ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைய திமுக சார்பாக ரூ.1 கோடி நிதி: ஸ்டாலின் 

உலகப்புகழ் பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைய திமுக சார்பாக ரூ.1 கோடி நிதி அளிக்கப்பட உள்ளதாக அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைய திமுக சார்பாக ரூ.1 கோடி நிதி: ஸ்டாலின் 

சென்னை: உலகப்புகழ் பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைய திமுக சார்பாக ரூ.1 கோடி நிதி அளிக்கப்பட உள்ளதாக அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

உலகின் பழைமையான மொழிகளுக்கெல்லாம் ஹார்வர்டில் தனித் துறை உள்ளது. ஆனால், தமிழ் மொழிக்கு இல்லை. தமிழுக்குத் தனித்துறையைத் தொடங்க வேண்டும் என்றால் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்துக்கு ரூ.42 கோடி வழங்க வேண்டும். உலக அளவில் பெயர் பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழுக்கான இருக்கை அமைக்க கடந்த 20 ஆண்டுகளாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், தற்போது அனுமதி கிடைத்துள்ளது.

ரூ. 42 கோடியில், ரூ. 21 கோடியை உலகில் உள்ள பல்வேறு தமிழ் அமைப்புகளும் அமெரிக்கவாழ் தமிழ் மக்களும் தந்து உதவியுள்ளார்கள். மீதமுள்ள ரூ. 21 கோடியை வரும் 2018-ம் ஆண்டு ஜூன் மாதத்துக்குள் செலுத்த வேண்டும் என ‘ஹார்வர்ட் தமிழ் இருக்கை’ அமைப்பின் தலைவரும், அமெரிக்கவாழ் தமிழருமான மருத்துவர் ஜானகிராமன் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் இருந்து பல்வேறு தரப்பினரும் நிதி அளித்தனர். தமிழக அரசு ரூ.10 கோடி நிதி வழங்கியது. மேலும் நடிகர்கள் கமல்ஹாசன், விஷால் மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் நிதியளித்திருந்தனர்.

இறுதியாக மொத்தமுள்ள தொகையில் இன்னும் ஒரு கோடி ரூபாய் மட்டுமே தேவைப்படுவதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைய திமுக சார்பாக ரூ.1 கோடி நிதி அளிக்கப்பட உள்ளதாக அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள  அறிக்கையில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக திமுக செய்துள்ள பணிகளை பட்டியலிட்டுள்ள  அவர் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் அமைய உள்ள தமிழ் இருக்கை என்பது ஒவ்வொரு தமிழனின் பெருமிதம் என்று தெரிவித்துள்ளார்.

தமிழிருக்கைகாக ஒரு தனிப்பட்ட அரசியல் கட்சி ரூ. 1 கோடி நிதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com