அண்ணா பல்கலை. துணைவேந்தர் பதவி: விண்ணப்பித்தவர்கள் விவரம் விரைவில் வெளியீடு

பெரியார், பாரதிதாசன் பல்கலைக்கழகங்களைப்போல, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்தவர்கள் விவரமும் விரைவில் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.

பெரியார், பாரதிதாசன் பல்கலைக்கழகங்களைப்போல, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்தவர்கள் விவரமும் விரைவில் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.
இத்தகவலை துணைவேந்தர் தேடல் குழு வட்டாரங்கள் தெரிவித்தன.
அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த ராஜாராமின் பதவிக் காலம் கடந்த 2016 மே 26 ஆம் தேதியோடு முடிவுக்கு வந்தது. அதன் பிறகு, துணைவேந்தர் பதவிக்கு மூன்று பெயர்களைத் தெரிவு செய்ய இரண்டு தேடல் குழுக்கள் அமைக்கப்பட்டு கலைக்கப்பட்டன. 
பின்னர், மூன்றாவதாக, உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி வி.எஸ்.சிர்புர்கர் ஒருங்கிணைப்பாளராகவும், தமிழக அரசு பிரதிநிதி ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி என். சுந்தரத்தேவன் மற்றும் பல்கலைக்கழக ஆட்சிக் குழு பிரதிநிதியாக சென்னை ஐஐடி பேராசிரியர் ஞானமூர்த்தி ஆகியோரைக் கொண்ட மூன்றாவது குழுஅமைக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன. துணைவேந்தர் பதவிக்கு இந்தத் தேடல் குழுவிடம் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் பிப்ரவரி 1 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், நூற்றுக்கும் அதிகமான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதே நேரம், பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் சர்ச்சை எழுந்துள்ள நிலையில், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யும்பொருட்டு, சேலம் பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தேடல் குழுக்களின் நடைமுறைகளைப் பின்பற்றி, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்தவர்கள் விவரமும் இணையதளத்தில் வெளியிடப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதுகுறித்து தேடல் குழு வட்டாரங்கள் கூறுகையில், துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் முடிவடைந்துள்ள நிலையில் நூற்றுக்கும் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அந்த விவரங்கள் அனைத்தும் கணினியில் பதிவேற்றம் செய்யும் பணிகள் இப்போது நடைபெற்று வருகின்றன. ஒரு வாரத்தில் இந்தப் பணிகள்முடிவடைந்துவிடும். இந்தப் பணிகள் முடிவடைந்தவுடன், தேடல் குழுத் தலைவரின் ஒப்புதலுடன் விண்ணப்பித்தவர்களின் விவரம் அண்ணா பல்கலைகக்கழக இணையதளத்தில் வெளியிடப்படும். 
துணைவேந்தர் பதவிக்கான மூன்று பெயர்களைத் தெரிவு செய்வதில் நிச்சயம் வெளிப்படைத்தன்மை உறுதிசெய்யப்படும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com