மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குள் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை

மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் பாதுகாப்புக் கருதி, கோயிலுக்குள் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குள் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை


மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் பாதுகாப்புக் கருதி, கோயிலுக்குள் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பிப்ரவரி 2ம் தேதி நிகழ்ந்த தீ விபத்து குறித்து முத்துக்குமரன் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, மதுரை மீனாட்சியம்மன் கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. சேதமடைந்த வீர வசந்தராயர் மண்டபத்துக்கு மிகப் பழமையான வரலாறுகள் உண்டு. இவ்வளவு பெருமை வாய்ந்த கோயிலில் நேரிட்ட தீ விபத்தைத் தடுக்கத் தவறிவிட்டோம். 

எனவே, கோயிலுக்குள் தவறான விஷயங்கள் நடைபெறுவதைத் தடுக்கவும், கோயிலின் பாதுகாப்புக் கருதியும், அரசு அதிகாரிகள், பாதுகாவலர்கள், காவல்துறையினர் தவிர மற்றவர்கள் கோயிலுக்குள் செல்போன் பயன்படுத்தத் தடை விதிக்கப்படுவதாக உத்தரவிட்டுள்ளது.

மேலும், மீனாட்சியம்மன் கோயிலுக்கு மத்திய சிறப்புப் பாதுகாப்புப் படை பாதுகாப்பை தமிழக அரசு கோர வேண்டும். மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் ஸ்திரத்தன்மை குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும். 

கோயிலுக்குள் தீத்தடுப்புக் கருவிகள் எப்போதுமே தயாராக இருக்க வேண்டும். தீத்தடுப்புக் கருவிகளை எப்படிக் கையாள்வது என்பது குறித்து கோயில் ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். கோயிலுக்குள் அதிக அளவிலான சிசிடிவி கேமராக்களைப் பொருத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

மேலும், மனுதாரர் தரப்பில், கோயிலுக்குள் இருந்த கடைகளினால்தான் இந்த தீ விபத்து நேரிட்டதாகவும், ஒரு கடையின் உரிமையாளர் திருஷ்டி சுற்றியபோது தீ விபத்து நேரிட்டதாகவும் குற்றம்சாட்டினார்.

இதனை மறுத்த தமிழக அரசு தரப்பு, மின் கசிவே விபத்துக்குக் காரணம் என்று கூறியது. இதைக் கேட்ட நீதிபதிகள், தேவைப்பட்டால் கோயில் முழுவதும் உள்ள மின் இணைப்பையும் மாற்றி அமைக்க உத்தரவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com