புயல் நிவாரண நிதி: ஜேட்லி, ராஜ்நாத் சிங்குடன் அதிமுக எம்பிக்கள் இன்று சந்திப்பு

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்தில் தேவையான நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் தமிழக அரசு கோரியுள்ள நிதியை உடனடியாக வழங்கக் கோரி


கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்தில் தேவையான நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் தமிழக அரசு கோரியுள்ள நிதியை உடனடியாக வழங்கக் கோரி மத்திய அமைச்சர்கள் அருண் ஜேட்லி, ராஜ்நாத் சிங் ஆகியோரை அதிமுக எம்.பி.க்கள் புதன்கிழமை சந்திக்கவுள்ளனர். 
தமிழகத்தில் கடந்த மாதம் கஜா புயல் கரையைக் கடந்தது. அப்போது, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், ராமநாதபுரம், திருச்சி, சிவகங்கை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்கள் பலத்த காற்று, கனமழையால் பாதிப்புக்கு உள்ளாகின. கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தமிழக அரசு மீட்புப் பணிகளையும், நிவாரணப் பணிகளையும் முடுக்கிவிட்டது. புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பார்வையிட்டு, புயல் பாதிப்புக்குள்ளான பகுதிகளுக்கு நிவாரண நிதி கோருவதற்காக பிரதமர் நரேந்திர மோடியை தில்லியில் நவம்பர் 22-ஆம் தேதி சந்தித்தார். அப்போது, ரூ.15 ஆயிரம் கோடி நிவாரண நிதியை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து, மத்திய அரசின் குழு தமிழகத்தில் நேரில் ஆய்வு செய்தது. அதன் அறிக்கை மத்திய உள்துறையிடம் சமர்ப்பிக்கப்பட்டது. தமிழக அரசு ரூ.15 ஆயிரம் கோடி கோரியிருந்த நிலையில், மத்திய அரசு ரூ.300 கோடி மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, இந்த விவகாரத்தை மத்திய அரசிடம் கொண்டு செல்வது என அதிமுக எம்பிக்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டம் தொடங்கியது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை நாடாளுமன்ற அதிமுக உறுப்பினர்கள் புதன்கிழமை சந்திக்கவுள்ளனர்.
இதுகுறித்து நாடாளுமன்ற அதிமுக குழுத் தலைவர் பி.வேணுகோபால் கூறுகையில், கஜா புயல் பாதிப்புக்கு நிவாரண உதவி கோரி தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்தியிருந்தார். அந்த நிதியை விரைந்து விடுவிக்கக் கோரி மத்திய அமைச்சர்கள் அருண் ஜேட்லி, ராஜ்நாத் சிங் ஆகியோரை அதிமுக எம்பிக்கள் சந்திக்க உள்ளோம் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com