இறக்குமதி வரியால் 50 சதமாகக் குறைந்த முட்டை ஏற்றுமதி: ஓமன் நாட்டுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள வலியுறுத்தல்

ஓமன் நாடு விதித்துள்ள 5 சத இறக்குமதி வரியால், போட்டி நாடுகளின் முட்டை விலையுடன் போட்டி போட முடியாத நிலை நாமக்கல் ஏற்றுமதி முட்டைக்கு ஏற்பட்டுள்ளது.
இறக்குமதி வரியால் 50 சதமாகக் குறைந்த முட்டை ஏற்றுமதி: ஓமன் நாட்டுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள வலியுறுத்தல்

ஓமன் நாடு விதித்துள்ள 5 சத இறக்குமதி வரியால், போட்டி நாடுகளின் முட்டை விலையுடன் போட்டி போட முடியாத நிலை நாமக்கல் ஏற்றுமதி முட்டைக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 3 மாதங்களாக அந்த நாட்டுக்கான முட்டை ஏற்றுமதி 50 சதமாகக் குறைந்துள்ளது.

இதனால் வரும் 10 ஆம் தேதி ஓமன் நாடு செல்லும் பிரதமர் மோடி, அந்த நாட்டுடன் தடையற்ற வர்த்தக உடன்படிக்கை மேற்கொள்ள வேண்டும் என நாமக்கல்லைச் சேர்ந்த முட்டை ஏற்றுமதியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தினமும் 30 லட்சம் முட்டை ஏற்றுமதி:
இந்தியாவில் இருந்து ஜப்பான், வியத்நாம், மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா, பிலிப்பின்ஸ், ஜெர்மனி, தைவான், ஓமன், சவூதி அரேபியா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்கு அதிக அளவில் முட்டை ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இதில் 95 சதவீதம் அளவுக்கு முட்டை நாமக்கல் மாவட்டத்தில் இருந்துதான் ஏற்றுமதியாகிறது. மீதி இருக்கும் ஐந்து சதவீத முட்டைகள் மற்ற மாநிலங்களிலிருந்து ஏற்றுமதி ஆகின்றன.

மத்திய அரசு புள்ளிவிவரப்படி, தினமும் சுமார் 30 லட்சம் முட்டைகள் அரபு நாடுகள், குவைத், ஓமன், மஸ்கட், ஈரான், இராக் மற்றும் பல ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இதில் ஓமன் நாட்டுக்கு மட்டும் மாதம் 3.75 கோடி முட்டை ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு ரூ.18 கோடி. இங்கு முட்டை ஏற்றுமதி அதிகரிக்க முக்கிய காரணம், இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்ய சிறந்த போக்குவரத்து வசதி இருப்பதே. இந்த நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் ஓமன் நாட்டுக்கான முட்டை ஏற்றுமதி எண்ணிக்கை மாதத்துக்கு 2.10 கோடி என்ற அளவில் குறைந்துள்ளது என முட்டை ஏற்றுமதியாளர்கள் தெரிவித்தனர்.

ஓமன் நாட்டுக்கான முட்டை ஏற்றுமதி பாதிப்பு:
இதுகுறித்து நாமக்கல்லைச் சேர்ந்த கால்நடை மற்றும் வேளாண் வணிகர் சங்கத் தலைவர் பி.வி.செந்தில் கூறியது: நாமக்கல்லைப் பொருத்தவரை முட்டை ஏற்றுமதியாளர்களுக்கு ஓமன் நாடு கணிசமான அளவு சந்தை வாய்ப்பு, நிலையான வருவாயை அளித்து வந்தது. இந்த நிலையில், அந்த நாட்டு அரசு, சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைக்கு 5 சத இறக்குமதி வரியை விதித்தது.

இதனால் நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை உயரும்போது, ஓமன் நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் முட்டையின் எண்ணிக்கை குறைகிறது. நாமக்கல் முட்டையைக் காட்டிலும், சவூதி அரேபியா, துருக்கி, உக்ரைன் மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் இருந்து ஓமனுக்கு குறைந்த விலையில் முட்டை அனுப்பப்படுவதால், முட்டை ஏற்றுமதி குறைந்து வருகிறது.

கடந்த அக்டோபர், நவம்பர் மாதங்களில் நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை ரூ.5 வரை உயர்ந்ததால், கடந்த 3 மாதங்களாக ஏற்றுமதி முட்டை விலையும் போட்டி நாடுகளின் முட்டை சந்தை விலையைவிட அதிகமாக இருந்தது. இதனால் வழக்கமாக ஓமன் நாட்டுக்கான முட்டை ஏற்றுமதி எண்ணிக்கை மாதம் 3.75 கோடி என்ற எண்ணிக்கையில் இருந்து, கடந்த 3 மாதங்களாக மாதம் 2.10 கோடி அளவுக்கு குறைந்தது. மேலும், முட்டை ஏற்றுமதி மூலம் கிடைத்த மாத வருவாய் ரூ.18 கோடியில் இருந்து ரூ.8.2 கோடியாகக் குறைந்துள்ளது.

தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தேவை:
இந்த நிலையில், பிரதமர் மோடி வரும் 10 ஆம் தேதி அரசுமுறைப் பயணமாக அரேபியா, ஓமன் நாடுகளுக்குச் செல்கிறார். அப்போது இந்தியாவில் இருந்து ஓமன் நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் முட்டை, காய்கறிகள், பழங்கள், தேங்காய் உள்ளிட்ட வேளாண் உற்பத்திப் பொருள்களை தடையற்ற சுதந்திர வர்த்தக ஒப்பந்தப் பட்டியலில் கொண்டு வர ஓமன் நாட்டுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். இந்த கோரிக்கை குறித்து பிரதமருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது என்றார் பி.வி.செந்தில்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com