தமிழகத்தில் 4.30 லட்சம் வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன: பிரதமர் மோடி

தமிழகத்தில் பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் மூலம் 4.30 லட்சம் வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
தமிழகத்தில் 4.30 லட்சம் வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன: பிரதமர் மோடி

தமிழகத்தில் பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் மூலம் 4.30 லட்சம் வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
தமிழகத்தில் சேலம்,  கன்னியாகுமரி,  நீலகிரி, நாமக்கல், கோவை உள்ளிட்ட 5 மாவட்ட பா.ஜ.க. தொண்டர்கள், பிரதமருடன் பேசுங்கள் என்ற காணொலி கலந்துரையாடல் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பேசியது:  தமிழ்நாடு மிகவும் வளமையான நாடாகவும், தமிழ்மொழி மிகவும் பழமையான மொழியாகவும் உள்ளது. தமிழ் மக்கள் சிறந்த உழைப்பாளர்களாகவும்,  விவசாயத்தையே கலாசாரமாகவும் கொண்டு விளங்குகின்றனர்.  மத்திய அரசு தமிழக மக்களுக்கு அனைத்துச் சலுகைகளும் செய்து தருகிறது. 
தமிழகத்தில் 12,000 கிராமங்களுக்கு கழிப்பறை, 3,000 கிலோ மீட்டருக்கு கிராமச் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. 27 லட்சம் வீடுகளுக்கு சமையல் எரிவாயு இணைப்பும், 4 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது. பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் மூலம் 4.30 லட்சம் வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. 
 ஆளும் வாய்ப்பு கிடைத்தால் என்னவெல்லாம் செய்வோம் என்று எண்ணிப் பார்க்க வேண்டும். பண வீக்கம் மத்திய தர வர்க்கத்தினரைப் பாதிக்கிறது. காங்கிரஸ் ஆட்சியில் இரட்டை இலக்க பண வீக்கம் இருந்தது.  இப்போது 2.3 சதவீதம் மட்டுமே பண வீக்கம் உள்ளது. இது மத்திய தர வர்க்கத்தினருக்கு செய்த ஒரு சாதனையாகும்.  2010 - இல் ஒரு கிலோ பாசிப் பருப்பின் விலை ரூ.90 முதல் ரூ.95 வரை இருந்தது. ஆனால் பா.ஜ.க ஆட்சிக்கு பின்னால் தற்போது ஒரு கிலோ பாசி பருப்பின் விலை ரூ.70 ஆகக் குறைந்துள்ளது.  துவரம் பருப்பு விலை ரூ.60 ஆக இருக்கிறது. 2010 இல் நிலவரப்படி ரூ.50 ஆக இருந்தது. இப்போதைய நிலவரப்படி ரூ.80 ஆக உயர்ந்திருக்க வேண்டும். ஆனால் ரூ.60 என்ற விலையிலே வைத்துள்ளோம்.
நடுத்தர வர்க்கத்தினருக்கு மிகக் குறைந்த வட்டியில் கடன் அளித்து வருகிறோம். 2013 இல் வீட்டு வசதிக்கு 10.5 சதவீதமாக இருந்த வட்டி தற்போது 8 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.  கல்விக் கடனுக்கு 14 சதவீதமாக இருந்த வட்டியை 10.5 சதவீதமாகக் குறைத்து விட்டோம். அதுமட்டுமல்லாமல்,  ரூ.5 லட்சம் வருமானம் பெற்றால் ரூ.18 ஆயிரம் வரி கட்ட வேண்டி இருந்தது.  இப்போது ரூ.5,200 கட்டினால் போதும். பிரதம மந்திரி மருந்துத் திட்டத்தில் 4,000-க்கும் மேற்பட்ட மருந்துக் கடைகள் திறக்கப்பட்டு,  80 சதவீத குறைந்த விலையில் மருந்து வழங்கப்பட்டு வருகிறது. 
உலகின் பெரிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் 5 லட்சம் குடும்பத்தினர் பயன்பெற்றுள்ளனர். 
மேலும், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆரோக்கிய கவனிப்புகளும் வழங்கப்படுகின்றன. இதன் மூலம் பேறு கால இறப்பு குறைக்கப்பட்டுள்ளது. 
விவசாயிகளைக் காப்பாற்றும் அரசாக மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. முன்னர் ரூ.1.20 லட்சம் கோடி தான் விவசாயக் கடன் கொடுக்கப்பட்டது. இப்போது ரூ.2.11 லட்சம் கோடி கடனாக வழங்கப்பட்டுள்ளது.  ராணுவ வீரர்களுக்கு தாக்குதல் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.  துல்லியத் தாக்குதல் நடத்தியுள்ளோம். நாட்டில் 44 மாவட்டங்களில் 4 ஆண்டுகளில் ஒரு சிறிய அசாம்பாவிதம் கூட இல்லாமல் மாவோயிஸ்ட்டுகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தி உள்ளோம். ஜம்மு-காஷ்மீர் பஞ்சாயத்து தேர்தல் அமைதியாக நடந்து முடிந்துள்ளது. பாதுகாப்புக்கு ஊக்கமளிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com