சிக்கலான சிகிச்சைகளைத் தாண்டி பலரது பிரார்த்தனையால் அதே குறும்புடன் குணமடைந்து வரும் தன்யஸ்ரீ

மிகமோசமான விபத்தில் சிக்கி கோமா நிலையில் இருந்த சிறுமி தன்யஸ்ரீ, மருத்துவமனையில் கண் விழித்த போது, தன்னை யார் என்று தந்தை கேட்க, அப்பா என சொன்ன பதிலைக் கேட்ட பிறகுதான் பெற்றோருக்கு போன உயிர் திரும்பிய
சிக்கலான சிகிச்சைகளைத் தாண்டி பலரது பிரார்த்தனையால் அதே குறும்புடன் குணமடைந்து வரும் தன்யஸ்ரீ


சென்னை: மிகமோசமான விபத்தில் சிக்கி கோமா நிலையில் இருந்த சிறுமி தன்யஸ்ரீ, மருத்துவமனையில் கண் விழித்த போது, தன்னை யார் என்று தந்தை கேட்க, அப்பா என சொன்ன பதிலைக் கேட்ட பிறகுதான் பெற்றோருக்கு போன உயிர் திரும்பியது.
 
ஜனவரி 28ம் தேதி அப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்று கற்பனை கூட செய்திருக்க முடியாது. தண்டையார்பேட்டையில் 4வது மாடியில் இருந்த சிவா (24) என்ற இளைஞர் கால் தவறி, அங்கே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த 4 வயது சிறுமி தன்யஸ்ரீ மீது விழுந்தார்.

இதில் சிவாவை விட சிறுமி தன்யஸ்ரீக்கு பலத்த அடி. சிறுமியின் தலையில் பலத்த அடியும், பல எலும்பு உடைப்புகளும் ஏற்பட்டன. உடனடியாக அவர் தண்டையார்பேட்டையில் உள்ள அப்பல்லோ குழந்தைகள் நல மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

தன்யஸ்ரீக்கு மிக முக்கியமான தருணம் என்று கூறப்படும் விபத்தில் சிக்கிய சில நொடிகளில் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டதே அவர் உயிர் பிழைக்க முக்கியக் காரணம் என்கிறார் அப்பல்லோ மருத்துவமனையின் ஐசியு பிரிவுக்கான குழந்தைகள் நல மருத்துவர் சுசித்ரா ரஞ்சித்.

சிறுமி தன்யஸ்ரீயின் மூளை வீங்கிக் கொண்டே போனது. இதனால், மூளையின் கீழ் இருக்கும் உடல் பாகங்களுக்கு அழுத்தம் ஏற்பட்டு அவை மண்டை ஓட்டை அழுத்தின. இது உடலின் மிக முக்கிய செயல்பாடுகளான மூச்சு விடுதல் மற்றும் ரத்த ஓட்டத்தை நிறுத்தி விடும் அபாயத்தை ஏற்படுத்தும். மூளையின் வீக்கத்தால், ஒரு வேளை மூளைச்சாவு ஏற்படும் அபாயமும் இருந்தது என்கிறார் மற்றொரு மூத்த மருத்துவர் இந்திரா ஜெயக்குமார்.

தொடர் சிகிச்சையின் முக்கிய நிகழ்வாக 3வது நாள் மிக முக்கிய அறுவை சிகிச்சை செய்து, தன்யஸ்ரீயின் மண்டை ஓட்டின் சிறு பகுதியை அகற்றினோம். இதனால், மூளையின் வீக்கத்தால், மண்டை ஓட்டுக்கு எந்த அழுத்தமும் ஏற்படாமல் இருந்தது. தற்போது மூளை வீக்கம் ஓரளவுக்குக் குறைந்துள்ளது. தொடர்ந்து அவரது மூளை வீக்கத்தின் அளவு கண்காணிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.

தன்யஸ்ரீயின் தலையில் இருந்து நீக்கப்பட்ட மண்டை ஓடு ரத்த வங்கியில் பத்திரமாக பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது. மூளை வீக்கம் குறைந்ததும் 2 மாதத்துக்குப் பிறகு தன்யஸ்ரீயின் மண்டை ஓடு அவரது தலையில் மீண்டும் பொறுத்தப்படும் என்று மருத்துவர் சுசித்ரா கூறியுள்ளார்.

குழந்தை வேகமாகக் குணமடைந்து வருவதாகவும், விரைவில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பலாம் என்றும் மருத்துவர்கள் நேற்று கூறியதைக் கேட்ட அவரது தந்தை ஸ்ரீதர், தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாருக்கு நன்றி தெரிவித்தார். குழந்தையின் மருத்துவ செலவுக்கு உதவுவதாகக் கூறியதற்காக அவர் தனது நன்றியைக் கூறினார்.

"இது தவிர, ஏராளமான தன்னார்வலர்கள், தன்னலமற்ற அமைப்புகள், பொதுமக்கள் பலரும் தங்களால் இயன்ற நிதியுதவியை தன்யஸ்ரீ சிகிச்சைக்காக அளித்துள்ளனர். நான் இதுவரை பார்த்திராத நபர்கள் கூட என் குழந்தைக்கு உதவியுள்ளனர். எத்தனையோ நல் உள்ளங்களின் பிரார்த்தனையால்தான் இன்று என் குழந்தை கவலைக்கிடமான நிலையில் இருந்து மீண்டு குணமடைந்து வருகிறார்" என்றார் நெகிழ்ச்சியோடு.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com