ஆர்.கே. நகர் இடைத் தேர்தல் விவகாரம்: தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்

ஆர்.கே. நகரில் 2017-இல் இடைத்தேர்தலின் போது பணம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் உரிய

ஆர்.கே. நகரில் 2017-இல் இடைத்தேர்தலின் போது பணம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தில்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணையத்தில் திமுக எம்பிக்கள் புதன்கிழமை புகார் மனு அளித்தனர்.
திமுக எம்பிக்கள் கனிமொழி, ஆர்.எஸ். பாரதி, திருச்சி சிவா, டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் தலைமைத் தேர்தல் ஆணையத்தில் புதன்கிழமை மாலை தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோராவிடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதிய புகார் மனுவை அளித்தனர். இச்சந்திப்பு குறித்து பின்னர் திமுக அமைப்புச் செயலரும், மாநிலங்களவை திமுக உறுப்பினருமான ஆர்.எஸ். பாரதி செய்தியாளர்களிடம் கூறியதாவது: 
2017-இல் ஆர்.கே. நகரில் இடைத் தேர்தலின் போது, அத்தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட டி.டி.வி. தினகரனுக்காக பணம் கொடுக்கப்பட்டதற்கான பல்வேறு ஆவணங்கள் வருமான வரித் துறையினர் மூலம் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக அந்த ஆவணங்களுடன் அதிராமபுரம் சி-4 காவல் நிலையத்தில் வருமான வரித் துறையினர் புகார் அளித்தனர். அதன்பேரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு தேர்தலும் நிறுத்தப்பட்டது. பின்னர் இடைத்தேர்தல் நடைபெற்றது. 
அந்த முதல் தகவல் அறிக்கையை காவல் துறையினர் முறையாக விசாரிக்கவில்லை. புகாருக்குள்ளானவர்கள் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கவில்லை. மாறாக, அந்த முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தையும் ஏமாற்றி எப்ஐஆர் ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்திற்கும், வருமான வரித் துறைக்கும் இது தொடர்பான தகவல் தெரிவிக்கப்படவில்லை. எனவே, அந்த எப்ஐஆர் ரத்து செய்யப்பட்டது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க நீதிமன்றத்தில் இந்தியத் தேர்தல் ஆணையம் மனு செய்ய வேண்டும் என வலியுறுத்தி திமுக எம்பிக்கள் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளோம்,. 
இந்த மனுவைப் பரிசீலித்த தலைமைத் தேர்தல் ஆணையர், இந்த விவகாரத்தில் சட்டச் சிக்கல் இருப்பதன் காரணமாக சட்ட வல்லுநர்களை அணுகி உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளனர். நல்ல முடிவு கிடைக்கும் என நம்புகிறோம் என்றார் அவர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com