நான் அவ்வளவு பெரிய ரவுடி இல்லை: சரணடைந்த பினுவின் 'வடிவேல் டயலாக்'!

நீங்கள் நினைப்பது மாதிரி நான் அவ்வளவு பெரிய ரவுடி ஒன்றும் இல்லை என்று காவல்துறையினரிடம்  சரணடைந்த பினு தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளான்.
நான் அவ்வளவு பெரிய ரவுடி இல்லை: சரணடைந்த பினுவின் 'வடிவேல் டயலாக்'!

சென்னை: நீங்கள் நினைப்பது மாதிரி நான் அவ்வளவு பெரிய ரவுடி ஒன்றும் இல்லை என்று காவல்துறையினரிடம்  சரணடைந்த பினு தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளான்.

பிப்ரவரி 6ம் தேதி சென்னையை அடுத்த மலையம்பாக்கத்தில் நள்ளிரவில் நடத்தப்பட்ட ரவுடி பினு பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது, அதிரடியாக காவல்துறையினர் சுற்றி வளைத்து, அதில் பங்குபெற்ற 76 ரவுடிகளை கைது செய்தனர். இந்தநிலையில், தப்பியோடி தலைமறைவான பினுவை தனிப்படை அமைத்து காவல்துறையினர் தேடி வந்தனர்.

இந்நிலையில் போலீசாரால் தேடப்பட்டு வந்த ரவுடி பினு, அம்பத்தூர் காவல்துறை துணை ஆணையர் சர்வேஷ் ராஜ் முன்னிலையில் செவ்வாயன்று காலை சரண் அடைந்தார். துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்க உத்தரவிடப்பட்டதால் உயிருக்கு பயந்து காவல்துறையில் பினு சரணடைந்ததாகக் கூறப்படுகிறது. சரணடைந்த பினுவிடம், தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைது செய்யப்பட்டுள்ள ரவுடி பினு மீது, கொலை, ஆள்கடத்தல் உள்ளிட்ட 15 வழக்குகள் உள்ளன. பூந்தமல்லி, வடபழனி, விருகம்பாக்கம் காவல்நிலையங்களில் பினு மீது ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது ரவுடி பினு காவல்துறையினரிடம் அளித்துள்ள விடியோ வாக்குமூலம் வெளியாகியுள்ளது. அதில் அவர் தெரிவித்துள்ளதாவது:

எனது பெயர் பினு. நான் பிறந்தது வளைந்தது எல்லாமே சென்னை சூளைமேட்டில்தான். எனக்கு ஐம்பது வயதாகிறது. எனக்கு சர்க்கரை நோய் உள்ளது.

நான் நிறைய ரவுடித்தனங்களில் ஈடுபட்டு வந்தேன். நிறைய முறை சிறைவாசம் அனுபத்திருக்கிறேன். பின்னர் திருந்தி வாழ ஆசைப்பட்டு மூன்றுவருடங்களாக தலைமறைவாக இருந்தேன். எனது தம்பிக்கு மட்டுமே நான் மறைந்திருந்த இடம் தெரியும். அவன்தான் என்னை 50-ஆவது பிறந்தநாள் கொண்டாடத்திற்கு அழைத்தான். அதனால்தான் இங்கு வந்தேன்.  

ஆனால் அங்கு போலீஸ் சுற்றி வளைத்து விட்டதால் ஒடித் தப்பித்து விட்டேன். நீங்கள் நினைப்பது மாதிரி நான் அவ்வளவு பெரிய ரவுடி ஒன்றும் இல்லை. என்னை மன்னித்து வாழ விட்டு விடுங்கள்.

இவ்வாறு பினு தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com