டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு: 17.52 லட்சம் பேர் எழுதினர்

தமிழகத்தில் குரூப் 4 தேர்வை 17 லட்சத்து 52 ஆயிரத்து 882 பேர் ஞாயிற்றுக்கிழமை எழுதினர். விண்ணப்பித்த 3.11 லட்சம் பேர் தேர்வு எழுதவில்லை.
சென்னை எழும்பூரில் உள்ள மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குரூப் 4 தேர்வில் பங்கேற்றோர்.
சென்னை எழும்பூரில் உள்ள மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குரூப் 4 தேர்வில் பங்கேற்றோர்.

தமிழகத்தில் குரூப் 4 தேர்வை 17 லட்சத்து 52 ஆயிரத்து 882 பேர் ஞாயிற்றுக்கிழமை எழுதினர். விண்ணப்பித்த 3.11 லட்சம் பேர் தேர்வு எழுதவில்லை.
தமிழகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள், இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள் உள்பட மொத்தம் 9,351 பணியிடங்களுக்கான தேர்வுக்கு மொத்தம் 20 லட்சத்து 83,852 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 20 லட்சத்து 69 ஆயிரத்து 274 பேர் தகுதி பெற்றனர். 301 தாலுகாக்களில் 6,962 மையங்களில் எழுத்துத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்குத் தொடங்கியது.
புதிய நடைமுறைகள் அறிமுகம்: செல்லிடப்பேசி, கால்குலேட்டர், புத்தகங்கள், கைக்கடிகாரம் போன்றவற்றை தேர்வுக் கூடத்துக்குள் கொண்டுவரக் கூடாது என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டிருந்ததால் தேர்வர்கள் அவற்றை வெளியே வைத்துச் சென்றனர். 
முறைகேடுகளைத் தவிர்க்கவும், தவறுகளைக் குறைப்பதற்காகவும் தேர்வர்களின் பெயர், புகைப்படம், பதிவு எண், விருப்பப் பாடம், தேர்வுக் கூடத்தின் பெயர் ஆகியவை அச்சிடப்பட்ட விடைத் தாள் இத்தேர்வில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. தேர்வுத்தாளில் விடையளிக்காமல் விடும் கட்டங்களின் எண்ணிக்கைப் பற்றிய விவரத்தைக் குறிப்பிட தனிக் கட்டம் விடைத் தாளில் இடம்பெற்றிருந்தது. இதற்காக தேர்வர்களுக்கு தேர்வு நேரம் முடிந்த பின்னர் கூடுதலாக 5 நிமிஷங்கள் வரை அவகாசம் வழங்கப்பட்டது. 
தேர்வுப் பணியில் 1.25 லட்சம் பேர்: குரூப் 4 தேர்வுப் பணிகளில் தமிழகம் முழுவதும் 1.25 லட்சம் ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்கள் ஈடுபட்டனர். தேர்வர்களின் உடைமைகள், செல்லிடப்பேசி, வாகனங்கள் ஆகியவற்றைப் பாதுகாக்கவும், பிரச்னைகள் ஏற்படுவதைத் தடுக்கும் வகையிலும் ஒவ்வொரு தேர்வு மையத்துக்கு வெளிப் பகுதியில் அந்தந்த பகுதி போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். அனைத்துத் தேர்வுக் கூடங்களும் விடியோ பதிவு செய்யப்பட்டன.
84.71 சதவீத தேர்வர்கள்: அரசுப் பணியின் மீதுள்ள ஈர்ப்புக் காரணமாக இந்த முறை தேர்வில் 84.71 சதவீத தேர்வர்கள் பங்கேற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 
காத்திருந்த பெற்றோர்-கணவர்கள்: குரூப் 4 தேர்வு எழுதுவதற்காக வந்த பெண்களுக்காக உடன் வந்தவர்கள் தேர்வு மையங்களில் காத்திருந்தனர்.
ஆட்சியர் ஆய்வு: சென்னையில் 508 மையங்களில் 1.60 லட்சம் பேர் தேர்வெழுதினர். சென்னை கந்தசாமி நாயுடு ஆடவர் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் ஆய்வு செய்தார். 
போக்குவரத்து நெரிசல்: குரூப் 4 தேர்வு காரணமாக சென்னையில் ஞாயிற்றுக்கிழமை காலை, பிற்பகலில் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காலை 8 முதல் 10 மணி வரையிலும், பிற்பகல் 1.30 மணி முதல் 2.30 மணி வரையிலும் ராஜீவ்காந்தி சாலை, அண்ணாசாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலைகளில் நெரிசல் ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com