மாநிலத்தின் பிரச்னை அடிப்படையில் தேர்தல் முடிவுகள் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி

மாநிலத்தின் பிரச்னை அடிப்படையில் தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளதாக ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார்.
மாநிலத்தின் பிரச்னை அடிப்படையில் தேர்தல் முடிவுகள் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி

மாநிலத்தின் பிரச்னை அடிப்படையில் தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளதாக ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கோவை செய்தியாளர்களிடம் புதன்கிழமை அவர் மேலும் கூறியது:
5 மாநில தேர்தலில் பின்னடைவு முன்னடைவு என்ற பேச்சில்லை. பெரிய வித்தியாசமில்லை. ஆயிரம் வாக்குகளில் கூட வெற்றி, தோல்வி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் பிரச்னை அடிப்படையில் தேர்தல் முடிவுகள் வந்திருக்கின்றன. எங்களைப் பொருத்தவரை ஒவ்வொரு மாநிலத்துக்கும் வேறுபாடுகள் உள்ளன. மக்கள் அளித்த தீர்ப்பை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். 
மேக்கேதாட்டு அணை கட்டப்பட்டால் தமிழகம் வரும் தண்ணீர் தேங்கி விடும். தமிழகம் பாலைவனம் ஆகிவிடும். 15 ஆண்டுகள் காவிரிப் படுகை மாநிலங்கள் எந்தவொரு வழக்கையும் தொடரக்கூடாது என்று இறுதித் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை மதித்து கர்நாடகம் நடந்துகொள்ள வேண்டும்.
ஒவ்வொரு முறையும் உபரி நீரைச் சேமிக்கவே அணை கட்டப்படுவதாக கர்நாடக அரசு கூறுகின்றது. 1970} இல் ஹேரங்கி கட்டப்பட்டபோதும் பிறகு கபினி, ஹேமாவதி அணைகள் கட்டும்போதும் எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கிறோம். தற்போது மேக்கேதாட்டுவில் அணை கட்டினால் தமிழகம் பாலைவனமாகும். கடந்த ஆண்டில் குடிநீருக்காக தமிழகம் 3 டிஎம்சி நீரைக் கேட்டது. அப்போது அவர்களிடம் 30 டிஎம்சி இருந்தும் நமக்கு கொடுக்கவில்லை.
வறட்சியால் விவசாயிகள் பாதிக்கப்பட்டபோதும் குடிநீருக்காக கூட கர்நாடகத்தின் முந்தைய அரசு நீரை வழங்க மறுத்துவிட்டது. 2007}இல் நடுவர் மன்றத் தீர்ப்பையும் தற்போது உச்ச நீதிமன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பையும் கர்நாடகம் மதித்தது இல்லை.
நீதிமன்றத் தீர்ப்புகளை கர்நாடகம் மதித்தது என்ற வரலாறே இல்லை. பெங்களூருவின் குடிநீர்த் தேவைக்கு கேஆர்எஸ் அணையிலிருந்தே நீரை எடுக்கலாம். வெறும் 100 கிமீ தொலைவில்தான் அணை உள்ளது. இந்த நிலையில் மேக்கேதாட்டு அணை கட்டப்படுவதைக் கண்டித்து நாம் தொடர்ந்த வழக்கில் 5 வாரங்களில் பதிலளிக்க கர்நாடகத்துக்கும், நீர்வள ஆணையத்துக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அணை கட்டும் பணிகளில் ஈடுபடக்கூடாது எனவும் தெரிவித்துள்ளது.
கோவை மாநகரத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக சுங்கம் - ராமநாதபுரம் சந்திப்பு இடையே 3.6 கி.மீ தொலைவுக்கு ரூ. 213 கோடியில் மேம்பாலம் கட்டப்படும். கோவை, கவுண்டம்பாளையம் சந்திப்பில் ஓரு கி.மீ தொலைவுக்கு ரூ. 60 கோடி மதிப்பில் ஒரு பாலமும், கோவை ஜி.என்.மில் சந்திப்பில் ரூ. 50 கோடி மதிப்பீட்டில் ஒரு பாலமும் கட்டப்படும். இதற்கு பிப்ரவரி இறுதியில் அடிக்கல் நாட்டப்படும் என்றார். 
முன்னதாக ஆனைமலையைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம் ஏற்படுத்தியிருப்பதற்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, எம்எல்ஏ கஸ்தூரி வாசு உள்ளிட்டோர் முதல்வரிடம் நன்றி தெரிவித்தனர்.

மத்திய அரசிடம் கஜா புயல் அறிக்கை 
கஜா புயல் நிவாரணம் தொடர்பாகப் பிரதமரை நேரில் சந்தித்து தமிழ்நாட்டுக்கு ரூ.15 ஆயிரம் கோடி நிவாரணம் வேண்டும் என்று கேட்டுள்ளோம். கூடுதல் தகவல்களுடன் கூடிய அறிக்கை மத்திய அரசுக்கு இன்று (புதன்கிழமை) வழங்கப்பட்டுள்ளது. ஆனால், மத்திய அரசு எவ்வளவு நிதி ஒதுக்குகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றார் முதல்வர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com