தமிழகத்தில் முதல்முறையாக "நீரா' விற்பனை பொள்ளாச்சியில் துவக்கம்

தமிழகத்திலேயே முதல்முறையாக "நீரா' விற்பனை, பொள்ளாச்சியில் நடைபெற்ற கொங்குநாட்டு கால்நடைத் திருவிழாவில் வெள்ளிக்கிழமை துவங்கியது. 
மணக்கடவு பகுதியில் தென்னை மரத்தின் பாளையில் இருந்து ஐஸ்பெட்டியில் இறக்கப்படும் நீரா.
மணக்கடவு பகுதியில் தென்னை மரத்தின் பாளையில் இருந்து ஐஸ்பெட்டியில் இறக்கப்படும் நீரா.

தமிழகத்திலேயே முதல்முறையாக "நீரா' விற்பனை, பொள்ளாச்சியில் நடைபெற்ற கொங்குநாட்டு கால்நடைத் திருவிழாவில் வெள்ளிக்கிழமை துவங்கியது. 
தமிழகத்தில் 8 கோடிக்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் உள்ளன. குறிப்பாக, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் அதிகமான தென்னை மரங்கள் உள்ளன. நீண்டகாலப் பயிரான தேங்காய்க்கு கட்டுப்படியான விலை கிடைப்பதில்லை என்பது விவசாயிகளின் மிகப் பெரும் குறையாக உள்ளது. 
எனவே, தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க, "நீரா' பானம் இறக்க அனுமதி வழங்க வேண்டும் என்று விவசாயிகள் 50 ஆண்டுகளாக தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துவந்தனர். அண்டை மாநிலமான கேரளத்தில் "நீரா' பானம் மூலம் விவசாயிகள் கூடுதல் வருவாய் ஈட்டுகின்றனர். அதேபோல, தமிழகத்திலும் "நீரா' பானம் இறக்க அனுமதிக்குமாறு விவசாயிகள் கோரி வந்தனர்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா "நீரா' பானம் இறக்க அனுமதி வழங்கும் முயற்சியை மேற்கொண்டார். அவரது மறைவுக்குப் பிறகு, தற்போதைய அரசு "நீரா' பானம் இறக்க அனுமதி வழங்கப்படும் என சட்டப் பேரவையில் அறிவித்தது. அதற்கான சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கும் பணிகள் நடைபெற்று வந்தன. 
இந்நிலையில், தற்போது "நீரா' பானம் இறக்குவதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அரசு அனுமதி தந்தாலும், போதுமான வழிகாட்டுதல், புரிதல் இல்லாததால், "நீரா' பானம் இறக்கி விற்பனை செய்வதற்கு இதுவரை ஆக்கப்பூர்வமான முயற்சிகளை விவசாயிகள் மேற்கொள்ளவில்லை. 
இந்நிலையில், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த விநாயகா தென்னை உற்பத்தி நிறுவனம், கோவை தென்னை உற்பத்தி நிறுவனம் ஆகியவை, மணக்கடவு வாணவராயர் வேளாண்மை கல்லூரியுடன் இணைந்து "நீரா' பானம் இறக்கும் பணியைக் கடந்த சில நாள்களுக்கு முன்னர் துவக்கின. தற்போது, 150 தென்னை மரங்களில் மட்டும் "நீரா' இறக்குவதற்கான பணிகளைச் செய்து வருகின்றனர். 
இந்நிலையில், பொள்ளாச்சியை அடுத்த சமத்தூரில் கொங்குநாட்டு கால்நடைத் திருவிழா துவங்கியது. இத்திருவிழாவில், தமிழகத்தில் முதன்முறையாக "நீரா' பான விற்பனை துவங்கப்பட்டது. கால்நடைத் திருவிழாவுக்கு வந்த மக்கள் பலர் "நீரா' பானத்தை வாங்கிப் பருகிச் சென்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com