மேக்கேதாட்டு அணைக்கு எதிர்ப்பு:  புதுவை பேரவையில் தீர்மானம்

மேக்கேதாட்டு அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து, புதுவை சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேக்கேதாட்டு அணைக்கு எதிர்ப்பு:  புதுவை பேரவையில் தீர்மானம்

மேக்கேதாட்டு அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து, புதுவை சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
புதுவை சட்டப்பேரவையில் தீர்மானத்தை முன்மொழிந்து முதல்வர் நாராயணசாமி பேசியதாவது:
 புதுவை மாநில மக்களின் நலனுக்கு எதிராகவும் உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்ட காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்புக்கு மாறாகவும் காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு என்ற இடத்தில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு புதுவை சட்டப்பேரவை கண்டனத்தையும் எதிர்ப்பையும் பதிவு செய்கிறது. மேலும், அணை அமைப்பதற்கான பூர்வாங்கத் திட்ட அறிக்கை தயார் செய்வதற்கு கர்நாடக அரசுக்குத் தடையில்லாச் சான்றிதழ் வழங்கிய மத்திய நீர்வள ஆணையத்தின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கப்படுகிறது.
திட்ட அறிக்கை தயார் செய்வதற்கு வழங்கப்பட்ட தடையில்லாச் சான்றிதழை மத்திய நீர்வள ஆணையம் உடனடியாக திரும்பப் பெற மத்திய அரசு உத்தரவிடக் கோரியும், கர்நாடக அரசு இந்த விவகாரத்தில் மேலும் தொடர் நடவடிக்கை ஏதும் எடுக்காமல் தடை விதித்து மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். 
மேலும், மேக்கேதாட்டுவில் கர்நாடக அரசு, அணை ஏதும் கட்டாமல் தடுக்கவும், காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி, புதுவைக்கு வழங்கப்பட்ட நீராதார உரிமைகளைப் பாதுகாக்கவும், புதுவை அரசு நிர்வாக ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஆதரவு அளிப்பது என்ற இந்த சட்டப் பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானத்தை முன்மொழிகிறேன் என்றார் முதல்வர் நாராயணசாமி.
இதைத்தொடர்ந்து, தீர்மானத்தின் மீது உறுப்பினர்களின் கருத்துகளை பதிவு செய்ய பேரவைத் தலைவர் வைத்திலிங்கம் அனுமதித்தார். பாஜக நியமன எம்.எல்.ஏ.க்கள் வி.சாமிநாதன், கே.ஜி.சங்கர், எஸ்.செல்வகணபதி ஆகியோர் பேசுகையில், இந்த விவகாரத்தில் மத்திய அரசை விமர்சிக்காமல், கர்நாடக அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினர். இதற்கு முதல்வர் நாராயணசாமி, பொதுப்பணித் துறை அமைச்சர் ஆ.நமச்சிவாயம் ஆகியோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
தீர்மானம் நிறைவேறியது: இதைத்தொடர்ந்து, தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்து ஆளும் காங்கிரஸின் கூட்டணி கட்சியான திமுக, எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ்,  அ.தி.மு.க.,  மாஹே தொகுதி சுயேச்சை உறுப்பினர் ராமச்சந்திரன், நியமன எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் பேசினர்.
இதையடுத்து, அந்தத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக  பேரவைத் தலைவர் வைத்திலிங்கம் அறிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com