அனைத்து அமைச்சர்களுக்கும் முழு அதிகாரம்: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி

துணை முதல்வர் உள்ளிட்ட அனைத்துத் துறை அமைச்சர்களும், சுதந்திரமாகச் செயல்பட முழு அதிகாரத்தை வழங்கியுள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
சேலத்தில் சீர்மிகு நகர திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி. உடன் நகராட்சி,  ஊரக வளர்ச்சி சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ்,
சேலத்தில் சீர்மிகு நகர திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி. உடன் நகராட்சி, ஊரக வளர்ச்சி சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ்,

துணை முதல்வர் உள்ளிட்ட அனைத்துத் துறை அமைச்சர்களும், சுதந்திரமாகச் செயல்பட முழு அதிகாரத்தை வழங்கியுள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
சேலம் மாநகராட்சியின் சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ் ரூ.166.52 கோடி மதிப்பின் கீழ் 8 புதிய திட்டப் பணிகள் அடிக்கல் நாட்டு  விழா,   சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ் ரூ.5.10 கோடி மதிப்பிலான 4 முடிவுற்ற புதிய திட்டப் பணிகள் திறப்பு,   ரூ.27.23 கோடி மதிப்பிலான 3 திட்டப் பணிகள் தொடக்கம்,  3,026 பயனாளிகளுக்கு 1.23 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகியன வியாழக்கிழமை நடைபெற்றன.  விழாவில் முதல்வர் பேசியது:
எந்தத் துறையிலும் முதல்வர் என்ற முறையில் நான் தலையிடவில்லை. துணை முதல்வர் உள்ளிட்ட அனைத்துத் துறை அமைச்சர்களும், சுதந்திரமாகச் செயல்பட முழு அதிகாரத்தை வழங்கி உள்ளேன். அதனால் அனைத்துத் துறைகளும் மிகச் சிறப்பாகச் செயல்படுகின்றன.
கஜா புயல் நிவாரணப் பணிகள் மும்முரம்: கஜா புயல் பாதிப்புக்குள்ளான மாவட்டங்களில், ஏராளமானோர் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து நிற்பது  மிகுந்த மன வேதனை அளிக்கிறது. அங்கு புனரமைப்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கஜா புயலால் 2.21 லட்சம் மின் கம்பங்கள் சேதமடைந்தன. அந்த மின் கம்பங்களை பதிக்கும் பணியில் 26,000 மின்துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். தற்போது 75 சதவீதம் பணி நிறைவடைந்துள்ளது.  வயல் நிறைந்த பகுதிகளில் மின்துறை ஊழியர்கள் தங்கள் தோள்களில் மின்கம்பங்களைச் சுமந்து சென்று அதைப் பதித்து வருகின்றனர். மின் துறை ஊழியர்கள் தங்களது உயிரை கொடுத்து பணியாற்றி வருகின்றனர்.
அதுபோல தூய்மைப் பணியில் 2,400 துப்புரவு பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  அனைத்துத் துறை அதிகாரிகளும் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றனர். அரசு இயந்திரம் முழுவீச்சில் சீரமைப்பு,  நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளது.
 சாலை விபத்துகளில் மனித உயிர்கள் பலியாகி வருகின்றன.  இந்தவகையில், விலை மதிப்பில்லாத  மனித உயிரிழப்புகளைத் தவிர்க்கும் வகையில் புதிய சாலை திட்டம் தேவைப்படுகிறது. 
8 வழிச்சாலை திட்டத்துக்கு ஆதரவு தேவை: சேலம்-சென்னை 8 வழி சாலை திட்டம் நிறைவேற்றப்பட்டால், நேர விரயம் குறையும். பொருளாதார வளர்ச்சியும், தொழில் வாய்ப்புகளும் பெருகும்.  
 தருமபுரி-கோவை சாலை அமைக்கப்பட்டு 10 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் வாகனப் பெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது வாகனப் பெருக்கம் 150 சதவீதமாக அதிகரித்துவிட்டது.
தமிழகத்தில் ஆண்டுக்கு 17 லட்சம் வாகனங்கள் பெருகுகின்றன.  இதன் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் வாகனப் பெருக்கம் மேலும் அதிகரிக்கும். இதனால் சாலை விபத்துகளைத் தடுக்கும் வகையில் வெளிநாடுகளில் உள்ளது போன்ற 8 வழி சாலை திட்டப் பணி தேவைப்படுகிறது. மக்கள் நலன் கருதி அனைவரும் இந்தத் திட்டத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.
உள்ளாட்சி அமைப்பு  என்பது உடலில் உள்ள இதயம்  போன்றது.  தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகள் சிறந்த முறையில் இயங்குகின்றன.  
முன்மாதிரி நகரமாக சேலம் திகழும்: சேலம் நகரில் நவீன பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது.  முன்மாதிரி நகரமாக உருவெடுக்க உள்ளது. சேலம் மக்களுக்கு தனிக்குடிநீர் திட்டத்தை நிறைவேற்றி குடிநீர் விநியோகம் செய்து வருகிறோம்.
மின் தடையில்லாமல் மின்சாரம் வழங்க சாலைகளில் மின் கேபிள்களை பதித்து வரும் பணி நடைபெற்று வருகிறது. 
இதுபோல புதை சாக்கடை திட்ட பணிகளை செய்து வருகிறோம். மாநகர மக்களின் அனைத்து தேவைகளை நிறைவேற்றி வருகிறோம் என்றார் பழனிசாமி.
அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசியது: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாரிசாக  அரசியலில் வந்தார். பின்புற வழியில் வந்து ஆட்சியைப் பிடிக்க ஆர்.கே.நகர் எம்எல்ஏவும், அமமுக துணைப் பொதுச்செயலருமான டி.டி.வி.தினகரன் முயற்சிக்கிறார்.  ஆனால் தமிழக முதல்வர் விவசாயக் குடும்பத்தில் பிறந்து அடிமட்டத்தில் இருந்து ஆட்சியில் நிலைத்து நிற்கிறார் என்று நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
நகராட்சி நிர்வாக ஆணையர் ஜி.பிரகாஷ் பேசியது: தமிழக நகராட்சி நிர்வாகத் துறை சார்பில் குடிநீர் திட்டங்களில் 47 லட்சம் நகர்ப்புற குடியிருப்புகளுக்கு 26 லட்சம் குடியிருப்புகளுக்கு இணைப்பு வழங்கிவிட்டோம். 
ஓராண்டில் 35 லட்சம் குடியிருப்புகளுக்கு இணைப்பு வழங்கப்படும். தமிழகத்தில் 8 ஆண்டுகளில் ரூ.10,000 கோடி முதலீடு செய்து சாலை, உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு வருகிறது. 
நகரில் உள்ள குப்பைமேடுகளை அகற்றி பொழுதுபோக்கு மற்றும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருகிறோம். அந்தவகையில் எருமாபாளையம் குப்பைமேடு பொழுதுபோக்கு மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இந்த பணிகள் 6 முதல் 9 மாதத்தில் முடிவுறும் என்றார்.
விழாவில் ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ், எம்.பி. வி.பன்னீர்செல்வம், எம்எல்ஏ-க்கள் எஸ்.செம்மலை, ஜி.வெங்கடாஜலம், ஏ.பி.சக்திவேல், எஸ்.வெற்றிவேல், ராஜா, மனோண்மணி, மாநகராட்சி ஆணையர் ரெ.சதீஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com