பள்ளித் தலைமையாசிரியரை கத்தியால் குத்திய மாணவன் கைது: வேலூர் அருகே பரபரப்பு

வேலூர் மாவட்டம், திருப்பத்தூரில் பள்ளித் தலைமையாசிரியரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய மாணவன் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.
பள்ளித் தலைமையாசிரியரை கத்தியால் குத்திய மாணவன் கைது: வேலூர் அருகே பரபரப்பு

வேலூர் மாவட்டம், திருப்பத்தூரில் பள்ளித் தலைமையாசிரியரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய மாணவன் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.
திருப்பத்தூரில் ரயில் நிலைய சாலையில் உள்ள அரசு நிதி உதவி பெறும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1,200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இங்கு கடந்த ஆண்டு முதல் ஆர்.பாபு தலைமையாசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், திங்கள்கிழமை காலை பாபு பள்ளியில் வழக்கம்போல் வகுப்பறைகளைக் கண்காணித்தபடி வந்துள்ளார். மாடியில் உள்ள வகுப்பறைக்குச் சென்றபோது, வகுப்பறையின் வெளியே 5 மாணவர்கள் அமர்ந்திருந்ததாகக் கூறப்படுகிறது. தலைமையாசிரியரைக் கண்டதும் 4 மாணவர்கள் ஓடிவிட்டனர். மற்றொரு மாணவரான, 11-ஆம் வகுப்பு படிக்கும், திருப்பத்தூரை அடுத்த புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த எம்.ஹரிஹரன் (16), யாரும் எதிர்பாராத வகையில், தனது பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த கத்தியால், தலைமையாசிரியர் பாபுவை வயிறு மற்றும் காது பகுதிகளில் சரமாரியாக குத்திவிட்டு ஓடியுள்ளார். 
இதில், பலத்த காயமடைந்த பாபு கூச்சலிட்டுள்ளார். அவரது சப்தத்தைக் கேட்டு ஓடிவந்த மற்ற ஆசிரியர்கள், பாபுவை மீட்டு, அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
தகவலறிந்த திருப்பத்தூர் சார்-ஆட்சியர் பி.பிரியங்கா பங்கஜம் பள்ளிக்கு நேரில் வந்து விசாரணை நடத்தினார்.
காயமடைந்த தலைமையாசிரியர் பாபு, அதே பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்தபோது, ஏற்கெனவே ஒரு மாணவரால் கத்தியால் குத்தப்பட்டு காயமடைந்தவர். இதனிடையே பள்ளியில் இருந்து தப்பியோடிய மாணவன் ஹரிஹரன், திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தார். அவரை போலீஸார் கைது செய்தனர்.
முதன்மைக் கல்வி அலுவலர் விசாரணை: தகவலறிந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ், சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் சென்று ஆசிரியர்கள், மாணவர்களிடையே விசாரணை நடத்தினார். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தலைமையாசிரியரையும் சந்தித்தார்.
பின்னர் அவர் கூறியதாவது: இச்சம்பவம் குறித்து போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது. தலைமையாசிரியர் தொடர்ந்து மயக்க நிலையில் இருப்பதுடன், அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதால் தற்போதைய சூழலில் அவரிடம் விசாரணை செய்ய இயலவில்லை. தவிர, மாணவனை நேரடியாகச் சந்திக்க இயலாததால், நடந்த விவரம் குறித்து முழுமையாகத் தெரியவரவில்லை. எனினும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மாணவர்களிடையே இத்தகைய தவறான எண்ணங்கள் அதிகரிக்காமல் இருக்க தொடர்ந்து விழிப்புணர்வு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. 
இந்தாண்டு மட்டும் மாவட்டம் முழுவதும் 15 ஆயிரம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனினும், பள்ளிக்கு வெளியில் மாணவர்களின் தொடர்புகளைக் கண்காணிக்க இயலவில்லை. வெளித் தொடர்புகள் காரணமாகவும் மாணவர்களிடையே இத்தகைய வன்முறை எண்ணங்கள் ஏற்பட்டு விடுகின்றன. 
எனினும், தற்போது நடந்துள்ள இச்சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, மாவட்டம் முழுவதும் ஆசிரியர்கள், மாணவர்களிடையே நல்லுறவை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களை கணிவுடன் அணுகவும், அவர்களின் பிரச்னைகளை புரிந்து செயல்படவும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com