தொழிற் பயிற்சியாளர்களுக்கு பிப்.5 முதல் தேர்வு

தொழிற் பயிற்சியாளர்களுக்கான தேர்வு பிப்ரவரி 5-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை தெரிவித்துள்ளது.

தொழிற் பயிற்சியாளர்களுக்கான தேர்வு பிப்ரவரி 5-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்தத் துறை புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் தமிழகத்தில் இயங்கி வரும் அனைத்து அரசு மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் பயிலும் பயிற்சியாளர்களுக்கான அகில இந்திய தொழிற்தேர்வுகளின் எழுத்துத் தேர்வுகள் பிப்ரவரி 5 முதல் தொடங்கி நடைபெறவுள்ளது.
இந்தத் தேர்வுகளில் தமிழகம் முழுவதும் உள்ள 100 தேர்வு மையங்களில் சுமார் ஒரு லட்சம் பயிற்சியாளர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதுகின்றனர். இந்தத் தேர்வுகளைக் கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள், மாநகர காவல்துறை ஆணையர்களின் உதவியோடு சிறப்புக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 
அகில இந்திய தொழிற்தேர்வுகளில் இதுவரை தவறான விடைகளுக்கு எதிர்மறை மதிப்பெண்கள் வழங்கப்பட்டு வந்தன. புதுதில்லி, பயிற்சித் துறை தலைமை இயக்ககத்தில் ஜனவரி 30-இல் நடைபெற்ற கூட்டத்தில் மாநில பயிற்சித்துறை இயக்குநர்களால் வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று இந்தத் தேர்வுகளில் இதுவரை வழங்கப்பட்டு வந்த எதிர்மறை மதிப்பெண்கள் நீக்கப்படுவதாக முடிவு செய்யப்பட்டு அதற்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன என்று அதில் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com