சட்டப்பேரவைத் தலைவருக்கு பிறப்பிக்கப்படும் நீதிமன்ற உத்தரவுகள் கூட்டாட்சியைப் பாதிக்கும்: அதிமுக எம்எல்ஏக்கள் தரப்பு வாதம்

சட்டப்பேரவைத் தலைவருக்குப் பிறப்பிக்கப்படும் நீதிமன்ற உத்தரவுகள், கூட்டாட்சியைப் பாதிக்கும் என உச்சநீதிமன்றத்தில் தமிழக துணை முதல்வர்
சட்டப்பேரவைத் தலைவருக்கு பிறப்பிக்கப்படும் நீதிமன்ற உத்தரவுகள் கூட்டாட்சியைப் பாதிக்கும்: அதிமுக எம்எல்ஏக்கள் தரப்பு வாதம்


சட்டப்பேரவைத் தலைவருக்குப் பிறப்பிக்கப்படும் நீதிமன்ற உத்தரவுகள், கூட்டாட்சியைப் பாதிக்கும் என உச்சநீதிமன்றத்தில் தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 அதிமுக எம்எல்ஏக்கள் சார்பில் வாதிடப்பட்டது.
11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி திமுக, டிடிவி தினகரன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி, அசோக் பூஷண், எஸ். அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, டிடிவி தினகரன் ஆதரவு மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்குரைஞர் அபிஷேக் மனு சிங்வி முன்வைத்த வாதம்:
11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக கோரி அளிக்கப்பட்ட மனு மீது பேரவைத் தலைவர் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது சட்டரீதியான பாவம். இந்த விவகாரத்தில் நீதிமன்றம் முடிவெடுப்பதே சரியான அணுகுமுறையாகும். தமிழகத்தில் மைனாரிட்டி அரசை பேரவைத் தலைவர் பதவியில் நிலைத்திருக்கச் செய்கிறார். அரசுக்கு எதிராக வாக்களித்த 11 எம்எல்ஏக்களில் சிலர் அமைச்சரவையில் அங்கம் வகித்து வருகின்றனர் என்றார்.
இதைத் தொடர்ந்து, 11 அதிமுக எம்எல்ஏக்கள் சார்பில் மூத்த வழக்குரைஞர் முகுல் ரோத்தகி முன்வைத்த வாதம்: ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது 133 எம்எல்ஏக்களும் ஒன்றுமையாக இருந்தனர். 
ஓ.பன்னீர்செல்வத்துக்கும், எடப்பாடி கே.பழனிசாமிக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடு காரணமாக 122 எம்எல்ஏக்கள் பலத்துடன் எடப்பாடி கே. பழனிசாமி ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். நம்பிக்கைத் தீர்மானத்துக்கு எதிராக கொறடா உத்தரவு எதுவும் பிறப்பிக்காத போது, 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோருவது ஏற்றுக் கொள்ள முடியாதது. நம்பிக்கை வாக்கெடுப்பில் கொறடா உத்தரவு தேவையில்லை என்ற எதிர்தரப்பினரின் வாதத்தையும் ஏற்றுக் கொள்ள முடியாது. பேரவைத் தலைவருக்கு நீதிமன்றம் ஆணை பிறப்பிப்பது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீண்டகாலமாக நிலுவையில் உள்ளது. 
நீதிமன்றங்களில் இரட்டை இலைச் சின்னம் விவகாரம் உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கும் போது, இந்த விவகாரத்தில் பேரவைத் தலைவர் உத்தரவு பிறப்பிப்பது முறையாகுமா?இதுபோன்ற சூழலில் பேரவைத் தலைவருக்கு நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகள் கூட்டாட்சியைப் பாதிக்கும். இந்த விவகாரத்தில் அதிமுக எம்எல்ஏ செம்மலை தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில், சொகுசு விடுதிக்கு (கூவத்தூர்) 11 எம்எல்ஏக்கள் செல்லவில்லை. 
எடப்பாடி கே.பழனிசாமி முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டதை 11 எம்எல்ஏக்களும் ஆதரிக்கவில்லை. ஆளுநருக்கு அளிக்கப்பட்ட பிரமாணப் பத்திரத்திலும் அவர்கள் கையெழுத்திடவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்று வாதிட்டார்.
வாதங்களைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பான விசாரணை வியாழக்கிழமையும் நடைபெறும் எனத் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com