மார்ச் 11-இல் காவலர் எழுத்துத் தேர்வு: 5,538 பணியிடங்களுக்கு 3.20 லட்சம் பேர் விண்ணப்பம்

தமிழக காவல்துறையில் காலியாக உள்ள காவலர் பணியிடத்துக்கு நடத்தப்படும் தேர்வில் பங்கேற்க 3.20 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

தமிழக காவல்துறையில் காலியாக உள்ள காவலர் பணியிடத்துக்கு நடத்தப்படும் தேர்வில் பங்கேற்க 3.20 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். வரும் மார்ச் 11-ஆம் தேதி எழுத்துத் தேர்வை நடத்த உள்ளதாக தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தின் உயர் அதிகாரி தெரிவித்தார்.
தமிழக காவல் துறையில் ஆயுதப் படையில் 5,538 மற்றும் சிறைத் துறையில் காலியாக உள்ள 340 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்கள், தீயணைப்புத் துறையில் காலியாக உள்ள 216 தீயணைப்போர் பணியிடங்கள், 46 பின்னடைவுப் பணியிடங்கள் என மொத்தம் 6,140 காலிப் பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்போவதாக கடந்த டிசம்பர் மாதம் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் அறிவித்தது. இத்தேர்வு எழுத விண்ணப்பிப்போர், இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று தேர்வுக் குழுமம் தெரிவித்தது.
இத்தேர்வு எழுதுவதற்கான ரூ.130 கட்டணத்தை நெட்பேங்கிங், பற்று அட்டை, கடன் அட்டை அல்லது அஞ்சலகங்கள் மூலம் மட்டும் செலுத்தும்படியும் அறிவிக்கப்பட்டிருந்தது.
தேர்வுக்கு விண்ணப்பிப்போர் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில், மாவட்ட, மாநகர காவல்துறை அலுவலகங்களில் உதவி மையங்கள் திறக்கப்பட்டன. தொலைபேசி, செல்லிடப்பேசி எண்களும் அறிவிக்கப்பட்டன. இத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் காலக்கெடு கடந்த ஜன. 28-ஆம் தேதியுடன் முடிவடைந்தது.
இதையடுத்து சீருடைப் பணியாளர் குழுமத்தினர், விண்ணப்பங்களை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மொத்தம் 3.20 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. இவர்களில் 10 சதவீதத்தினர் பெண்கள்.
மார்ச் 11-ஆம் தேதி தேர்வு: காவலர்களைத் தேர்வு செய்வதற்காக எழுத்துத் தேர்வை வரும் மார்ச் 11-இல் நடத்துவதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழும உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஏற்கெனவே தேர்வு நடத்துவதற்கு அரசின் அனுமதி கிடைத்துவிட்ட நிலையில், இப்போது தேர்வுக் கூடங்கள் அமைப்பது, தேர்வுக்குரிய கேள்வித்தாள் தயாரிப்பது உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. எழுத்துத் தேர்வுக்கு மொத்தம் 80 மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன.
எழுத்துத் தேர்வில் பொது அறிவுப் பாடத் திட்டத்தில் இருந்து 50 மதிப்பெண் கேள்விகளும், உளவியல் பாடத் திட்டத்தில் இருந்து 30 மதிப்பெண் கேள்விகளும் கேட்கப்படும். எழுத்துத் தேர்வில் குறைந்தபட்சம் 28 மதிப்பெண்கள் பெற வேண்டும். 
விகிதாசாரப்படி தேர்வு: எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறும் நபரே, உடல் திறன் போட்டித் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார். உடல்திறன் போட்டிக்கு 15 மதிப்பெண்கள் வழங்கப்படும். இதில் என்சிசி, என்எஸ்எஸ், விளையாட்டுச் சான்றிதழ்களுக்கு 5 மதிப்பெண்களும் வழங்கப்படும். எழுத்துத் தேர்வில் 28 மதிப்பெண்கள் பெற்றாலும், தேர்ச்சி பெறும் அனைவரும் அதிகபட்ச மதிப்பெண்கள் அடிப்படையில் மொத்த காலிப்பணியிட எண்ணிக்கைக்கு ஏற்றவாறு வகுப்புவாரி விகிதாசாரப்படி 1:5 விண்ணப்பதாரர்கள் மட்டும் அடுத்த கட்டத் தேர்வான உடற்கூறு அளத்தல், உடல்தகுதித் தேர்வு, உடல் திறன் போட்டி, அசல் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றுக்கு அனுமதிக்கப்படுவர்.


விண்ணப்பித்த 19 திருநங்கைகள்

காவலர் தேர்வுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து 19 திருநங்கைகள் விண்ணப்பித்துள்ளனர். தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் நடத்தும் தேர்வுகளில் தற்போது திருநங்கைகள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுகின்றனர்.
கடந்த 2017-இல் நடைபெற்ற காவலர் தேர்வுக்கு அதிகபட்சமாக மாநிலம் முழுவதும் 6.32 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். இருப்பினும் தேர்வை 4.82 லட்சம் பேர் மட்டும் எழுதினர். இவர்களில் 1.50 லட்சம் பெண்களும் அடங்குவர். அத்துடன் 50 திருநங்கைகளும் தேர்வு எழுதினர். தற்போது நடைபெறவுள்ள தேர்வுக்கு 19 திருநங்கைகள் விண்ணப்பித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com