தூத்துக்குடியிலிருந்து சீனா, மலேசியாவுக்கு நேரடி கப்பல் சேவை தொடக்கம்

தூத்துக்குடி வஉசி துறைமுகத்திலிருந்து சீனா, மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு நேரடி கப்பல் சேவை தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடியிலிருந்து சீனா, மலேசியாவுக்கு நேரடி கப்பல் சேவை தொடக்கம்


தூத்துக்குடி வஉசி துறைமுகத்திலிருந்து சீனா, மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு நேரடி கப்பல் சேவை தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடி வஉசி துறைமுகத்தின் மிதவை ஆழம் 14 மீட்டராக அதிகரிக்கப்பட்டதையடுத்து இந்த நேரடி கப்பல் சேவை தொடங்கியுள்ளது. அதன்படி, மலேசியாவில் உள்ள பீனாங் துறைமுகத்திலிருந்து 4,333 சரக்குப் பெட்டகங்களை ஏற்றிச்செல்லும் திறன் கொண்ட பெரிய ரக கப்பல் 320 சரக்குப் பெட்டகங்களுடன் தூத்துக்குடியை புதன்கிழமை வந்தடைந்தது.
இதற்கான வரவேற்பு விழா தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் நடைபெற்றது. நாசிக்கில் இருந்தபடி மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, சென்னையில் இருந்தபடி, தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, தில்லியில் இருந்தபடி மத்திய இணை அமைச்சர்கள் மன்சுகி மண்டவியா, பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் காணொலிக் காட்சி மூலம் கப்பலின் முதல் இறக்குமதி சரக்குப் பெட்டகத்தை கொடியசைத்துத் தொடங்கிவைத்தனர்.
இங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில், துறைமுக பொறுப்புக் கழகத் தலைவர் ரிங்கேஷ்ராய், துணைத் தலைவர் நா. வையாபுரி, ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா, பொலோரோ துறைமுக இயக்குநர் வேர்பக் கேயன், வான்ஹாய் லைன்ஸின் இந்தியத் தலைவர் அபே யாங், தட்சின் பாரத் கேட்வே சரக்குப் பெட்டக முனைய தலைமை நிர்வாக அதிகாரி எரிக் லவன்யூ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதுகுறித்து, ரிங்கேஷ் ராய் கூறியது: இந்த நேரடி சேவை மூலம் ஏற்றுமதி, இறக்குமதியாளர்களுக்கு குறைந்தது ஒரு சரக்குப் பெட்டகத்துக்கு 50 டாலர் மீதமாகும். துறைமுகத்தின் மிதவை ஆழம் 14 மீட்டராக அதிகரிக்கப்பட்ட பிறகு இது சாத்தியமாகியுள்ளது. இது வாராந்திர சேவை ஆகும். 
கோவை, பொள்ளாச்சி, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏற்றுமதியாளர்களுக்கு இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். முதன் முறையாக புதன்கிழமை, தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு வந்திருக்கும் வான் ஹாய் 510 என்ற முக்கிய வழித்தடத்தில் செல்லும் கப்பல் 4,333 சரக்குப் பெட்டகங்களை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டது. 268.8 மீட்டர் நீளம், 32.20 மீட்டர் அகலத்துடன், மணிக்கு 24.4 கி.மீ. வேகத்தில் செல்லும் திறன் கொண்டது.
சீனா இந்தியா 2 என அழைக்கப்படும் இச்சேவையில் 6 கப்பல்கள் சுழற்சி முறையில் வாரம் ஒருமுறை வஉசி துறைமுகத்திலிருந்து மலேசியாவிலுள்ள பீனாங் துறைமுகம், போர்ட் கிளாங் வழியாக சீனாவில் உள்ள ஹாங்காங், கீயூன் டாவ், சாங்காய், நிங்போ, சிக்கோ ஆகிய துறைமுகங்களுக்கும், இந்தியாவில் உள்ள மும்பை நவசேவா துறைமுகத்துக்கும் சென்று தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு பயணிக்கும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com