியார் விருது வழங்கி கௌரவிக்கிறது என்றார் தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன்.
தினமணி சார்பில் எட்டயபுரத்தில் நடைபெற்ற மகாகவி பாரதியார் விருது வழங்கும் விழாவில் அவர் மேலும் பேசியது: மகாகவி பாரதியார் விருது வழங்கும் விழாவை தினமணி நடத்துவதற்கான காரணத்தை சிலர் கேட்கக்கூடும். மகாகவி பாரதியின் புகழை நிலைநாட்டுவதற்காக அவரது 13-ஆவது நினைவு நாளில் தொடங்கப்பட்ட நாளிதழ் தினமணி. ஆகவே, இவ் விழாவை நடத்தவும், அவரது பெயரில் விருது வழங்கவும் தினமணி கடமைப்பட்டுள்ளது.
தினமணியின் முதல்நாள் இதழில் பாரதியார் குறித்த துணைத் தலையங்கம் இடம் பெற்றிருந்தது. சுதந்திரப் பித்தரான பாரதியாரின் கனவை நிறைவேற்றுவதும், அவர் வகுத்த பாதையில் நடைபோடுவதும் தனது குறிக்கோள் என்று அந்தத் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மகாகவி பாரதியாரின் 
அடிச்சுவட்டைப் பின்பற்றி வருகிற தினமணி நாளிதழின் வரலாற்றுச் சிறப்பு மிகுந்த நிகழ்வாக மகாகவி பாரதியார் விருது வழங்கும் விழா நடைபெறுகிறது.
பாரதியார் மணிமண்டபத்திற்கு இதுவரை நான்கு ஆளுநர்கள் வந்துள்ளனர். 1945- இல் பாரதி மணிமண்டபம் கட்டுவதற்கு அப்போதைய மேற்கு வங்கஆளுநராக இருந்த மூதறிஞர் ராஜாஜியும், நூற்றாண்டு விழாவின்போது அப்போதைய ஆளுநர் குரானாவும், அதன்பின்பு தமிழக முன்னாள் ஆளுநர் பாத்திமாபீவியும் வந்துள்ளனர். இப்போது தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வந்துள்ளார்.
ஆசிரியர் கல்கி, மூதறிஞர் ராஜாஜி, எழுத்தாளர் ஜீவா போன்றோர் இந்த மணிமண்டபத்தை பல்வேறு கனவுகளுடன் எழுப்பினார்கள். மகாகவி நூற்றாண்டு விழாவின் போது அன்றைய முதல்வர் எம்ஜிஆர் பல்வேறு திட்டங்களை அறிவித்தார். அவையெல்லாம் இன்னும்கூட நிறைவேறாமல் இருக்கின்றன. ஆளுநரின் வருகையால் மணிமண்டபம் புத்துயிர் பெற்றுள்ளதோடு, அந்தத் திட்டங்களுக்கும் உயிரூட்டப்பட்டுள்ளது.
இந்த விருதைப்பெறும் சீனி.விஸ்வநாதனின் பெருமைக்கு பின்னால் அவரது கடின உழைப்பு உள்ளது. மகாகவி பாரதிக்காக தனது வாழ்நாளில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக செலவிட்டவர். சங்கத் தமிழுக்கு தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதய்யர் எப்படியோ அதேபோல பாரதி படைப்புகளுக்கு சீனி.விசுவநாதன் என்று கண்ணதாசனால் போற்றப்பட்டவர். 
இந்த விருதை வழங்கும் ஆளுநரும் ஒரு பத்திரிகையாளர். மத்தியப்பிரதேசத்திலிருந்து வெளிவரும் கித்தவாடா பத்திரிகையின் அதிபர். பத்திரிகை அதிபரான ஒருவர் இன்னொரு பத்திரிகை நடத்தும் விழாவில் பங்கேற்று, இதழியலாளரான மகாகவி பாரதியாரின் பெயரில் நிறுவப்பட்டிருக்கும் விருதை வழங்குவது பாரதிக்கு பெருமை சேர்க்கும் நிகழ்வு. 
இந்த விழாவில் பங்கேற்ற மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகள், தமிழகம் மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தினமணி வாசகர்கள், இலக்கிய ஆர்வலர்கள் அனைவருக்கும் நன்றி கூறுகிறேன். இந்த விழா ஆண்டுதோறும் எட்டயபுரம் மணிமண்டபத்தில் வைத்து தொடர்ந்து நடைபெறும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com