நாளை குரூப் - 4 தேர்வு: 20.7 லட்சம் பேர் பங்கேற்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் - 4 தேர்வு ஞாயிற்றுக்கிழமை (பிப்.11) நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் மொத்தம் 20 லட்சத்து 69 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்கின்றனர்.
நாளை குரூப் - 4 தேர்வு: 20.7 லட்சம் பேர் பங்கேற்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் - 4 தேர்வு ஞாயிற்றுக்கிழமை (பிப்.11) நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் மொத்தம் 20 லட்சத்து 69 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்கின்றனர்.
இது தொடர்பாக தேர்வுக்கட்டுப்பாடு அலுவலர் இரா. சுதன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
தேர்வாணைய வரலாற்றிலேயே மிக அதிக அளவில் 20.7 லட்சம் தேர்வர்கள் பங்கேற்கும் நிகழ்வாக இந்தத் தேர்வு நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வுக்கு 20 லட்சத்து 83 ஆயிரத்து 152 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவற்றில் 20 லட்சத்து 69 ஆயிரத்து 274 பேர் தேர்வெழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர். பிப்ரவரி 11-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி முதல் நண்பகல் 1 வணி வரை தேர்வு நடைபெறும். தமிழகத்திலுள்ள 301 தாலுகா மையங்களின் கீழ் மொத்தம் 6 ஆயிரத்து 962 தேர்வுக்கூடங்களில் தேர்வு நடைபெறும். சென்னையில் மட்டும் 1 லட்சத்து 60 ஆயிரத்து 120 பேர், 508 தேர்வுக்கூடங்களில் தேர்வெழுதுகின்றனர். 
தேர்வுக்கூட கண்காணிப்பாளர்கள் 1 லட்சத்து 3,500 பேர், தேர்வுக்கூட ஆய்வாளர்கள் 6 ஆயிரத்து 962 பேரும், நகரும் குழுக்கள்1165 பேரும், பறக்கும் படையினர் 685 பேரும் தேர்வு கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். 
புதிய முறை: தேர்வுமுறையின் மிகப்பெரிய மேம்பாடாக, தேர்வர்களின் பெயர், புகைப்படம், பதிவெண், விருப்பப் பாடம் மற்றும் தேர்வுக்கூடத்தின் பெயர் ஆகிய தனிப்பட்ட விவரங்கள் அச்சடிக்கப்பட்டுள்ள விடைத்தாள்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் தவறாக பதிவெண்ணைக் குறிப்பிடுவதால் மதிப்பெண் குறைக்கப்படும் நடவடிக்கை நடைபெறாது. 
கூடுதல் பாதுகாப்பு: மாவட்ட அளவில் தேர்வுப்பணிகளை ஒருங்கிணைக்க, மாவட்ட ஆட்சியர்கள் முதன்மைக் கண்காணிப்பாளர்களாகவும், மாவட்ட வருவாய் அலுவலர்கள் இணைக் கண்காணிப்பாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு தொடர்பான ஆவணங்களை கரூவூலத்தில் இருந்து எடுத்துச் செல்லவும், தேர்வு முடிந்தவுடன் ஆவணங்களை கருவூலத்தில் ஒப்படைக்கவும் ஆயுதம் ஏந்திய காவலருடன் கூடிய துணை தாசில்தார் தலைமையிலான 5 நபர்களை உள்ளடக்கிய நகரும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்ட மற்றும் தாலுகா மையங்களுக்கு தேர்வுப் பணிகளில் உதவவும், மேற்பார்வையிடவும் தேர்வாணைய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தீவிர கண்காணிப்பு தேவைப்படும் தேர்வுக்கூடங்கள் என மாவட்ட ஆட்சியர்களால் தேர்வு செய்யப்பட்டுள்ள 170 கூடங்களை எல்காட் நிறுவனத்தின் உதவியுடன் தேர்வாணையத்திலிருந்து இணையவழி நேரலை மூலம், கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அனைத்துத் தேர்வுக்கூடங்களிலிருந்தும் தேர்வு நடவடிக்கைகள் அனைத்தும் விடியோ பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காவல்துறை மற்றும் உளவுப்பிரிவினர், கண்காணிப்பினை மேற்கொள்ளும் பொருட்டு தேர்வுக்கூடங்களில் உச்சகட்ட பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தேர்வு நேரத்தில் தடையில்லா மின்சாரம் வழங்க மின்சாரவாரியத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
தேர்வுக்கூடங்களுக்கு தேர்வர்கள் எளிதில் சென்றுவர அன்றைய தினம் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை கூடுதல் சிறப்புப் பேருந்துகளை இயக்க போக்குவரத்துத்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com