கஜா புயல் நிவாரண நிதி வழங்க நடவடிக்கை: அதிமுக எம்.பி.க்களிடம் ஜேட்லி, ராஜ்நாத் உறுதி

கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கான நிவாரண நிதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிமுக எம்பிக்களிடம் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, உள்துறை அமைச்சர்
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை தில்லி நாடாளுமன்ற அலுவலகத்தில் புதன்கிழமை சந்தித்து மனு அளித்த அதிமுக எம்பிக்கள்.
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை தில்லி நாடாளுமன்ற அலுவலகத்தில் புதன்கிழமை சந்தித்து மனு அளித்த அதிமுக எம்பிக்கள்.


கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கான நிவாரண நிதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிமுக எம்பிக்களிடம் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் புதன்கிழமை உறுதியளித்தனர்.
தமிழகத்தில் கடந்த மாதம் கஜா புயல் கரையைக் கடந்தபோது, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், ராமநாதபுரம், திருச்சி, சிவகங்கை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்கள் பலத்த காற்று, கனமழையால் பாதிப்புக்கு உள்ளாகின. கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தமிழக அரசு மீட்புப் பணிகளையும், நிவாரணப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரண நிதி வழங்குமாறு தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி நவம்பர் 22-ஆம் தேதி நேரில் சந்தித்து வலியுறுத்தினார். அப்போது, ரூ.15 ஆயிரம் கோடி நிவாரண நிதியை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து, மத்தியக் குழு தமிழகத்தில் நேரில் ஆய்வு செய்தது. அதன் அறிக்கை மத்திய உள்துறையிடம் சமர்ப்பிக்கப்பட்டது. தமிழக அரசு ரூ.15 ஆயிரம் கோடி கோரியிருந்தது. ஆனால், மத்திய அரசு ரூ.300 கோடி அளித்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த விவகாரத்தை மத்திய அரசிடம் கொண்டு செல்வது என அதிமுக எம்பிக்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருந்தது. அதன்படி, நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தின் 2-ஆவது நாளான புதன்கிழமை, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் நாடாளுமன்ற அதிமுக குழுத் தலைவர் டாக்டர் பி.வேணுகோபால், துணைத் தலைவர் பி.குமார், மாநிலங்களவை அதிமுக குழுத் தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன் மற்றும் அதிமுக எம்பிக்கள் பலரும் நேரில் சந்தித்தனர். 
அப்போது, கஜா புயல் நிவாரணம் நிதி வழங்கக் கோரி பிரதமருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அளித்திருந்த கடிதத்தை அவரிடம் வழங்கினர். மேலும், நிதியை விரைந்து வழங்குமாறும் கேட்டுக் கொண்டனர்.
இதைத் தொடர்ந்து, மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியை அவரது அலுவலகத்தில் அதிமுக எம்பிக்கள் நேரில் சந்தித்து கஜா புயல் நிவாரணம் தொடர்பான கோரிக்கையை வலியுறுத்தினர். 
பின்னர் இச்சந்திப்பு குறித்தும், அவையில் அமளியில் ஈடுபட்டது தொடர்பாகவும் நாடாளுமன்ற அதிமுக குழுத் தலைவர் பி.வேணுகோபால் கூறுகையில், புயல் நிவாரணத்திற்காக மத்திய அரசு அளித்துள்ள ரூ.300 கோடி நிதி பேரிடர் நிதிக்காக தமிழகத்துக்கு வர வேண்டிய நிலுவை நிதிதான். கஜா புயல் பாதிப்புக்கு என இதுவரை நிதி ஏதும் மத்தியஅரசு ஒதுக்கவில்லை. இது சம்பந்தமாக முன்வைத்த கோரிக்கையை ஆலோசித்து இறுதி செய்வதாக உள்துறை அமைச்சர் உறுதி அளித்துள்ளார். நிதி அமைச்சரும் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், அதிகபட்ச நிதி ஒதுக்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்வதாகவும் உறுதியளித்துள்ளார். மேக்கேதாட்டு அணை விவகாரம், கஜா புயல் நிவாரணம் போன்றவற்றில் தமிழக அரசு முன்வைத்த கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும்அதிமுக புதன்கிழமை அமளியில் ஈடுபட்டது. மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று நோக்கில்தான் அதிமுக அமளியில் ஈடுபட்டு வருகிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com