பாரதியின் சிந்தனைகளை மக்களிடம் சேர்ப்பது நமது கடமை: இளசை மணியன்

மகாகவி பாரதியாரின் சிந்தனைகளை அனைத்துத் தரப்பு மக்களிடமும் கொண்டுசேர்க்க வேண்டியது தமிழர்களின் கடமை என்றார் பாரதி ஆய்வாளர் இளசை மணியன்.
பாரதியின் சிந்தனைகளை மக்களிடம் சேர்ப்பது நமது கடமை: இளசை மணியன்


மகாகவி பாரதியாரின் சிந்தனைகளை அனைத்துத் தரப்பு மக்களிடமும் கொண்டுசேர்க்க வேண்டியது தமிழர்களின் கடமை என்றார் பாரதி ஆய்வாளர் இளசை மணியன்.
எட்டயபுரத்தில் உள்ள பாரதியார் மணிமண்டபத்தில் பாரதி தரிசனம் ஒரு பன்முகப் பார்வை என்ற தலைப்பில் நடைபெற்ற சொல்லரங்கத்தில் அவர் பேசியது: மகாகவி பாரதியார் சுதந்திரப் போராட்ட வீரர், தேசியக் கவிஞன். தேசிய ஒற்றுமை, பெண்ணுரிமையைப் பற்றி அவர் பல இடங்களில் தனது கருத்துகளை ஆழமாக வலியுறுத்தியுள்ளார். மதங்கள் இருக்கலாம், அதில் பிரிவினைகள்கூட இருக்கலாம்; ஆனால், சச்சரவுகள் இருக்கக் கூடாது என்றார் பாரதி.
இந்து, இஸ்லாம், கிறிஸ்தவர் என யாராக இருந்தாலும் இந்நாட்டில் பிறந்தவர்கள் என்ற தேசிய உணர்வு தேவை என்றார். பிற மதங்களில் உள்ள நற்பண்புகளைக் கேட்டறிந்து செயல்படுவதில் எவ்வித தவறுமில்லை என்றார் பாரதி. 
எனவே, அவரது சிந்தனைகளை அனைத்துத் தரப்பு மக்களிடமும் கொண்டுசேர்க்க வேண்டியது தமிழர்களின் தலையாய கடமை என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து செயல்பட வேண்டும் என்றார் அவர்.
திரைப்பட நடிகர் டெல்லி கணேஷ்: பொங்கல் திருநாள் வரும்போது வாழ்த்து அட்டைகள் அனுப்புவது வழக்கம். அதில் சிலர் வாசகங்களையும், சிலர் வாழ்த்துச் செய்தியையும் குறிப்பிட்டு அனுப்புவார்கள். நான் பொங்கல் வாழ்த்து அனுப்பும்போது பாரதியின் கவிதை வரிகளான கனவு மெய்ப்பட வேண்டும், கைவசமாவது விரைவில் வேண்டும்; தனமும் இன்பமும் வேண்டும், தரணியிலே பெருமை வேண்டும் என்ற எனது மனதிற்குப் பிடித்த வரிகளைக் குறிப்பிட்டு பலருக்கும் அனுப்பி வைத்தேன். அவ்வாறு ஒரு பத்திரிகை ஆசிரியருக்கும் அனுப்பியபோது, அவர் அதனை பார்த்துவிட்டு தனது தலையங்கத்தில்கூட குறிப்பிட்டிருந்தார்.
பாரதியாருக்கு தமிழர்கள் அனைவரும் மரியாதை செலுத்த வேண்டும். பாரதி விழாக்களில் குடும்பம் சூழ பங்கேற்க வேண்டும்.
எழுத்தாளர் து. ரவிக்குமார்: இந்தியாவின் விடுதலைக்காக மட்டுமன்றி சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் பேணப்பட வேண்டியது மிகவும் அவசியம் என்பதை தனது படைப்புகளால் சுட்டிக்காட்டியவர் மகாகவி பாரதியார்.
மனிதர்களை மட்டுமல்ல காக்கையும், குருவியும் எங்கள் ஜாதி என்று பாரதியார் பாடினார். காட்டுப்பறவை போல வாழவேண்டுமென்று ஆசைப்பட்டார். இன்றைக்கும் பெண்ணடிமை, பெண் சுதந்திரம் என்று பேசுபவர்கள் பாரதியாரை மேற்கோள்காட்டாமல் பேசமுடியாத நிலை உள்ளது. ஒவ்வொருவரும் பிறர் ஜாதியை, பிறர் மதத்தைதான் விமர்சனம் செய்கிறார்கள். ஆனால், தம்மை நோக்கி யாரும் விமர்சிக்கத் தயாராக இல்லை. அந்தத் துணிச்சல் பாரதியிடம் இருந்தது. ஆங்கிலேயர்களின் ஏகாதிபத்தியத்தை விமர்சித்த பாரதி, தன்னை நோக்கி எழுந்த விமர்சனத்தையும் ஏற்றுக்கொண்டார். இதற்கு பெரிய துணிச்சல் வேண்டும்.
பேராசிரியர் ஹாஜாகனி: இங்கிலாந்துக்கே கடன் கொடுக்கும் அளவுக்கு பொருள் ஈட்டியவர் ஷேக்ஸ்பியர். ஆனால், இந்திய சுதந்திரத்துக்காக தன்னையே எழுத்துலகுக்கு கொடுத்தவன் பாரதி. ஆகவே, ஷேக்ஸ்பியரிலும் மேம்பட்டவன். எல்லாருடைய இதயத்தையும் இணைத்தவர் பாரதி. மதங்களின் பெயரால் இதயங்களைப் பிளக்க வந்தால், ஜாதிகளின் பெயரால் மக்களைக் கூறுபோட வந்தால் அது தேசத்துக்கு நாச காலமாக முடியும் என்று பாரதி விடுத்த எச்சரிக்கையை ஏற்று செயல்படவேண்டிய இடத்தில் நின்றுகொண்டிருக்கிறோம்.
முன்னாள் துணைவேந்தர் மு. ராசேந்திரன்: பாரதியார் ஒரு தமிழாசிரியராக தனது பணியைத் தொடங்கியவர் என்பதால் நான் பெருமையும், பெருமிதமும் அடைகிறேன். யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம் என்ற பாரதியின் வரிகள் அனைவருக்கும் தெரியும். இதில் உயிர்நாடி இனிதாவது என்பதில்தான்உள்ளது. இனிய மொழிகள் பல இருந்தாலும், தமிழ் மட்டுமே விநாடிதோறும் இனிதாக ஆகிக்கொண்டிருக்கிறது என்கிறார். ஆவது என்பது ஆனது, ஆகிக்கொண்டிருப்பது, ஆகப்போவது என்று மூன்று காலத்துக்கும் பொருந்தும். இதுவே இக்கவிதையின் உயிர்நாடியாகத் திகழ்கிறது. உயிர்நாடி இல்லாத கவிதைகள் நீண்ட நாள்கள் நிற்க முடியாது. பாரதி எப்போதும் ஓர் உள்பொருளை வைத்துப் பாடுவதில்லை. அவரது கவிதைகளில் பல்வேறு உயிரோட்டத் தகவல்கள் பொதிந்திருக்கும். தமிழ்க் கவிதை என்னும் பெண், பாரதி என்ற கவிநாயகனை சரணடைந்தாள் என்பதே மறுக்க முடியாத உண்மை.
எழுத்தாளர் மாலன்: பாரதி எட்டயபுரத்துக்கு மட்டுமல்ல, தமிழர்களுக்கு மட்டுமல்ல, உலகெங்கும் வாழுகிறவர்களுக்கெல்லாம் சொந்தக்காரர். பாரதியின் கவிதை பிரான்ஸ் நாட்டில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, அங்கிருந்த கவிஞர்களெல்லாம் கூடி இது சொல் புதிது, சுவை புதிது, பொருள் புதிது நவ கவிதை என்று கொண்டாடினார்கள். அதனால் தமிழ்நாட்டினுடைய புகழை, தமிழினுடைய புகழை உலகில் சொல்வதற்கு ஒரு கவியரசர் இல்லை என்ற வசை என்னால் ஒழிந்தது என்று இந்த எட்டயபுர மண்ணிலே வந்து சொன்னான்.எனவே, எட்டயபுரத்தில் பாரதிக்கு விழா எடுப்பது என்பது மிகப் பொருத்தமானது. எட்டயபுரத்தில் உள்ள பாரதி மணிமண்டபத்துக்கு பாரதியின் நூல்களைத் திரட்டிக் கொடுக்கும் பொறுப்பை என்னிடம் கொடுத்தால் அதை செய்ய ஆர்வமாக இருக்கிறேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com