எல்பிஜி டேங்கர் லாரி வேலை நிறுத்தத்தால் சென்னைக்குத்தான் விரைவில் ஆபத்து

எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் நேற்று தொடங்கியிருக்கும் நிலையில் விரைவில் அது வாபஸ் பெறப்படவில்லை என்றால் சென்னைவாசிகள் தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.
எல்பிஜி டேங்கர் லாரி வேலை நிறுத்தத்தால் சென்னைக்குத்தான் விரைவில் ஆபத்து


சென்னை: எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் நேற்று தொடங்கியிருக்கும் நிலையில் விரைவில் அது வாபஸ் பெறப்படவில்லை என்றால் சென்னைவாசிகள் தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.

வாடகை டெண்டரை மண்டல அளவில் நடத்த மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள் முன்வராததால், தென் மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை நேற்று தொடங்கினர்.

இந்த வேலை நிறுத்தப் போராட்டம் இன்னும் இரண்டு நாட்களுக்கும் மேல் நீடித்தால் சென்னையில் நிச்சயம் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும். ஏன் என்றால், சென்னை போன்ற பெருநகரங்களுக்கு சிலிண்டர் தேவை என்பது மிக அதிகம். அதே சமயம், கோவை, மதுரை போன்ற நகரங்கள் இன்னும் ஒரு சில நாட்கள் கூடுதலாகத் தாக்குப்பிடிக்கும்.

தொழிற்சாலைகளைப் பொறுத்தவரை, ஆலைகளுக்கு வழங்கப்படும் எரிவாயு சிலிண்டர்கள் வேகமாக காலியாகி வருவதாகவும், இதனால், விரைவில் இந்த சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.

சென்னையில் உள்ள சிலிண்டரில் எரிவாயு நிரப்பும் ஆலைகள் மூலமாக இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு எரிவாயு உருளைகளை நிரப்பி வழங்க முடியும். மதுரை, திருச்சி, கோவை, சேலத்தில் உள்ள எரிவாயு ஏஜென்ஸிகளிடம் கைவசம் இருக்கும் எரிவாயு உருளைகளால் மேலும் சில நாட்களுக்கு தேவையை பூர்த்தி செய்ய முடியும்.

ஆனால், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள கேஸ் ஏஜென்ஸி நிறுவனங்களால் வியாழக்கிழமை வரை மட்டுமே எரிவாயு உருளைகளை வழங்க முடியும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகம், கர்நாடகம், கேரளம், புதுச்சேரி, ஆந்திரம், தெலங்கானா ஆகிய 6 மாநிலங்களை உள்ளடக்கிய தென் மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் நாமக்கல்லில் உள்ளது. இதன் உறுப்பினர்களுக்குச் சொந்தமான சுமார் 4,500 டேங்கர் லாரிகள் இந்தியா முழுவதும் இயங்கி வருகின்றன. 

இவை இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மத்திய அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனங்களின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சமையல் எரிவாயுவை மொத்தமாக டேங்கர்களில் எடுத்துச் சென்று, நாடு முழுவதும் உள்ள எரிவாயு சிலிண்டர்கள் நிரப்பும் பாட்டிலிங் மையங்களுக்கு கொண்டு சேர்க்கின்றன. 

இந்த நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் 2018-2023 ஆம் ஆண்டுக்கான லாரி வாடகை டெண்டரை கடந்த மாதம் அறிவித்தன. இதில் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள மண்டல அளவிலான டெண்டர் முறை ரத்து செய்யப்பட்டு, மாநில அளவில் டெண்டர் நடைமுறைபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த புதிய டெண்டர் நடைமுறையில், ஒரு வாகனம் எந்த மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதோ, அந்த மாநிலத்தில் நடைபெறும் டெண்டரில் மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஏற்கெனவே இருந்த டெண்டரில் தென் மண்டலத்தில் உள்ள 6 மாநிலங்களுக்கும் ஒரே டெண்டர் அறிவிக்கப்பட்டு, வாடகை இறுதி செய்யப்படும். இந்த அறிவிப்பால் ஒவ்வொரு மாநிலத்திலும் டெண்டர் நடத்தப்படுகிறது. இதனால் பிற மாநில பதிவெண் கொண்ட லாரிகள், மற்ற மாநிலங்களில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தென் மண்டலத்தில் இப்போது மொத்தம் உள்ள 7,500 லாரிகளில் 3,000-க்கும் மேற்பட்ட லாரிகள் வேலை இழக்கும் நிலை ஏற்படும். இதனால் மண்டல அளவிலான டெண்டரையே மீண்டும் நடத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். 

ஆனால் மத்திய அரசோ, எண்ணெய் நிறுவனங்களோ இந்த கோரிக்கையை ஏற்க முன்வராத நிலையில், திங்கள்கிழமை முதல் காலவரையற்ற போராட்டத்தை லாரி உரிமையாளர்கள் தொடங்கியுள்ளனர். இதனால் தென் மண்டலத்தில் இப்போது ஓடிக் கொண்டிருக்கும் 4,200 டேங்கர் லாரிகள் முழுமையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 

இதுகுறித்து தென் மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கச் செயலர் கார்த்திக் கூறியது: மத்திய அரசு தரப்பிலோ, எண்ணெய் நிறுவனங்கள் தரப்பிலோ இதுவரை பேச்சுவார்த்தைக்கு அழைப்பு இல்லை. எங்களின் பிரதான கோரிக்கை கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேல் நடைமுறையில் உள்ள மண்டல அளவிலான டெண்டர் தொடர வேண்டும் என்பது தான். எண்ணெய் நிறுவனங்கள் இதற்கு சம்மதம் தெரிவிக்கும் வரை போராட்டம் தொடரும்.

தென் மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் போராட்டத்தைத் தொடர்ந்து, கிழக்கு மண்டலத்தைச் சேர்ந்த எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்களும் இதே கோரிக்கையை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். இந்த மண்டலத்தில் மேற்கு வங்கம், பிகார், ஒரிசா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்கள் உள்ளன என்றார். 

வேலைநிறுத்தப் போராட்டம் குறித்து எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கூறியது: மாநில அளவில் வாடகை டெண்டர் என்பது, மத்திய அரசின் கொள்கை முடிவு, அதன்படியே எண்ணெய் நிறுவனங்கள் புதிய டெண்டரை அறிவித்துள்ளன. தென் மண்டலத்தில் மொத்தம் 47 பாட்டிலிங் மையங்கள் உள்ளன. இதில் பெரும்பாலான பாட்டிலிங் மையங்களில் இன்னும் 5 முதல் 7 நாட்கள் வரை எரிவாயு இருப்பு உள்ளது. 

இங்கு சிலிண்டர்களில் எரிவாயு நிரப்பும் பணி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதனால் வேலைநிறுத்தம் நீடித்தாலும், இன்னும் ஒரு 10 நாட்கள் வரை சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை. மேலும், தமிழகத்தில் கோவைப் பகுதிக்கு பெரும்பாலும் சரக்கு ரயில் வேகன்கள் மூலமே எரிவாயு கொண்டு செல்லப்படுகிறது. 

இதனால் கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் வேலைநிறுத்தம் ஒரு மாத காலம் நீடித்தாலும், சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என்றனர்.

தமிழ்நாடு, புதுச்சேரி மாநில பாரத் பெட்ரோலியம் சமையல் எரிவாயு விநியோகிப்பாளர்கள் சங்கத் தலைவர் ஆர்.பாலசுப்ரமணியன் கூறியது: 

சமையல் எரிவாயு முகமைகளில் 2 நாள்களுக்கு தேவையான எரிவாயு உருளைகள் இருப்பு உள்ளன. சமையல் எரிவாயு உருளைகள் லோடு வருவதிலும் தடையில்லை. 

மேலும், சராசரியாக 25,000 இணைப்பு உள்ள முகமைக்கு தினமும் 1,000 முதல் 2,000 எரிவாயு உருளைகள் மட்டுமே தேவை இருக்கும். அதே சமயத்தில் வேலைநிறுத்தம் தொடந்து 5 நாள்களுக்கு மேல் நீடித்தால் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com